தேவகாந்தனின் மொழி அதிகமும் அழகான உரையாடல் தருணங்களால் நிரப்பப் படாதது. ஆனால் கனதியான கதைத் தருணங்களால் வாழ்வையெழுதும் சொற்கள் அவருடையவை. ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் தேவகாந்தன் ஒரு முதிர்ந்த யானையைப் போல இருக்கிறார். மெதுவான நடை ஆனால் தேங்காத பயணம், எல்லாத்திசைகளிலும் வழியறிந்த யானை. தமிழ்ச்சமூகம் அவரைக்கொண்டாடியது போதாது என்று அவரைப் படிக்கும்தோறும் தோன்றிக்கொண்டேயிருக்கச் செய்பவை தேவகாந்தனின் சொற்கள். நான் முன்பொருமுறை சொன்னதைப்போல அரசியல் சதிர்களுக்கப்பால், போர்க்களத்தின் முன்பும் பின்புமான தமிழ்நிலத்தின் வாழ்வை அவருடைய சொற்கள் தீண்டியிருக்கின்றன. ஓயாமல் தமிழ் நிலத்தின் வாழ்வைப் பாடும் பாணன் அவர். இங்கே எழுதப்பட்டிருக்கும் இயக்கச் சண்டைகள், கட்சிச் சண்டைகள், சேறடிப்புக்களைத் தாண்டி தமிழ் வாழ்வையறிய எதிர்காலத்தின் வரலாற்றைக் கற்பவர் தேவகாந்தனைத்தான் படிக்கவேண்டும்.
தாங்கள் தவறவிட்ட தருணத்தை, மனிதர்களை, இளைமையை, ஆசையை மறுபடியும் சந்திக்கும் மனிதர்களின் கதைகள் இவை என நான் எண்ணகிறேன். அத்தருணங்கள் சிலருக்கு அதுவாய் அமைகிறது, சிலர் அமைத்துக் கொள்கிறார்கள். அத்திரும்பிச் செல்லுதல் சில விடுகதைப் புதிர்களை அவிழ்க்கிறது, சில முடிச்சுக்களைப் போடுகிறது, ஓர் ஆறுதலை அல்லது வெறுமையை கதைமாந்தருக்கும் வாசகனுக்கும் அழிக்கிறது. இந்தத்தொகுப்பை படித்து முடிக்கையில் எனக்கு உடனடியாக வந்த மனப்பதிவு இதுதான். இத்தொகுப்பின் பொதுத் தன்மையாய் நான் கண்டடைந்திருப்பதும் அதுவே.
உண்மையில் நாம் கடந்தகாலம் குறித்த ஏக்கங்களுடனேயே வாழ்கிறோம். தவற விடப்பட்ட தருணமொன்றை தவிப்புடன் அசைபோடும் விலங்குதான் மனிதன் எனும் மனப்பதிவு எனக்குண்டு. அதுவும் புலம்பெயரிகளிடம் அது இன்னும் பெருப்பிக்கப்பட்டு நிலம்,வாழ்வு,மொழி,உறவுகள் எனப்பல்வேறு காரணிகளைக் காட்டி அவ்வேக்கமானது காவியத் தன்மைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் நாம் ஏங்குவதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் அல்லது நம்பிக்கொண்டிருக்கும் எதுவும் அதே அர்த்த்துடனும் ஆழத்துடனும் இயல்பு வாழ்வில் அணுகப்படக் கூடியவையா? என்பதில் எனக்குக் கேள்விகள் உண்டு. நினைவேக்கத்தைச் சந்தைப்படுத்த வேண்டுமானால் முடியலாம். உதாரணத்திற்கு தமிழ்க் கடையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் வாழைக்குலையிருந்து நாம் வெட்டித் தரச்சொல்லிக் கேட்பது எதை. வாழைப்பழச் சீப்பையா? நாம் பிரிந்து வந்த நிலம்பற்றிய ஏக்கத்தின் ஒர் பகுதியையா? ஆக உண்மையில் அங்கே அதிக விலைக்கு விற்கப்படுவது நம் நிலம்பற்றிய நினைவுகள்தான். நாங்கள் சப்புக்கொட்டியபடி பின்கரியரில் சந்தைக்குக் கொண்டுபோன இடைப்பழம் பழுத்த வாழைக்குலையை நினைத்தபடி அந்த வாழ்க்கைக்ஏங்குவதாக பாசாங்கு பண்ணுகிறோம். ஆனால் நீண்டகாலம் கழித்துச் திரும்பிச்செல்லுகையில் நாம் எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த நிலம் நம்மிலிருந்து விலகி நீண்டதூரம் சென்றிருப்பதை நம்மில் அநேகர் உணர்ந்திருப்போம். நாமே ஊரில் வெக்கை கூடிவிட்டதென்று கொம்பிளெயின் பண்ணியபடி திரும்பவும் புலம்பெயர் நாட்டிற்கே வந்துவிடுவோம். அப்படித் தாம் தவறவிட்ட தருணமொன்றைத் திரும்பத் தரிசிக்கும் சாத்தியம் வாய்க்கப்பெற்ற தேவகாந்தனின் கதை மாந்தர்கள். வாசகனுக்கு புதிய அனுபவங்களைத் திறக்கிறார்கள்.
நான் இணையம் அறிமுகமான புதிதிலிருந்து என்னுடைய பால்யகால நண்பனொருவனைத் தேடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பென்னாம் பெரிய இலுப்பைமரத்திற்குக் கீழே ரீச்சருக்கு மட்டுமே மேசையும் கதிரையுமிருந்த திறந்தவெளி வகுப்பறையில் பள்ளிக்கூடத்தின் முதல்நாள் முருகுப்பிள்ளைச் ரீச்சரின் கண்டிப்பான முகத்தினாலும், விஜி ரீச்சரின் கனிவான முகத்தினாலும் கூடக் கட்டுப்படுத்திவிட முடியாதபடிக்கு அழுதுகொண்டிருந்த அறுபத்துச் சொச்சம் குழந்தைகளில் எங்கள் இருவரினது கண்களும் இருந்தன. அந்த அழுகையினூடு ஆரம்பமான நட்பு அது. பின்பொரு இடப்பெயர்வினால் பிரிந்தது. பிறகு அவன் வெளிநாடு போனான் எனக்கேள்விப்பட்டேன். ஆனாலும் மனம் அந்த நண்பனுக்காக ஏங்கிக் கொண்டிருந்தது.
நீரவழித்தடத்திலிருந்தும் நிரம்பாத பள்ளம்போன்று அந்த ஏக்கம் என்னோடு வாழ்ந்து வந்தது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கழித்து நான் கனடா வந்த புதிதில் Facebook ல் அவனுடைய பெயரைக் கண்டுபிடித்தேன். பெயர் மட்டும் தானா ஆளும் அவன்தானா என்றறிய நான் அவனுக்கொரு மெசெச் அனுப்பிவைத்தேன். பதில் வந்த தருணம் நினைவிருக்கிறது. அப்படியொரு ஆசுவாசமிருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்ததாகச் சொன்னான். இருவரும் கொண்டாட்டத்துடன் ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டோம். சில பழைய நினைவுகள்,பட்டப்பெயர்கள், பால்யத்தின் காதலிகள், தோழர்களின் பெயர்கள் மீட்டப்பட்டன அவ்வளவுதான் அதற்குமேல் பேச ஒன்றுமில்லை வெறுமை. எனக்கு ஆச்சரியமாயிருந்தது இருபது வருடங்களாக இவனைத் தேடியிருக்கிறேன் ஆனால் ஏனிந்த வெறுமையென்று. காரணம் இன்றுவரைக்கும் சரியாகப் பிடிபடாத ஒன்றுதான். நீண்ட பிரிவு, வெவ்வேறு திசைவழியில் நிகழ்ந்த பயணங்கள், புதிய தோழமைகள் இப்படி ஏதாவதொன்று காரணமாயிருக்கலாம். ஆனாலும் நான் அவனைச் சந்தித்திராவிட்டால் இப்போது வரைக்கும் நான் அவனைத் தேடிக்கொண்டிருந்திருப்பேன் என்பதை மட்டும் இதோ இந்தக்கணம் வரை நான் உறுதியாக நம்புகிறேன்.
நாங்கள் கடந்த காலத்தில் தொலைத்த ஏதோ ஒன்றுக்காக ஏங்கிக்கொண்டேயிருக்கிறோம் ஆனால் அதனை நிகழ்காலத்தில் சந்திக்கும் போதுதான் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் அப்படியே தொடங்கமுடியாதென்கிற பேருண்மை உறைக்கிறது. இப்போது எனக்கிருக்கும் 5000 பேஸ்புக் நண்பர்களில் அவனொருவன் அவ்வளவுதான். என்னால் நீர்வழித்தடத்தின் பள்ளத்தை நிரப்பமுடியவில்லை. அல்லது என் மனம் விரும்பியவகையில் அது நிரம்பவில்லை. நான் ஒருபோதும் விட்ட இடத்திலிருந்து தொடங்கமுடியாது என்பதை வாழ்க்கை எனக்குச் சொல்லித்தந்த அனுபவம் அது. ஆனால் அத்தருணத்தை, திரும்பிச் சென்று தொடும்கணம்வரை நம்முடைய மனம் விட்ட இடத்திலிருந்து தொடங்கிவிடலாம். என்றுதான் நம்ப விரும்புகிறது, அந்த நம்பிக்கையின் விசையினால்தான் நம் வாழ்வு செலுத்தவும் படுகிறது.
தேவகாந்தனின் இக்கதைகள் ஒரு பூடகமான மொழியாழுகையைக் கொண்டிருக்கிறது. வாசகன் இட்டுநிரப்புவற்கும் ஊகித்தறிவதற்குமான இடைவெளிகளும், தருணங்களும் இக்கதைகள் நெடுகிலும் உண்டு. சிலகதைகளில் கதையின் முன்பான தருணங்களை வாசிப்பவன் இட்டு நிரப்பவேண்டியிருக்கிறது, சில கதைகளில் பின் பான தருணங்களை வாசிப்பவன் நிரப்பவேண்டியிருக்கிறது. ஒரு வகையில் வாசகனே பிரதியை முழுமையுறச் செய்கிறான் என்பதால் அது அலாதியானதொரு வாசிப்பனுபவமான மாறுகிறது. உண்மையில் கதைகள் அதற்காகவும் தானே சொல்லப்படுகின்றன. கதைகளில் என்னைப்போலொருவனைப் பார்க்கும்போதும், எனக்கு நிகழ்ந்தது இன்னொருவருக்கு நிகழும் போது நாம் அப்பிரதியை மேலும் நெருங்கிச் செல்கிறோம். நம்முடைய வாழ்வின் ஏக்கமாய், ஆசையாய், துக்கமாய், மகிழ்வாய் இருந்த ஏதோ ஒன்றை பிரதியில் காணும்போது அது நமக்கின்னும் அணுக்கமாய் மாறுகிறது.
இச்சிறுகதைகளின் பூடகமான மொழி தேவகாந்தனின் சிவகாமியும்,சிதம்பரனும் என்னுடைய சிவகாமியும் சிதம்பரனுமாயிருக்கத்தேவையில்லை என்கிற சாத்தியத்தை ஏற்படுத்துகிறது. அச்சாத்தியம் இக்கதைகளை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது. அந் நகர்வை தன்னுடைய இக்கதை சொல்லல் உத்தியால் தேவகாந்தன் சாத்தியப் படுத்துகிறார். வாசிப்பவர் தன் வாழ்வனுபவம் கொண்டும், வார்த்தைகள் கொண்டும் கதைகளைத் தன்னுடையதாக்கும் சாத்தியம் கொண்ட படைப்புத்தி அது. ஆனால் அதுவே முழுமையின்மை உணர்வையும் நமக்களிக்கிறது என்பதையும் இங்கே நான் சொல்லிக்கடந்தாகவேண்டியிருக்கிறது.
இத்தொகுப்பின் பொதுத் தன்மையாய் நான் உணர்ந்த கடந்து வந்த தருணங்களை மீளத்தரிசித்தல் என்கிற தன்மைக்குள் வராத மூன்று கதைகள் இத்தொகுப்பில் உண்டு, தரிசனம், நாகமணி, மற்றும் விளாத்தி நிலம். வெம்மை நிலத்தின் அனலைத் தன்னகத்தே கொண்டிருக்கும் கதைகள் என்று என்னளவில் கருதுகிறேன்.
மனிதர்கள் தங்களைப் புதிய நிலத்தில் பதியனிடுகிற தொடக்கத்தை, காடுவெட்டி மூலையில் இருக்கும் வேப்பமரத்தின் கீழ் ஒரு நாகதம்பிரானை, அம்மனை உருவாக்கி அவர்களைத் தம் காவலுக்கு நிறுத்தும் வெக்கை நில மனிதர்களின் நம்பிக்கையைப் பேசுகிறது தரிசனம் என்கிற கதை. நாகத்தின் தரிசனத்திற்குக் காத்திருக்கும் இக்கதையில் ‘சொற்கள் சுருண்டு சுருண்டு காற்றிலேறி கோயிற்சூழலெங்கும் அலைந்து திரிந்தன’ என எழுதுவது தேவகாந்தனின் மொழி நர்த்தனம் அன்றி வேறென்ன. வழி தவறும் வாய்ப்புகளையும், ஆசையையும் கடந்து ஒருவன் தன் சுயத்தை கண்டடையும் ஒர் தருணத்தை எழுதிச் செல்கிறது நாகமணி என்கிற கதை. வெக்கை நிலத்தின் தனித்த பெண்களின் ஒர் உதாரணம் வண்ணக்கிளி, அவளது ஓர்மமும், ஆசையும், நீதியுணர்வும், கோபமும் நம் அம்மாக்களிடம், அம்மம்மாக்களிடம் இன்னுமின்னும் வெம்மை நிலப்பெண்களின் ஆக்ரோசமான அன்றாடங்களின் உள்ளுறைவு. வண்ணக்கிளிகள் கோவலன்கள் வீடுதிரும்புகையில் மாணிக்கப் பரல்கள் கொண்ட சிலம்புகளைப் பரிசளிக்கிறவர்கள் அல்ல, அவர்கள் தம் விடுதலையைத் தமக்கே பரிசாக்கிக் கொள்ளுமளவு ஓர்மத்தையும், கோபத்தையும் தகிக்கும் நிலம் அவர்களுக்கு வழங்குகிறது. அதனால்தான் அவர்கள் விளாத்திநிலங்களின் காவல் தெய்வங்களாகிறார்கள்.
சகுனியின் சிரம் என்பதும் ஒரு வகையில் திரும்பிச்செல்லும் தருணங்கள் பற்றிய கதைதான், குருசேத்திரத்தில் நின்றுகொண்டு அங்கதத்தில் காந்தாரி மணப்பெண்ணாக அஸ்தினாபுரம் புறப்படும் காலத்திற்கும், ஆசைகளின் அரசனான சகுனி தன் பகடைகளின் பேராசைப் பசிக்கு அக்காளின் மகிழ்ச்சியை இரையாக்கினானா? எனும் கேள்வியை கிருஸ்ணனின் கண்கள் கொண்டு பார்க்கிறது. பாரதத்தில் எல்லாப் பேராசைகளையும் அற மீறல்களையும் சகுனியின் சிரத்தின் மீது எழுதப்பட்டு விட்டதான ஒரு வாசிப்பின் சாத்தியத்தை அது அளிக்கிறது. ஆனால் என் பார்வையில் லங்காபுரம் எழுதியவரிடமிருந்து சகுனியின் சிரம் என்கிற தலைப்பில் கதை வரும்போது அது அப்பிரதிக்கு வேறோரு நிறத்தையும், எதிர்பார்ப்பையும் வாசகனுக்கு அளிக்கிறது. எனக்கு அளித்தது. அக்கதைக்குள் சமகாலத்தை இணைக்கும் புள்ளிகளும் பிரதியிடல்களும் எவை எவை என வாசகமனம் அவாவுவதை தடுக்கமுடியவில்லை. அப்படியெதுவும் இல்லையென்பதும். பாரதத்தின் சகுனியை வேறோரு கண்கொண்டு எழுதிப்பார்க்கும் முயற்சிதான் இப்பிரதி எனத் தெரிகையில் ஒரு விலக்கம் இருக்கத்தான் செய்கிறது. வேறொருவரின் வாசிப்பில் அது அணுக்கத்தைக் கொடுக்கவும் கூடும் வாசிப்பவருடையதும்தானே சொற்கள்.
மனிதனின் வாழ்வைச் செலுத்தும் மிகப்பெரிய விசை என்ன? பிழைத்திருத்தலா? எதிர்காலம் குறித்த அச்சமா? ஆசையா? ஆசைதான் என்பது என் கட்சி. நாம் திரும்பிச்செல்லவிரும்புகிற வாழ்வின் தருணமென்பது என்ன? நிறைவேறாமலிருக்கும் ஆசைதான் அல்லவா? அடையமுடியாலிருக்கும்போதான கனமும் அடைந்தபிறகான வெறுமைக்குமிடையில் உழல்வதுதானே வாழ்வினோட்டம். தேவகாந்தன் இக்கதைகளில் எழுதிப் பார்த்திருப்பது அதைத்தான். உங்களிடம் வாழ்வின் ஒரு தருணத்திற்குப் பின்னோக்கிச் செல்லும் ஆழியொன்றைச் சொற்களின் வழியாக அவர் தருகிறார். புழுக்கம் நிறைந்த இரவில் கூரையில் கொட்டும் மழையாலும் கரைக்கமுடியாக கடந்தகாலத்தின் நினைவுகளைத் திறந்துகொண்டு வெளியேறும் மனவுறுதி நம்மிடம் உண்டாவென நம்மையே கேட்கிறார். தேங்குவதும், திறப்பதும், வெளியேறுவதும் வாசகனின் பாடு.