பயணம் என்பது ஒரு வகையில் விடுதலைதான். பயணம் நாம்
அடைபட்டிருக்கும் அழகான கூண்டின் வாயிலைத் திறந்து
வைத்துவிட்டு நாம் வெளியேறுவதற்காக காத்திருக்கிறது. நாம்
அன்றாடம் பழகும் சூழலும் மனிதர்களும் நம்மை ஏதோ ஒரு
வகையில் கட்டுப்படுத்துகிறார்கள். உண்மையில் நம் நெருக்கமான
சுற்றத்திடம் நாம் அதிகம் உள்ளொடுங்கியும், தெரியாத சூழலில், புதிய
நிலத்தில் நம்மை அதிகம் திறந்துகொள்ளவும் தயாராயிருக்கிறோம்.
பயணம் மட்டுமே பிரதிபலன் எதிர்பாராத அறிமுகமற்ற மனிதர்களின்
பேரன்பை நாம் தரிசிக்கக் காரணமாயிருக்கிறது. எல்லைகளின்
விரிவென்பது நமக்களிக்கும் கிளர்ச்சியும், தீர்ந்துவிடாமல் நம் முன்னே
நீண்டு செல்லும் பாதைகள் நமக்களிக்கும் மகிழ்வும், அதனுள்
பொதிந்திருக்கும் சாகசவுணர்வும்தான் பயணம் பற்றிய உயர்வு
நவில்தல்களின் பிரதான காரணியாக இருக்கிறது. ஆனால் பயணத்தை
தொழிலாகக் கொள்வது இவற்றினின்றும் வேறுபட்டது.
சேருமிடங்களை உறுதியாக அறிந்த திரும்புதலின் நிச்சயத்தோடு
நிகழ்த்தப்படும் பயணங்களுக்கும் திரும்புதலில் நிச்சயமின்மையோடு
நிகழும் பயணங்களுக்குமான வேறுபாடு அளப்பரியது. முன்னையதில்
பெருமகிழ்வும் குறைந்த அனுபவங்களும் பின்னயதில் நிறைந்த
அனுபவங்களும் குறைந்த மகிழ்வும் சொல்லப்போனால்
அலைக்கழிப்பும் மிகுந்திருக்கும்.
நான் கடந்து வந்த பயணநூல்களில் அதிகமானவை வாசிப்பதற்குச்
சலிப்பேற்படுத்துவன. அதில் பெரும்பாலானாவை பயணவழிகளில்
எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிக்குறிப்புக்களைச் சற்றே விரித்து
எழுதப்பட்டவை. பயணத்தின் நெகிழ்ச்சியினையும், அது தரும்
அனுபவத்தின் நீட்சியினையும் தம் சொற்களின் வழி
கடத்தத்தவறுபவை. தமிழில் என் வாசிப்பெல்லைக்குள் நான்
அதிகமும் ஆச்சரியத்துடன் நேசிக்கும் இரண்டு பயணநூல்கள்
எஸ்.ராமகிருஸ்ணனின் தேசாந்திரியும்,நரசய்யாவின் கடலோடியும்.
வாசிப்பும் ஒரு வகையில் பயணம் தானே ஒரு புத்தகம் உண்மையில்
நம்மை இன்னொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்கிறது. அப்படித்தான்
எஸ்.ராவின் தேசாந்திரி எனக்கு கடலோடியை அறிமுகம் செய்தது.
தேசாந்திரியில், கடலோடியைப் படித்த பின்னர் தான்
லோனாவாலாவுக்குப் போனதைக்குறித்து எஸ்.ரா எழுதியிருப்பார்.
எனக்கும் லோனாவாலாவுக்குப் போகத்தான் ஆசை ஆனால்
கடலோடியைத் தேடி வாசிக்கத்தான் முடிந்தது. கலாபனின் கதையும்
நரசய்யாவின் கடலோடியைப் போலவே பயணத்தைத் தொழிலாகக்
கொண்டவரால் எழுதப்பட்டது. படைப்பாளியின் அனுபவமுழுமையும்
மொழியின் ஆளுமையும் கலந்துறையும் சொற்களே வாசகமனத்தில்
நிரந்தரமான இடத்தை அடைகின்றன.
தேவகாந்தனின் சொற்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை.
ஆனால் இதமானவை அல்ல. அவரது எழுத்துக்கள்
காட்சிப்படுத்தியிருக்கிற வாழ்வின் சித்திரங்கள் மிகவிரிவும் கனதியும்
மிக்கவை. ஈழம் சார்ந்து தமிழில் அதிகம் பேசப்படும் அல்லது
பேசப்பட்ட நாவல்கள் அதிகமும் முப்பத்துச் சொச்சம்
இயக்கங்களினதும் அரசியல் செயற்பாடுகளைப் பின்புலமாகக்
கொண்டே எழுதப்பட்டிருக்கின்றன. சாதாரண மனிதரின்
வாழ்வென்பதைத் தொட்டுக்கொண்டு இயக்கங்களைப் பற்றி அல்லது
தத்தம் அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்து எழுதப்பட்ட அரசியல்ப்
பிரதிகள் அவை. ஆனால் தேவகாந்தனின் பிரதிகளோ அல்லலுறும்
சராசரிகளின்; வாழ்வைச் சுமந்து செல்பவை. எதிர்கால வரலாற்று
மாணவர் ஒருவர் ஈழப்போரின் காலக்கோட்டை அறிந்து கொள்ளும்
நோக்கிலும் எளியமனிதனின் வாழ்வில் அது ஏற்படுத்திய
மாற்றங்களை அறிந்து கொள்ளும் நோக்கிலும் அமைந்த ஓர்
இலக்கியப்பிரதியைத் தேடும்போது சமகாலத்தின் சர்ச்சைகளினால்
அதிகம் முன்னிறுத்தப்பட்ட நாவல்களைக் கடந்து தேவகாந்தனின்
நாவல் பிரதிகளே அதிகம் பயனுள்ளவையாய் இருக்கும். வரலாற்று
மாணவர்கள் போர் கொய்தும் குலைத்தும் போட்டசாதாரணக்
குடும்பங்களினது சிதைவின் காலக்கோட்டை தெளிவாக அவரது
எழுத்துக்களில் கண்டுணர்வர்.
ஆனால் கலாபன் கதை இதனின்றெல்லாம் விலகி தன் குடும்பத்தின்
ஈடேற்றத்திற்காய் தன்னை ஆகுதியாக்குகின்ற,
திரைகடலோடித்தன்னும் திரவியம் தேடித் தன் குடும்பத்தினை
நிமிர்த்த முனைகிற ஒருவனின் கதை. வெளிப்படையாக
ஒத்துக்கொள்ளாவிட்டாலும் நம்மில் பெரும்பான்மையினருக்கு
மேலைநாடுகளுக்கான புலப்பெயர்வின் அடிப்படைக் காரணம் திரவியம்
தேடலே. கௌரவப் பொய்கள் சொல்லுவதில் வல்லவர்களான நாங்கள்
போரை முன்னிறுத்தி அதனை மூடிமறைத்துக்கொண்டோம்.
உண்மையில் ஏஜென்சிக்கு காசைக் கட்டி வெளிநாட்டுக்கு வருவதற்கு,
நமக்கிருக்கும் கனவுகள் மற்றும் பொறுப்புக்களே முதன்மைக் காரணம்.
அது உடன்பிறந்தவர்களின் வளர்ச்சியாகவோ, ஊரில் ஒரு வீடாகவோ,
அல்லது படலை வரை வந்து அவமானப் படுத்தும் கடனாகவோ
எதுவாகவோ இருக்கலாம். முதல் தலைமுறையில்
புலம்பெயர்ந்தவர்கள் இக்கூற்றை அதிக நெருக்கமாக உணர்வார்கள்
என்று நான் நம்புகிறேன். அதற்காக புலப்பெயர்வின் பின்னால்
இருக்கும் அரசியல் காரணங்களை நான் முழுவதுமாக
நிராகரிக்கவில்லை அநேகருக்கு அது உயிர்பிழைப்பதற்காக ஒரே
வழியாகவும் இருந்ததுதான்.
ஆனாலும் நான் இந்தியாவில் இருந்தபோது என்னைக் குடைந்து
கொண்டிருந்த ஒரு கேள்வி எனக்கு நினைவுக்கு வருகிறது. அகதி
என்ற சொல்லுக்குள் எத்தனை ஏற்றத்தாழ்வுகள். இலங்கையில்
இருந்து வெளியேறி தமிழகத்தின் அகதி முகாம்களுக்குள்
இருப்பவர்களும், வெளிப்பதிவில் ஒரு சிறிய வாடகை வீட்டில்
இருப்பவர்களும், நீலாங்கரையின் கடல்பார்த்த வீட்டிலோ அல்லது
அண்ணாநகரின் சொகுசு அடுக்குமாடிகளிலோ வசிப்பவர்களும்,
ஏஜென்சிக்கு ஆயிரக்கணக்கான டொலர்களைக் கட்டி மேலை
நாடுகளில் புலம்பெயர்ந்து வசிப்பவர்களும் எப்படி அகதி என்ற ஒரே
சொல் அளவீட்டில் அளக்கப்பட முடியும். இத்தனை வேறுபாடுகளுக்கும்
பின்னால் உயிர்பிழைத்திருத்தல் என்ற ஒற்றைக்காரணம் மட்டும்தான்
உள்ளதா? எனக்கென்னவோ திரவியம் தேடுதல் என்கிற காரணம்
உள்ளுறைந்தேயிருக்கிறது என்றுதான் இற்றைவரைக்கும்
தோன்றுகிறது.
மேற்குலக நாடுகளில் தஞ்சமடையும் முன்னதாக நம்முன் திரவியம்
தேடும் வாய்ப்புகளாக இருந்தவை வளைகுடா நாடுகளில் வேலை
செய்வதும் ,அதிகபணமீட்டும் வேறு வேலைகளைக் கண்டடைவதும்.
அப்படியான அதிகச் சம்பளம் கிடைக்கக் கூடிய ஒரு வேலைதான்
கப்பலில் வேலை செய்வது. 90 களின் இறுதி வரைக்குமே கூட
ஊருக்கொரு கப்பல்காரர் வீடும், கப்பல் காரரும் இருந்திருப்பார்கள்.
இப்போது கப்பல்க்கார வீடுகள் மட்டும் இருக்கும் கப்பல்காரர்
கனடாக்காரராகவோ, லண்டர் காரராகவோ பரிணாம வளர்ச்சி
அடைந்திருப்பர். கலாபன் கதையைப் படிக்கத் தொடங்க எங்கள்
வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளியிருந்த கப்பல்காரர் வீடும்,கப்பல்
காரரும் எனக்கு நினைவிலெழுந்தனர். மேவியிழுக்கப்பட்டு
கழுத்துவரை நீண்ட தலைமுடியுடன் உச்சிவெயில் மண்டையைப்
பிளக்கும் போதும் டெனிம்ஜீன்சும் சப்பாத்துமாய்
விலாசமெழுப்பித்திரியும் அவரைத்தான் நான் கலாபனாக
வாசித்துக்கொண்டிருந்தேன். உங்களில் பலருக்கும் கூட ஒரு கப்பல்
காரரைத் தெரிந்திருக்கக் கூடும். ஆனால் என்னுடைய
அம்மம்மாவுக்கோ அந்த வீடு கப்பல்காரர் வீடாக மாறுவதற்கு
முன்பாகயிருந்த பொயிலைக்காராச்சியின் வீடாகத்தான் சாகும்
வரைக்கும் இருந்தது. ஆக எங்கள் வீட்டுக்கு முன்னாலிருந்த
கலாபனின் கதைச்சுருக்கமென்பது பொயிலைக்காராச்சியின்
வீடாயிருந்ததை கப்பல் காரர் வீடாகத் தரமுயர்த்தியதே.
தேவகாந்தனின் கலாபன் செய்ததும் அதுதான். ஒரு வீட்டைக்
கட்டிவிடுவதற்காகவும் சமூகத்தில் தன் குடும்பத்தின் அந்தஸ்தை
சற்றே உயர்த்திவிடுவதற்காகவும் அவன் கடலோடியானான் பயணம்
அவனது தொழிலாகிறது. அப்பயணம் அவனுக்குள் விளைவித்ததென்ன.
அவன் மீறிய கட்டுப்பாடுகள் என்ன? அதற்காய் அவன் கொடுத்த
விலையென்ன அதைத்தான் ஒவ்வொரு அத்தியாயத்திலும்
தேவகாந்தன் எழுதிச் செல்கிறார்.
நிலவும் நட்சத்திரங்களுமற்ற வானைப் பார்த்தபடி கலாபனின்
முதற்பயணம் ஆரம்பிக்கிறது. கப்பல் பல்வேறு நாடுகளின்
துறைமுகம் தோறும் போகிறது. போகும் வழியெங்கும் மது
துறைமுகம் தோறும் பெண்கள் கலாபன் ஒரு சல்லாபனாக
இருக்கிறான். ஆணின் காமம் இந்நாவலில் விரிவாகப் பேசப்படுகிறது.
உண்மையில் கலாபனின் கப்பல் பயணங்கள் துறைமுகங்களுக்குப்
போகின்றனவா அல்லது அக்கரையில் இருக்கும் பெண்களிடம்
போகின்றனவா என்கிற சந்தேகமே வாசகருக்கு வராத வண்ணம்
அவை பெண்களிடமே போய்ச் சேருகின்றன. அதற்குச் சில நேரங்களில்
தசைப்பசி, சில நேரங்களில் மனைவியிடம் மனதால் அவன்
பிணங்கியிருப்பது என வெவ்வேறு காரணங்கள். துறைமுகம் தோறும்
அவன் சேரும் பெண்கள் உடலை மீறிய பிணைப்பினைக் கலாபனோடு
ஏற்படுத்தவிரும்புகிறவர்களாயும் கலாபன் அவற்றை
நிராகரிப்பவனாயும் இருக்கிறான். ஆனால் அவனது ஆழ்மனம்
அவ்வுறவை விரும்பத்தான் செய்கிறது. என்னதான் குடும்பத்துக்காய்
சமுத்திரத்தில் துரும்பெனவலைந்து கொண்டிருந்தாலும் அவனது
மனைவி அவனுடைய தியாகத்திற்கும் உழைப்பிற்கும் உரிய
மரியாதையை தரத்தவறுவதாயே கலாபனின் மனம் விசனப்படுகிறது.
தான் குடும்பத்தோடு செலவிடாதிருக்கும் நேரத்தின் மதிப்பை விஞ்சி
நிற்கும் கட்டப்படும் வீட்டின் மதிப்பு கலாபனை உறுத்துகிறது. நீங்கள்
எங்களோடே இருந்துவிடுங்கள் கப்பலுக்கு ஏன் போகிறீர்கள் என
மனைவி கேட்கவேண்டும் என அவன் நினைக்கிறான் அவளோ வீடு
கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது ஏன் கப்பலுக்குப் போகாமல்
இருக்கிறீர்கள் எனக் குற்றம் சுமத்துகிறாள். இது கலாபனைச் சுடுகிறது.
இந்தக்கீறல் துறைமுகம்தோறும் காமமெனத் துய்த்துத்
தணிக்கப்படுகிறது.
இந்த நாவல் கலாபன் எனும் ஒற்றைப்பாத்திரத்தைப் பிரதானமாகக்
கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப் பாத்திரத்தினூடு கதையாடும்
மனிதர்கள் அத்தியாயத்துக்கு அத்தியாயம் வேறுபடுவர். அவர்களது
நிலமும்,காற்றும்,கடலும்,அரசியலும் கூட வேறுவேறானவை. இது
கப்பலில் பயணித்துக் கொண்டிருப்பவர்களுக்கிடையிலான
உறவுகளைச் சொல்லும் நாவலாக அல்லாமல், கடலில்
அலைந்துகொண்டிருந்தாலும் கரையே தன் நினைவாய்க் கிடக்கும்
மனிதனைக் குறித்தது. அதனால் கடலின் வெவ்வேறு
கதைகளிற்கிடையில் மிதந்துசெல்லும் இந்நாவல் அதன்
கதைமாந்தர்களுக்கிடையிலான தொடர்பற்ற தொடர்பினால்
கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அத் தொடர்பற்ற தொடர்பே
இக்கதைசொல்லியின் புதிய நாவல் உத்தியாய் மாற்றம் பெறுகிறது.
தாய்லாந்தில் இருக்கும் லேக் என்னும் பெண்ணும் பம்பாயிலே
ஷெரின் என்னும் பெண்ணும் கலாபனின் பார்வையில் ஒருத்திதான்.
ஒருத்தி என நான் சொல்வது பெண்ணுடல் என்கிற அர்த்தத்தில்
அல்ல. கலாபன் லேக்கிடம் கொடுக்க மறந்த ஒரு பரிசை பம்பாயில்
ஷெரினிடம் கொடுக்கிறான். ஷெரினிடம் காட்ட மறந்த அன்பைக்
கொலம்பியாவில் வேறொருத்தியிடம் பகிர்கிறான். நாவலின்
பின்னட்டையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல இந்நாவலின்
ஒவ்வொரு அத்தியாயமும் தனித் தனிக் கதைகள்தான்.
அக்கதைகளிற்கு இடையேயான இடைவெளிகளை நிரப்பும் கலாபன்
என்னும் ஒற்றைப்பாத்திரமும், அவற்றின் உள்ளோடும் ஆத்மார்த்தமான
ஒத்தவியல்புகளும் கலாபன் கதையை ஒரு நாவலாக்கி நிற்கின்றன.
சாகசமும்,உயிர்ப்பயமும்,தீராக்காமமும்,பிரிவின் வீச்சமுமாய்
அலைக்கழியும் கலாபனின் மனதினை எழுத்துகளின் வழி
சித்தரித்திருக்கிறார் தேவகாந்தன். நிலவும் நட்சத்திரங்களுமற்ற
வானத்தை கேபின் கண்ணாடிவழியாகப் பார்த்தபடி நிலம் நீங்கிய
கலாபன் அவன் பயணத்தின் போது எவ்வாறான வளர்சிதை
மாற்றங்களுக்குள்ளாகிறான் என்பதே இந்நாவலின்
ஆன்மாவாயிருக்கிறது. எஞ்சின் அறையில் ஒளிந்துகொண்டு வரும்
ஆபிரிக்க அகதிக்கு தாகம் தணிக்கத் தண்ணீர்ப்போத்தலை அருள்கின்ற
போது அவன் காருண்யனாகிறான், மும்பை கோழிவாடாவில் பாலியல்
தொழிலில் சிக்கிக்கொண்ட சிறுபெண்ணை அங்கிருந்து தப்புவிக்கும்
போது அவன் சாகசக்காரனாகிறான், இன்பம் துய்க்கச் சென்ற இரவில்
கொலம்பியப் பெண்ஒருத்தி கபிரியேல் கார்குவா மார்க்வேஸ் பற்றி
இரவுமுழுவதும் பேசக் கேட்டுக்கொண்டிருக்கும் போது
ஞானியாகிறான், கம்பஹாவில் சிங்களக்காடையரிடம் இருந்து
சுமத்திரா எனும் தேவதை தன் உயிரைப் பணயம் வைத்து இவன்
உயிரைக் காக்கையில் கலாபன் புதிதாய்ப் பிறக்கிறான். இத்தனை
கொழுத்த அனுபவங்களும் பயணம் அவனுக்களித்த பரிசு. பயணம்
ஒரு மனிதனின் இதயத்தை எவ்வாறு விசாலிக்கச் செய்கிறதென்பதை
கலாபனின் கதை வழியே எழுதிக்காட்டுகிறார் தேவகாந்தன்.
இந்நாவலை வாசித்து முடித்ததும் சில ஆண்டுகளுக்கு முன்னர்
பார்த்திருந்த பத்தேமாரி என்னும் மம்முட்டி நடித்த
மலையாளப்படமொன்று நினைவுக்கு வந்தது.(கள்ளத்தோணி என்பது
அச்சொல்லின் தமிழர்த்தம் என நினைக்கிறேன்) குறிப்பாகப் அந்தப்
படத்தின் இறுதிக்காட்சியைச் சொல்லவேண்டும் தன்னைத்
தொலைத்துத் தன் குடும்பத்தினரின் நலன்களுக்காகவும்
தேவைகளுக்காகவும் முதுமைவரை வளைகுடா நாடொன்றில்
உழைத்துக்கொண்டேயிருக்கும் நாராயணண் எனும் மனிதன்
இறுதியாகக் கட்டிமுடித்திருக்கும் இதுவரை குடிபோயிராத வீட்டுக்கு
பிணமாகக் கொண்டுவரப்படுவான். ஆனால் வாழப்போகிற புதிய
வீட்டில முதல் முதலாகப்; பிணத்தையா வைப்பது என்கிற உறவுகளின்
விசனமும், அப்படி வைத்தால் வீடு அதன் சந்தைமதிப்பையிழக்கும்
என்பதாலும் அவன் உறவுகள் அவனது பிணத்தை அவனது உதிரத்தில்
உருவாகிய வீட்டுக்குள் எடுத்துச்செல்ல மறுத்துவிடுவர். கலாபனும்
ஒருவகையில் நாராயணணைப் போலத்தான். நாவலின் ஓரிடத்தில்
கலாபன் தனது நண்பனிடத்தில் குடும்பத்திற்காக சூட்கேஸ்களைக்
கொடுத்தனுப்புவான் அப்போது கலாபனின் குழந்தைகள் சூட்கேசைக்
கொண்டுவரும் நண்பனிடம் அப்பா எங்கே எனக்கேட்பார்கள். அப்போது
கலாபனின் மனைவி சொல்லுவாள் “அப்பா வேறையெங்கே
இருக்கப்போகிறார் சூட்கேசுக்குள்ளதான்”. இந்த யதார்த்தம்
ஏற்படுத்தும் வலிதான் கலாபனை அவன் பயணமெங்கும்
விரட்டுகிறதாய் எனக்குத்தோன்றும். இன்றைக்கு போர்
எங்களையெல்லாம் மேலைநாடுகளில் நிலைகொண்டு வேரூன்றச்
செய்திராவிட்டால் குடும்பத்துக்கொரு கலாபனை ஈழத்தமிழ்ச்சமூகமும்
கொண்டிருந்திருக்கும் என்பதுதான் கசப்பான உண்மை.