தனது நான்கைந்து கவிதைத் தொகுதிகளைக் கையில் திணித்தபடி கவிதை பற்றி விடாப்பிடியாக ஒருவர் பேசியது இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. நீங்கள் கடைசியாக வாசித்த கவிதைப்புத்தகம் எது எனத் என் நாக்குத்தவறிக் கேட்டதில் அவர் அற்புதமானதொரு கருத்தைச் சொன்னார்..
“நான் வேறு புத்தகங்கள் படிப்பதில்லைத் தம்பி… அவற்றில் ஒரு வரியைப் படிப்பதற்கிடையில் எனக்கு நான்கு வரி தோன்றிவிடுகிறது நானென்ன செய்ய… எழுதுவது தானே முக்கியம்” என்றார். நான் அவர் வயசு கருதி தலையை மட்டும் எந்தப்பக்கம் என்றில்லாமல் ஆட்டிவைத்தேன்.(நழுவல் தான் நமக்குத் தொழிலாயிற்றே).
சில நல்ல எழுத்துக்களைப் படிக்கும் நம்மையறியாத பரவசமும் வெட்கமும் ஒருங்கே கைகூடிவருகிறது. (வெட்கம் எழுகிறவராயிருப்பின் மட்டும்). வாசிக்கச் சலிக்கிறவன் எதற்கு எழுதுகிறான். எனத் தோன்றும்.. கவிதைகள் என்னைத் தின்று செரிக்கின்றன. சில அற்புதமான கவிதைகளைப் படிக்கநேர்கையில் என்னை நீயெல்லாம் ஏன் கவிதை எழுதுகிறாய் மனக்குரங்கு கேள்விகேட்டுத் துளைக்கிறது. இன்னும் சில கவிதைகள் பரவசம் கொண்டென் மனதுக்குள் மறுபடி மறுபடி புரண்டுகொண்டிருக்கும். இன்னும் சில என்னை ஏன் நீ எழுதவில்லை என்பதாய் முறைக்கும். கவிதைகள் மட்டுமென்றல்ல புத்தகங்கள் எல்லாமே அப்படித்தான்.
அப்படி என்னை வெட்கம் கொள்ள வைத்த. பரவசத்தில் ஆழ்த்திய சில கவிதைகள் கொண்ட அனிதாவின் ‘கனவு கலையாத கடற்கன்னி’ தொகுப்பை இந்தக் காலையில் படித்தேன். எற்கனவே அது மின்தொகுப்பாக கிடைத்திருந்தாலும். புத்தகத்தை புத்தகமாகப் படிப்பதன் சுகம் கருதி. தாள்களைத் தடவும் விரல்களின் வழிதான் என்னுள் வார்த்தைகளின் கிறக்கம் ஏறுவதாய்க் கருதியோ என்னமோ அதை புத்தகப்பிரதியாய் வாங்கி வந்தபின்னரே படித்தேன். மற்றவர்கள் ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ நானும் கவிதைகள் எழுதுவ(திய)தாய் நம்பிக்கொண்டிருக்கிறது மனசு.
கவிதைகள் எழுதலாம் கவிதைகள் பற்றி எப்படி எழுதுவது. எனக்குத் தெரியாது. அனிதாவின் கவிதைகளின் வழியாக எனக்கு நேரமுடியாத அனுபவங்கள் கூட கோர்த்துக்கிடக்கும் அவரது வார்த்தைகள் வழியாய் நிகழ்ந்து கடக்கிறது என்னை. பெண் என்கிற இருப்பின் தனித்துவம் மிகுந்து கிடக்கும் கவிதைகளில் காமமும் அழகும் பெருகும் புள்ளியாய் தான் பார்க்கப்படுவது குறித்த கோபமிருக்கிறது. மென் துயரங்கள் படிந்த சொற்களின் மீது லேசான பதற்றம் தூவப்பட்டிருக்கிறது. அது பெண்கள் மட்டுமே அலைகிற வெளி. அது சுருக்கிடப்பட்ட ஒரு சிறுதுளிக்குள் விரிகிற பால்வீதிப் பிரபஞ்சம். ஆண்கள் அறியாத ரகசியவழிகளில் பெண்கள் அதை அடைகிறார்கள். யாராலும் பின்பற்ற முடியாதபடி ஒழிந்துகிடக்கும் அவர்களது தடங்களைத் தேடும் அலைதலில் தோற்றுத்தான் போகிறார்கள் ஆண்கள்.
எல்லாம் போதும் கவிதையைப் பற்றிப் பேசடா என்ற உங்கள் முணுமுணுப்பு கேட்கிறது..
ஆனாலும் என்ன கவிதைகளைப் பற்றி எப்படி பேசுவது என்றெனக்குத் தெரியாது.. தொகுப்பை மூடிவைத்தை பின்னும் மனதுக்குள் மினுங்கிய சில கவிதைகள்.. மற்றும் அனுபவங்கள்.
இந்தக் கவிதை எனக்கு பயங்கரமாப்பிடிச்சது இதே அனுபவத்தை பல்வேறு பெண்கவிஞர்களின் கவிதைகள் பேசுகின்றன. கோபமாய், வேகமாய், எரிச்சலாய்.. இன்னும் இன்னும் வன்மமாய்ப் பேசியிருக்கின்றன. ஆனால் எனக்கு அனிதா அதைச் சொல்லியிருக்கிற மொழி பிடித்திருக்கிறது. நான் அறியாத ஒன்றைக் கண்டடைந்த சந்தோசம் மேலிட ஒரு புதிர் போல இதை மறுபடி மறுபடி படித்துக்கொண்டிருந்தேன்.
சுழற்சி.
இது நிகழாதிருக்க வேண்டும்
இம்முறையாவது.
அங்குலம் அங்குலமாய் வெப்பம் பரவி
தீ கனன்று அனல் துவங்கும்
ஐந்து விரல் அனிச்சயாய் மடங்கி
ரேகைக்குள் குழி பறிக்கும்
மரங்கள் மெலிந்து கொடிகளாகி
கொடிகள் வளைந்து நாணலாகும்
வீடு அதிர்ந்து அதிர்ந்து அடங்கும்
தூண்கள் வலுவின்றி சரியத் துவங்கும்
முற்றத்து துளசி மாடம்
சமயம் பார்த்து ஓடி ஒளியும்
எனினும் வீடும் அழியபோவதில்லை
காடும் கருகபோவதில்லை
யாரையும் ஈர்க்கவில்லை எந்த ஒரு நிகழ்வும்
பேருந்து நெரிசலின் சலனம் தாண்டி
சன்னமாய் உதிர்கின்றன
ஒரு குழந்தைக்கான ஆயத்தங்கள்.
இப்படி ஒரு அனுபவத்தை நான் எழுதவேண்டும் என்று நினைத்தபடி இருந்தேன். யாரிடமிருந்தாவது கரிசனத்தை யாசிக்கிற பொழுதுகள் நிறைந்தே கிடக்கின்றன வீட்டை விட்டுத் தனித்தெறியப்பட்ட என்வாழ்வில். என் தம்பியின் புகைப்படத்தை பிரின்ட் பண்ணிக்கொண்டு வந்த ஆட்டோப் பயணத்தில் எனைமீறிப்பீறிட்ட விசும்பலின் போது துணைவந்த ஆசுவாசம் தந்த ஆட்டோ ஓட்டும் எளியமனிதரின் வார்த்தைகளைப் நினைவூட்டிப்போயிற்று இக்கவிதை..
அன்பின் விலைகள்..
எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்
மௌனமாய் விம்மத்துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்து
ஏன் அழறீங்க என்றான்
பின் என்ன நினைத்தானோ அழாதீங்க என்றான்
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்.
உலகம் தந்திரமான சொற்களால் நிறைந்திருக்கிறது. வாய்களில் புழுத்து நெளிகிறது தேவைகளின் நிமித்தம் உதிர்க்கப்படும் பிரியத்தின் சொற்கள். காதல் தொடங்கி காதல் வரையும் அதன் சாதுரியங்கள் எல்லாஇடங்களிலும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அதன் சாதுரியங்கள் தோற்றுத் துவளும் ஒரு கணத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தக்கவிதை என்பதாய் நான் உணர்கிறேன்.
துரோகம்
அகால வேளையின்
நம்பிக்கை திரை கிழித்துக்கொண்டு
ஒரு பொய் பிறக்கிறது
பின் மற்றொன்று
மற்றுமொன்று.
பிணவறையின் சவங்களாய்
வரிசையாய் பொய்கள்
குளிர்ந்து
விறைத்து
உணர்வற்று.
சரி நம்புகிறேன்.
இப்போது தள்ளிப்படு.
பிரியத்தின் அழகான கண்டுபிடிப்பு முத்தம். வார்த்தைகளற்ற அன்பின் மொழி சிலபொழுகளில் காமத்தின் தோழனாயும் அல்லது தோழியாயும். பெருகிப் பெருகி வழிகிற பேரன்பில் நிகழந்துகொண்டிருக்க வேண்டுமென்று பேராசைகொண்டலைகின்றன் முத்தங்கள். திடீரென்று ஒரு கணத்தில் நிகழ்ந்து மனசுக்குள் உறையவைக்கப்பட்ட முதல் முத்தங்கள் சிலிர்ப்பூட்டிக்கொண்டிருப்பவை அனிதாவின் இக்கவிதை படிக்கையிலும் உதடுகளில் ஈரலித்தது அம்முத்தம்.. ஆனால் இதைப்போலல்ல.. அது கன்னத்தைக் குறிவைத்து உதட்டில் முடிவடைந்தது.
முத்தங்களாலான கூட்டில்
//உன் கைக்குள் சுருங்கிக் கொண்டு
முகமெங்கும் ஈரம் காயாமல்
முத்தங்கள் வாங்கிக் கொண்டிருப்பினும்
என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின்
வழிதவறிக் கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை
வெட்கிச் சிரித்து
நினைவு கூர்கின்றன
வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத்தடைகளும்//
என் அனுபவங்களோடு சேர்த்துச் சொன்ன இந்த கவிதைகள் போல தொகுப்பிலிருந்து மனசுக்குள் புரள்கிற மேலும்சில கவிதைகள். எண்ணங்கள்,வழியும் வெறுமைகள்,என் பிரிய வழிப்போக்கனுக்கு இப்படிப் போகுமொரு வரிசை இவை என் தேர்வுகள் மட்டுமே. கவிதை அனுபவம் தானே அது அவரவர்க்கு நிகழ்வதுதான். மேலே அனுபவத்தோடு சேர்த்து எழுதுகையில் கிட்டத்தட்ட முழுக்கவிதைகளையும் எழுதியிருப்பதன் காரணம் அனிதாவின் கவிதைகளில் சில வரிகளைத் தேர்ந்தெடுத்து இது நல்லாயிருக்கு என்பதாய்ச் சொல்லமுடியவில்லை. அது அவசியமும் கூடக் கிடையாது. ஒரு முழுக்கவிதையாய் நிகழும் போதே அது நன்றாயிருக்கிறது. சில வேளை அனிதாவே சொல்வது போல
//இதயங்களின் கதகதப்பில் அடைகாக்கப்படும்
என் கவிதையின் முதல் வாசகனுக்கு
என்னை எப்போதும் புரியப்போவதில்லை//
இது என் புரிதல் அனிதாவின் கவிதைகள் எனக்குள் நிகழ்த்திய அனுபவங்கள். உங்களுக்கு அவை வேறொரு அனுபவமாகவும் நிகழலாம். அனுபவித்தல் தானே கவிதை.
கடைசியாக ஒரு குறிப்பு…
தி.நகர் நியூ புக் லாண்டில் இந்த தொகுப்பை வாங்கு முன்பாக.. புத்தகங்களைப் புரட்டினேன். பிரபலங்களின் முகவரிகள் என்கிற ஒரு புத்தகத்தை புரட்டினேன். ஜோதிகாவின் முகவரிக்கு நேரே தொடர்புக்கு சிவகுமார் (நடிகர்) என்றிருந்தது. வீட்டுக்கு வந்து அனிதாவின் தொகுப்பில் ‘இன்று இந்த அறையில்’ என்கிற கீழ்வரும் கவிதையை படிக்கையில் ஏனோ ஜோதிகாவின் முகவரி இருந்த பக்கம் நினைவுக்கு வந்தது.
இன்று இந்த அறையில்
இன்று இந்த அறையில் சில்லு சில்லாய்
சிதறியிருக்கிறேன்
உடைந்ததில் தேறியவற்றை
எடுத்துப்போக வந்து விட்டார்கள்
பிரியத்துக்குரியவர்கள்
அப்பாவை முந்திக்கொண்ட தம்பி
அம்மாவின் நினைவுகளை
கடைசி உமிழ்நீர் வழிய
அள்ளிப் போனான்
பெற்ற பரிசுகளும் பட்டங்களும்
தன்னம்பிக்கைகளும்
கவிதைப்புத்தகமும்
அப்பாவுக்கு
என் குழந்தையின் வண்ணப் புகைப்படங்களும்
முதலிரவுக்கு நாளைய சோப்பு வாசமும்
கணவனின் தேர்வு
மீதமிருக்கும் சில
சிதறுண்ட நான்
சிதறுண்ட நீ
கொஞ்சம் ரத்தம்
உயிர்மை வெளியீடு
விலை -40.00
நல்லதொரு பகிர்வு.
அனிதாவின் கவிதைகள் தொகுப்பாக வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைபவர்களில் நானும் ஒருவன்.
உங்கள் ரசனையும் விமர்சனமும் என்னுடன் ஒத்துப்போகின்றன.
இந்தக் தொகுப்பில் உள்ள பல கவிதைகளை ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும் விரைவில் முழுத்தொகுப்பையும் வாங்கி படிக்கும் ஆவலில் இருக்கிறேன்.
அனிதாவுக்கு வாழ்த்துகள். மிகவும் மகிழ்ச்சி.
//“நான் வேறு புத்தகங்கள் படிப்பதில்லைத் தம்பி… அவற்றில் ஒரு வரியைப் படிப்பதற்கிடையில் எனக்கு நான்கு வரி தோன்றிவிடுகிறது நானென்ன செய்ய… எழுதுவது தானே முக்கியம்” என்றார். நான் அவர் வயசு கருதி தலையை மட்டும் எந்தப்பக்கம் என்றில்லாமல் ஆட்டிவைத்தேன்//
நீங்கள் யாரை வம்புக்கு இழுக்குறீர்களென தெரிந்துவிட்டது. கென்னுடன் ஒரு நாள் சந்தித்தது 🙂 சென்னையில் தானே இருக்கீங்க?
only you could make comment like this, make others to go and buy that book and read, and you could make ppl go creazy about poems.
எதிர்பாரா நிகழ்வுகள்தான்…வெகு நாளைக்குப்பிறகு இன்றுதான் அனிதாவின் வலைப்பூ வாசித்தேன்…அனன்யாவின் புகைப்படம் பார்த்தேன்…இரவில் அனிதாவின் நூல் பற்றிய உங்களின் விமர்சனம் படிக்கிறேன்…இதை எதிர்பாரா நிகழ்வுகள்தான் என்று எப்படி சொல்வது?!
சரி முதல் பத்தியில் இருப்பதை நீ கென்னின் தூண்டுதலில்தானே எழுதினாய் அகிலன்…?! 😉
very nice……………..
🙂
இன்னும் இந்தக் கவிதைப் புத்தகம் வாசிக்கவில்லை! நல்ல விரிவான விமர்சனம். பகிர்விற்கு நன்றி..
என் தாயே!!!!
என் தங்கை தமங்கை இன் அழ்ளுகுரல் கேட்டு
என் இதயம் பதற்றுகிறது.
கவலை பட்டது போதும் என் இதயம் உனக்காக துடிக்கிறது
மாண்டாலும் மறுபிறப்பு எடுப்போம்
கவலை விடு என் சகோதிரி
super your poem
அகிலன், இன்று இந்த அறையில் கவிதைக்கான உங்கள் கடைசிக்குறிப்பு அற்புதம். ஒரு கலையின் படிமங்களை வாழ்க்கையில் கண்டறிகிறது ரசனை மனம், அந்த வகையில் நீங்கள் கூச்சப்பட்டாலும் இன்னொன்றை சொல்ல வேண்டியிருக்கிறது நீங்கள் ஒரு நல்ல ரசிகன். (உங்கள் அவதானம் தொடர்பிலான வேதனை அவர் உள்ளிட்ட அனைவருக்கும் இருக்கிறது – உங்களால் சொல்ல முடிகிறது – மொழி பட dvd ஐ தேடிக்கொண்டிருக்கிறேன்)
very nice this ………………………
very niceeeeeeee…….
so beauty
idu pondra alahiya kavidaihale tamil moliyei vaalavaikindrana. (insha allah) mulu kavidai thohupayum vashippeen. meelum tamilukku pani puriya vaalthukkal… all the best