நீங்கள் ஈழம் பற்றிய வீடீயோக்கள் வருகிற எந்த இணையத்தளத்திலும் பார்க்கலாம். தனது சோட்டிக்கு மேலால் பச்சைப் புடைவையைச் சுற்றியபடி வெறுங்கையுடன் தனித்து திசையற்று நடந்து போகிற பெண் என்ர அம்மாதான். பத்துமாதம் என்னைச் சுமந்து பெத்த அம்மாதான் அது. இரண்டு ஆண் பிள்ளைகளையும் ஒரு பொம்பிளைப் பிள்ளையையும் பெத்து வளர்த்து ஆளாக்கின அதே அம்மாதான்….
ஸ.. ப.. ஸ..
அம்மா சுருதி சேர்த்துக்கொள்ளுவது ஒரு அழகுதான். எனக்கு அம்மாவின் பாட்டுக்கேட்பதை விடவும் அதைத் தொடங்குவதற்கு முன்னாலும் பின்னாலும் அம்மா சுருதி சேர்ப்பதை கேட்பதில் எனக்கு பிரியம் அதிகம். சங்கீதத்தின் முழுமையும் அவள் சுருதி சேர்க்கும் போது வெளிவந்துவிடுகிறதோ என்னமோ. அம்மா வீட்டில் தன் மாணவிகளிற்குப் பாட்டுச் சொல்லிக்கொடுக்கும் போதெல்லாம் சுருதிப்பெட்டியை யார் போடுவது என்பதில் எனக்கும் தம்பிக்கும் போட்டியிருக்கும். தம்பி நல்லாய்ப் பாடவேறு செய்வான் எனக்கோ பாடுவது என்றால் வெறும் காத்துமட்டும்தான் வரும். பாடுவதில் அவனோடு போட்டியிட முடியாததால் நான் அதைச் சுருதிப்பெட்டிக்காகச் சண்டைபிடிப்பதில் காட்டுவேன். அம்மாவுக்கும் அது தெரிந்தோ என்னமோ எப்போது தீர்ப்புகள் என்பக்கமாயிருக்கும். எப்போதாவது திட்டும் போதெல்லாம் அம்மா சொல்லுவாள்.“டேய் கத்திக் கத்தி நான் உங்களை வளர்க்கிறனடா கொஞ்சமாவது இரக்கமிருக்கா உங்களுக்கு..”இரக்கம் என்கிற வார்த்தை கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் அம்மாவும் சங்கீதமும் தான் எங்களை வளர்த்தார்கள்.
அம்மா மட்டும் சங்கீதச்ரீச்சராயிருந்திருக்காவிட்டால் அப்பா செத்துப்போனவுடனேயே நாங்கள் நடுத்தெருவுக்கு வந்திருப்போம். ஆனால் துயரங்களை அம்மாவின் சங்கீதம் கரைத்தது. அம்மாவும் அவளது சங்கீதத்துக்குள் கரைந்துபோகிறவளாயிருந்தாள்.
சொந்தங்கள் எல்லாருமாய்க் கூடுகிற நாட்களில் எல்லாரும் அம்மாவைப் பாடச்சொல்லிக் கேட்பார்கள். அம்மா பாடத்தொடங்குவாள் “எனக்கென்ன மனக்கவலை என்தாய்க்கன்றோ தினம் தினம் என்கவலை” நான் பாடவேண்டியதை அம்மா பாடுகிறாளோ என்று நினைப்பேன். அம்மாவை யார் பாடச்சொல்லிக் கேட்டாலும் அம்மா இந்தப் பாடலைத் தான் பாடுவாள். அம்மா ஏன் இந்தப்பாடலைப் பாடுகிறாள் என்றெனக்குத் தோன்றுவதுண்டு உண்மையிலேயே அம்மாவிற்கு ஏதும் மனக்கவலைகள் கிடையாதா? அல்லது தன் மனசுமுழுவதிலும் துயரங்களை வைத்துக்கொண்டு எதிர்வளமாக அதையெல்லாம் பாடிக்கரைக்க முயற்சிக்கிறாளா அம்மா. பாடும் போது அம்மாவின் முகம் வழக்கமானதாக இராது. கண்களை மூடிக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிற அம்மாவின் தோற்றம் தெய்வீகமானதாக மாறிவிடுகிறது.
நான் “நான் அம்மா இந்தப் பாடலை அடிக்கடி பாடுகிறீங்கள்” என்று அம்மா என் தலையில் பேன் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நாள் மாலையில் கேட்டேன். என் தலையில் ஊர்ந்து கொண்டிருந்த அம்மாவின் கைகள் கொஞ்சநேரம் தங்கள் ஊர்தலை நிறுத்தியது. நான் அம்மா கோபமாயத் தலையில் குட்டப்போகிறாளோ என்று பயந்துபோனேன். ஆனால் அம்மாவின் கைகள் சிறிது இடைவெளி விட்டு மறுபடி தமது ஊர்தலைத் தொடர்ந்தன ஆனால் அம்மா பதில் சொல்லவில்லை. ஏனோ நானும் மறுபடியும் கேட்கவில்லை. அம்மா கோபமாகிவிட்டாளோ என்றெனக்குப் பயமாக இருந்தது.நான் அம்மாவின் அகப்பைக் காம்புப் பூசையை நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டேன்.
அம்மா எப்படி நன்றாகப் பாடுவாளோ அப்படி நன்றாக அடிக்கவும் செய்வாள்.அம்மா அப்படி அடிக்கிற சமயங்களில் நாங்கள் மூன்று பெருமே ராகமெடுத்து அழுவோம். அழுகிறதிலயாவது நாங்கள் சங்கீதச் ரீச்சரின் பிள்ளைகள் எண்டதைக் காட்டவேண்டாமா?.. எங்கள அழுகை ஆலாபனையைக் கேட்டு முன்வளவில இருந்து மாமாவோ.. பக்கத்து வளவில இருந்து பெரியம்மாவோ வந்து காப்பாற்ற மாட்டார்களா என்கிற ஏக்கம் நிரம்பிய அவலச் சங்கீதமாய அது இருக்கும். அதிலும் என் தம்பி திறமைசாலியாக இருந்தான் அம்மா பூவரசம் கம்பை ஓங்குகிறபோது உச்சஸ்தாயியில் கத்தி அடிவிழுந்தபிறகு படிப்படியாக அதைக்குறைப்பான். அதை விழுகிற அடியின் வேகத்தை குறைக்கும் ஒரு தொழிநுட்பமாக அவன் பாவித்திருக்கிறான் என்பதை பின்னாளில் அவன் சொல்ல கேட்டிருக்கிறேன்.. (ஹி ஹி ஹி )
ஆனால் அம்மா அடுத்த தடைவை பாட்டை மாற்றியிருந்தாள். “குறைவொன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா” எனக் கென்னவோ பாடலின் வரிகள் மாறியிருக்கிறதே தவிர அம்மா உட்பொருளை அப்படியேதான் வைத்திருக்கிறாள் என்று தோன்றியது. ஆனால் நானும் இன்ற வரைக்கும் அதைக்குறித்துக் கேட்கவில்லை. அம்மாவும் சொல்லவில்லை. அம்மாவுக்கு ஒரு ஆசையிருந்தது. சொந்தமாய் ஒரு சுருதிப்பெட்டி வாங்கிவிடவேண்டும் என்கிற ஆசைதான் அது. என்ன இருந்தாலும் சங்கீதத் ரீச்சரிடமே சுருதிப்பெட்டியில்லை என்பது ஒரு பெரிய குறைதானே. ஆனால் அம்மாவின் வருமானம் சொந்தமாய் ஒரு சுருதிப்பெட்டியை வாங்கஅனுமதிக்கிறதாயில்லை. அவளது சுருதிப்பெட்டி ஆசைகளை விழுங்கி நாங்கள் எங்கள் வயிறுகளை நிரப்பிக்கொண்டோம். எங்கள் நோய்களை தீர்த்துக்கொண்டோம். நல்ல அழகான ஆடைகளாய் உடுத்திக்கொண்டோம்.
ஆனால் அம்மா எப்படியோ ஒரு வழியாக காசு சேர்த்து ஒரு சுருதிப்பெட்டியை சொந்தமாக வாங்கினாள். கிளிநொச்சியில் சுருதிப்பெட்டி கிடைக்காது யாழ்ப்பாணத்தில் மட்டும் தான் வாங்கமுடியும். யாழ்ப்பாணத்துக்கு தரைவழியாகப் போகமுடியாது. பாதையையில் போர் பயணித்துக்கொண்டிருந்தது. கடல் வழியாகத்தான் போகவேண்டும். அம்மா எங்களைப் பெரியம்மா வீட்டில் விட்டுவிட்டு ஆசைப்பெரியம்மாவுடன் யாழ்ப்பாணம் போய் அந்தச் சுருதிப்பெட்டியை வாங்கிக்கொண்டு வந்தாள். அம்மா வரும் வரைக்கும் பெரியம்மா புறுபுறுத்துக்கொண்டேயிருந்தா “இப்ப உந்தக்கடலுக்கால போய்ச் சுருதிப்பெட்டி வாங்கத்தான் வேணுமோ” என்று. அப்போதெல்லாம் கிளாளிக் கடலுக்கால போற சனங்கள் உயிரோ வாறது நிச்சயமில்லை நேவி வந்து வெட்டியும் சுட்டும் ஆட்களைக் கொன்றுகொண்டிருந்தது. பெரியம்மா அம்மாக்கு ஏதும் நடந்திருமோ எண்ட பயத்திலதான் திட்டிக்கொண்டிருந்தாள் எல்லாம் அம்மா திரும்பி வரும் வரைக்கும் தான்.
அம்மா சுருதிப்பெட்டியை வாங்கிக் கொண்டு வந்தாள். ஒரு நீலநிறப்பையுக்குள் செவ்வகமாய் அதிசயப் பொருளைப்போல இருந்தது அது. அந்த நீலநிறப்பையும் வழக்கமான பைகளைப் போல அல்லாமல் வார் நீளமானதாக இருந்தது. நாங்கள் அம்மாவின் சொந்தச் சுருதிப் பெட்டியைப் பார்ப்பதற்கு ஆவலாயிருந்தோம். ஆனால் அம்மா அதைச் சாமிப்படங்கள் இருக்கிற தட்டில் வைத்தாள். சாமியெல்லாம் கும்பிட்டாப்பிறகுதான் அதைத் தொடலாம் என்றுவிட்டாள். அன்றிலிருந்து சுருதிப்பெட்டியும் ஒரு சாமியாகிவிட்டது வீட்டில்.
ஒவ்வொரு தடைவையும் போர் எங்களை ஊரைவிட்டுத் துரத்தும் போதெல்லாம் நாங்கள் அவசர அவசரமாய் வீட்டைவிட்டு ஓடநேர்ந்திருக்கிறது. கையில் அகப்பட்டதை மட்டும் எடுத்துக்கொண்டு ஓட நேர்ந்திருக்கிறது. ஆனால் எல்லாரும் தாங்கள் அதிகம் நேசிக்கிறவற்றை எப்படியாவது எடுத்துக்கொண்டு போய்விடுவோம் ஏனெனில் மறுபடி திரும்பவும் எப்போது வரமுடியும் என்று சொல்லமுடியாது. அப்படியே வந்தாலும் வீடும் பொருட்களும் இருக்கும் என்று சொல்லமுடியாது. அம்மா எப்போதும் முதலில் சுருதிப்பெட்டியைத் தான் எடுத்துக்கொள்வாள். நான் தீப்பெட்டிப் பொன்வண்டும். காமிக்ஸ் புத்தகங்களையும் முதல் எடுப்பேன். தம்பி செஸ் போர்ட்டை எடுப்பான். தங்கச்சி எதையும் எடுப்பதில்லை அம்மா எதைச் சொல்கிறாளோ அதைத் தான் எடுப்பாள். தின்பண்டங்களில் மட்டுமே அவளுக்கு ஆசை. ஆனால் உயிர்பிழைக்க ஓடுகிற அவசரத்தில் அதையார் கவனிப்பது.
நாங்கள் மூன்றாம் முறையாக கனகராயன் குளத்தில் இருந்து அக்கராயனுக்கு இடம்பெயர்ந்த போது அம்மாவின் சுருதிப்பெட்டி காயமடைந்தது. வீதியில் குண்டுகள் விழுந்துகொண்டிருந்தன. நாங்கள் குண்டுகள் வீழ்ந்து வெடிக்கும் போதெல்லாம் நிலத்தில் விழுந்து படுப்பதும் பிறகு எழுந்து நடப்பதுமாகப் இடம்பெயர்ந்து கொண்டிருந்தோம். அப்படி ஒரு தடவை விழுந்து எழுகையில் குண்டு எங்கள் காலடிகளில் வெடித்தது மாதிரியிருந்தது. சத்தம் ஓய்ந்து தலையை நிமிர்த்திப் பார்க்கையில் அம்மா விசும்பிக்கொண்டிருந்தாள். அம்மாதன் முகத்தோடு அணைத்துக்கொண்டிருந்த சுருதிப்பெட்டியின் ஒரு பக்கத்துப் பலகையைக் குண்டுகள் காயப்படுத்தி விட்டன. வாளிப்பான அதன் வார்னிஸ் பூசப்பட்ட முகம் அகோரமாய் கிழிபட்டுக் கிடந்தது. அம்மா அன்று முழுவதும் துயரப்பட்டுக்கொண்டேயிருந்தாள். அந்த இடத்தில் சுருதிப்பெட்டி இல்லாவிட்டால் அந்தக் குண்டு அம்மாவின் முகத்தைத்தான் தாக்கியிருக்கும். சங்கீதம் அம்மாவின் உயிரையும் காப்பாற்றியது. நாங்கள் உடைந்துபோன சுருதிப்பெட்டியில் ஒரு முகத்திற்கு பிளாஸ்திரி வைத்து ஒட்டினோம். ஆனால் அது எந்தப்பிளாஸ்திரியாலும் ஆறாத காயம். அன்றையைப் போல் அம்மா அழுது அதற்கு முன்பாக நான் பார்த்ததாய் நினைவடுக்குகளில் இல்லை.
ஆனால் அதற்குப்பிறகு ஒரு தடைவை பார்க்க நேர்ந்தது. சுருதிப்பெட்டியை விடவும் அம்மாவுக்கு ஒரு ஆசையிருந்தது. என்னை அல்லது தம்பியை இரண்டத்தா ஒராளை இன்ஜினியராக்கி விடுவது என்பதுதான் அது. ஆனால் எனக்கு படிப்பும் வராது பாட்டும் வராது என்கிற சங்கதி அம்மாவிற்குத் தெரிய கனநாள் ஆகவில்லை அம்மா என்னை ஒரு ஸ்ரூடியோவில் வேலைக்கு சேர்த்துவிட்டாள். கமராவின் கண்களால் உலகத்தை பார்க்கத்தொடங்கினேன் நான். தம்பி படித்தான் இன்ஜினியராகிவிடுவேன் என்பதாக அவனும் நம்பிக்கொண்டுதான் இருந்தான். பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியும் விட்டான் அம்மா தன் வாழ்நாள் இலட்சியம் நிறைவேறி விட்டதாகச் புழுகத்தில் இருந்தாள். தன் சங்கீதம் தன் பிள்ளையை இன்ஜினியராக்கி விட்டதென்ற பெருமையும் கூட.. ஆனால் வீட்டுக்கொரு பிள்ளை நாட்டுக்கு கட்டாயம் குடுக்கத்தான் வேணும் எண்டு சொல்லி தம்பியை இயக்கம் பிடித்துக்கொண்டு போன அண்டைக்கு அம்மா மறுபடியும் அழுதாள் இந்தத் துயரத்தை தன் பாட்டுக் கரைக்காதென்று நினைத்தாளோ என்னவோ அம்மா குமுறிக் குழுறி அழுதாள். ஒரு விதவைத் தாய் பாடுவதைப் கேட்பது போலில்லை அவள் அழுகையத் தாங்கிக் கொள்வது.
அம்மா புலம்பினாள் “நாங்கள் ஆசைப்படக்கூடாதைய்யா.. எதுக்குமே ஆசைப்படக் கூடாது எங்கட பிள்ளையை இன்ஜினியர் ஆக்கவேணும் நாங்கள் நல்லாயிருந்திரோணும் எண்டு ஒரு தாய் ஆசைப்படவே கூடாது” அதற்குப் பிறகு அம்மாவின் கண்ணீர் நிற்கவேயில்லை. நானும் ஊரில் நிற்கவில்லை. இப்போது இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிற இந்த அதிகாலையில் என் சென்னை அறைக்குள் மின்விசிறி நின்றுபோன ஒரு இரவில் வந்த ஒரு துர்க்கனவில் அம்மாவைக் கண்டேன். குண்டுகள் சூழ வீழ்ந்துகொண்டிருக்க அம்மா நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறாள். பாடும் போது அவள் முகத்தில் இருக்கிற தெய்வீகம் இல்லை நிறையச் சலனங்கள்.
ஆனாலும் பாடுவதற்குத்தான் அமர்ந்திருக்கிறாள். குண்டுகளின் இரைச்சல் காதுகளை நிறைக்கிறது. அம்மா கண்களை மூடிக்கொண்டு பாடத் தயாராகிறாள்.
ஸ.. ப.. ஸ..
சரியாகச் சுருதிசேராமல் அம்மா முகத்தைச் சுழிக்கிறாள். மறுபடியும் குண்டுகள் அம்மாவைச் சூழவும் விழுகின்றன ஆனால் அம்மா அதைக் கவனிக்காமல் மறுபடியும் சுருதி சேர்க்க ஆரம்பிக்கிறாள்.
ஸ.. ப..ஸ..
இந்தமுறையும் சுருதி சேரவில்லை.. நான் கத்தினேன்..
“அம்மா சுருதிப்பெட்டி எங்க? எங்க சுருதிப்பெட்டி? தாங்கோ நான் சுருதிப்பெட்டி போடுறன்”
“ இந்த முறை இடம்பெயரேக்க அதைக்கூட எடுக்கமுடியாமப் போச்சு மோனை..”அம்மா அழத்தொடங்கினாள்.. நான் திடுக்கிட்டு விழித்தேன். அம்மா குண்டுகள் புழுதி எதுவுமில்லை.. சென்னையின் வெக்கை புழுங்கியது. கண்களை மூடிக்கொண்டேன்.. அம்மா பாடத்தொடங்கினாள்
“எனக் கென்ன மனக்கவலை என்தாய்க் கன்றோ தினம் தினம் என்கவலை”
எழுதிய நாள்..02.03.2009
ellam sari, iyakkam pidithathu pilai endu oru mathiri solli pootingal. appa engalda nal valvuku enna vali. ungaluku kahtai eluthuvathu endal athu eaan iyakkam piditha pillai than varumoo. army piditha kondra pillaikal varathoo. ennthintha nakkura puthi ungalkuku? ippa than ellam mudinchu pooite. ungaluku than padippu varalla neengal poorada pooi iurkkalam tahnne.
அகிலன்,
எந்தவார்த்தையாலும் ஆறுக எனச் சொல்ல முடியாதபடி உங்கள் கதை.
சாந்தி
வெங்காட்டான்… நீங்கள் ஒரு அசல் ஈழத்தமிழன்.
எங்கட நல்வாழ்வுக்காக வெங்காட்டான் இயக்கத்துக்கு போகமாட்டாரோ.. ஓ.. ஒருவேளை அவருக்கு படிப்பு வாறபடியால.. வெளிநாட்டுக்கு போயிட்டாரோ..
படிக்காத ஆட்களெல்லாம் இயக்கத்துக்கு போகவேணுமோ..
நல்லாயிருக்கடா உங்கடை கதை.
—
நியாயமான ஏக்கம் த.அகிலன். இப்படி இன்னம் எத்தனையோ உறவுகள்.
ஆனாலும் விதி விளையாடிவிட்டது என்றுதான் நான் சொல்வேன். ஏனென்றால் புலிகள் ஆக்களை பிடிக்க ஆரம்பிக்கும் போது தான் நீங்கள் களவாக இந்தியாவுக்கு சென்றீர்கள். நீங்கள் இணைந்து கொண்டு அம்மாவின் ஆசையை நிறைவேற்ற தம்பியை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வாய்ப்பிருந்தது இல்லையா?????
என்னுடை இந்த கேள்வி உங்களை பாதித்திருந்தால் என்னை மன்னிக்கவும்.
வெங்கடேசன்: வெறும் வீராப்பு வசனங்களை மட்டும் கேட்டு பழகிய உங்களுக்கு புலிகளோடு 30 வருடங்களுக்கு மேலாக இருந்த மக்களின் மனம் எப்படி புரியும்? புலிகளை ஏசுவதற்கும் அணைப்பதற்கும் அந்த மக்களுக்குள்ள உரிமைபோல் எவருக்கும் இல்லை இனியும் இல்லை.
பின்னூட்டாங்கள் பதிவை தூக்கிவிடச் செய்யும் அபாயங்கள் நிலவும் ஒரு பேசாப் பொருளை பேசும் சூழலில் பேசாமல் இருக்க முடியாததும் ஒரு கொடுமை தான் 🙁 ஒரு வேளை ஆக்கிரமிப்பு முறியடிக்கப்பட்டு அனைத்தும் மாறியிருந்தால் வாலாட்டி வந்த பகைக்கு நாங்கள் காலொடித்து அனுப்பிய கதை என்று நீங்கள் கவிதை எழுதியிருக்கலாம். என்ன செய்வது வெற்றி பாராட்டப்படுவதை விட தோல்வி விமர்சிக்கப்படுவது வழமையானது. மற்றும்படி அம்மா என்பதும் சுருதி என்பதும் சுவாரசியம் கூட்டும் உத்தி. கடைசி மூச்சுக்காவே நிகழ்ந்தது அந்த ஆட்பிடி. வரலாறுகள் உங்களுக்கும் தெரியும் அகிலன். முதல் நடந்த எந்த இடபெயர்விலாவது புலிகள் பணயம் பிடித்தார்களா என்பதும் இதற்கு முன்பு எப்போதும் ஆட்பிடித்தார்களா என்பதும் காலம் அறிந்த உண்மை. மக்களை சிந்தித்திருக்காவிட்டால் ஆனையிறவு விழுந்து பளை ஆமி ஓடி சாவகச்சேரியிக்கு புலி வந்த அன்றைக்கு மாறியிருக்கும் இன்றைய கதை. நாங்கள் செய்யத்தவறிய பொறுப்புகளை அவர்கள் பரிசோதனை முயற்சிக்கு உட்படுத்தினார்கள் ஜெயித்தால் மகிழ்ந்திருப்போம் தோற்றோம் இகழ்ந்து கொள்கிறீர்கள். அனால் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு நியாயம் என்று ஒன்று இருக்கிறது அதை எந்த கதையாலும் பெருங்கதையாலும் மாற்றி விட முடியாது. (இது உங்களின் முந்தைய வெளியீட்டுக்கும் சேர்த்தே).
உலகில் போர் உக்கிரம் அடையும் தருணங்களில் பல நாடுகளிலும் கட்டாய இராணுவ சேவை அமுல் படுத்தப்படும்.போர் நிகழாத சிங்கப்பூரிலும்,இசுரேலிலும் இது இன்றும் நடக்கிறது.
போரில் ஆட்பலம் இருந்தால் வென்று விடுவோம் என்று புலிகள் தப்புக் கணக்குப் போட்டார்கள்.இது தான் கடைசி யுத்தம் என்று தப்புக் கணக்குப் போட்டார்கள்.வென்று இருந்தால் அது சரியான கணக்கு, நீங்களும் சயந்தனும் புலி வீரம் பற்றி கதை கட்டுரை கவிதை எழுதி இருப்பீர்கள்.அந்த வெற்றியில் மாண்டவர் பற்றி ஒரு வரியில் மாவீரருக்கு வீர வணக்கம் என்று முடித்திருபீர்கள்.
என்ன செய்வது புலிகள் தோற்று விட்டார்கள் இனி இப்படித் தானே எழுத வேண்டும்.
agilan nerupu sudum enru ellorum arinthathe but suddal than athan vali enna enru purium.ithai vasithu mudium pothu en kannil irunthu kanner vanthathu enenil ithu oru kathai alla nijam enpathu enaku therium.innum oru vidayam mele eluthiya nanparkaluku agilan thanathu kudumpa kathaiyai eluthi than kaviyan aka vendiya avasiyam illai enpathai unkalitu ariyatharukiren
அகிலன்.. http://sajeek.com/archives/194 இந்த பதிவு உங்களுக்கானதல்ல. இதனை 2007 இல் எழுதியபோது தீவிர யுத்தம் தொடங்கியிருக்கவில்லை..
Agiilan, ennal kaneerai addakka mudiavillai. Ippo nooru suruthi peddikal ammakku vanngikudukka vendum pol ullathu. Amma ella thunpangalil irunthu meendu vara vendum. kaddayam veraivil varuva.
hm!
நல்ல கதை. முன்னர் இதனை எங்கோ வாசித்திருக்கிறேன்.
நன்றிகள்.
naankal eppavum thottrirukka maddam.enkalai nankal thotkadikkamal irunthithunthal.
Air condition life la innamum:, enkada kastam puriyatha:, namma sanankal irukkekka…
Vithavai thayin valvu silrukku kathaiyamo? Kelvikal niyajamanthuthan, but unkal veeddu aduppil cat niththirai adiththirunthal niyajam unkal pakkam enru than vathadi iruppeerkal.
Manniththu vidunkal urvukale, vali avvalavu deep.
Elumpum tholumayththan ennemum antha thayi,
ilappukalai edu seyiyamuduyuma???
தீர்க்கவியலா துயரம்..!