என் அடையாளம்
குறித்த கேள்விகள்
கிளம்புகின்றன
பூதாகாரமாய்…
அப்பனுக்கும்
அம்மைக்கும்
ஆயிற்று
உயிரும் உடலும்.
எனது
புன்னகைகையை
காலம் கொண்டேகிற்று.
என்னிடம் எனக்கென்று
ஏதுமில்லை.
உனது
முத்தங்களையும்
நினைவுகளையும் கூட
நீயே
சொந்தங் கொண்டாடுகிறாய்.
யாரோடும் பகிர முடியாது போன
புன்னகையும்
முத்தங்களும்
துயரங்களும்
என்னுடையவைதானென்று
யாருக்குத்தெரியும்?
என் வார்த்தைகளின்
அர்த்தம் கூட
எனதாயில்லை.
மறுக்கமுடியாத்துயருள்
மூழ்கிய
எனது கவிதைகள்
என்னின்று அகன்றன.
இப்போது
எனக்குள்
கேள்விகளை நிரப்புகிறது
தனிமை.
புன்னகைக்கும்
வேதனைக்கும்
இடையிலான தூரங்கள்
நீண்டபடியிருக்கின்றன….
ஆங்காங்கே
விரிந்தபடியிருக்கும்
காலத்தின் கண்ணிகளில்..
வீழ்ந்தபடியிருக்கும்
எனது பாதங்கள்….
ஏதேனும் ஒருபொழுதில்
முளைக்கும்
அழத்தோன்றாவொரு
மனக்காந்தல்
உனது
முத்தங்களிற்காய் ஏங்கும்.
ஒரு பொழுதின்
துயருள் தோன்றி
எழுதவியலாது போன
கவிதை வெறுமையை
நிரப்புகிறது மனசுள்.
நினைவறையின் மடிப்புகளினின்றும்
பறப்படுகின்றன
இன்னும்
பகிரப்படாத்துயரங்கள்
அழுவதற்கான
வெட்கங்கள் ஏதுமற்று…
இரண்டு வருடங்களிற்கு முன்பு ஒரு தூக்கமற்ற இரவில்…
ரொம்ப அழகா இருக்கு உங்களுடைய எழுத்தும் நடையும். ஆனா ஏன் ஒவ்வொரு எழுத்துக்குப் பின்னாடியும் ஒரு பெரிய யுகமே ஒளிஞ்சுகிட்டு இருக்கு.
உங்களுடைய எழுத்தினால் நட்பாக விரும்புகிறேன்.
ஆஹா நட்சத்திரம் நட்பாவது என்பது இதுதானா?
//ஏதேனும் ஒருபொழுதில்
முளைக்கும்
அழத்தோன்றாவொரு
மனக்காந்தல்
உனது
முத்தங்களிற்காய் ஏங்கும்.//
ரசித்தேன் !:)))
தூக்கமற்ற இரவில் எழுதிய கவிதை தூக்கத்தை திருடுகின்றன அகிலன் :)))