இலங்கைத் தீவில் பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது இன்னமும் தொடங்கவில்லை. நாடு இப்பொழுதும் ஒரு இடைமாறு காலகட்டத்தில்தான் நிற்கிறது. பிரபாகரன் இல்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தமிழர்களே அதிகமாகத் தென்படுகிறார்கள். அவரை ஒரு சாகாவரம் பெற்ற மாயாவியாக உருவகித்து வைத்திருந்த அநேகமானவர்களுக்கு அவரில்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய ஆவியோடாவது கதைத்துவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர்கள் கண்ணாடிக் குவளைகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பிரபகாரன் அரங்கில் இல்லை என்பதே உண்மை. அவர் தப்பியோடி எங்காவது பர்மியக் காடுகளில் ஒளிந்திருந்தாலும்கூட இனி அவரால் அரசியல் செய்யமுடியாது. அவருடைய அரசியல் எப்பொழுதோ காலாவதியாகிவிட்டது. அவர் உயிருடன் தப்பியிருந்தாலும் கூட அரசியல்த் துறவறம் பூண்டு ஒரு தலைமறைவுச் சாட்சியாக இருக்கலாம். அவ்வளவுதான். அதாவது பிரபாரனின் யுகம் முடிந்துவிட்டது. நவீன தமிழ் அரசியலில் தோன்றிய ஒரு வீரயுகம் முடிந்துவிட்டது. அதை ஒரு வீரயுகம் என்று அழைக்கலாமா என்பதும் இப்பொழுதும் விவாதத்துக்குரியதே.
விடுதலைப் புலிகளின் வீரம் தியாகம் என்பவற்றைச் சூழ்திருந்த புனிதத்திரைகள் யாவும் நாலாம்கட்ட ஈழப்போரில் கிழிந்துபோய்விட்டன. தன்னையும் தன்னுடைய அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக அவர் ஆடிய சூதாட்டம் அவரை உலகின் மன்னிக்கப்படமுடியாத போர்க்குற்றவாளிகள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர்களின் பட்டியலில் சேர்த்துவிட்டது.
மாவிலாற்றிலும், முகமாலையிலும் தோற்கடிக்கப்பட்டபோது பிரபாகரன் நிதானமிழந்துவிட்டார். அவர் ஆட்சிசெய்த அரை அரசைப் பாதுகாப்பதற்காக அவருடைய பிரஜைகள் என்று அவர் நம்பிய சுமார் மூன்று இலட்சம் மக்களை அவர் வதைத்த விதம் அதை நியாயப்படுத்த அவருடைய ஆட்கள் சொன்ன பொய்கள் தோல்விகளையும் இயலாமைகளையும் மறைக்க அவர் தனது சொந்தச் சனங்களுக்கே அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகள் எல்லாமுமே அவருடைய தலையைச் சுற்றி அவருடைய அபிமானிகளால் வரையப்பட்டிருந்த ஒளிவட்டத்தை அழித்துவிட்டன. முதலில் அவர் வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று கேட்டார். முடிவில் வீட்டிலுள்ள வலுவுள்ள எல்லோரையும் கேட்டார். வராதவர்களைக் கடத்திச் சென்றார். எதிர்த்த உறவினர்களைச் சுட்டுக்கொன்றார் அல்லது அடித்து நொறுக்கினார். தனது பிடியிலிருந்து தப்பி அரச படைகளை நோக்கி ஓடிய தனது சனங்களைப் புறமுதுகில் சுட்டுக்கொன்றார் அல்லது தப்பியோடிப் பிடிபட்டவர்களை அடித்து நொறுக்கினார்.
நவீன தமிழ் அரசியலில் தனிநபர் வழிபாட்டின் உச்சமாகக் காணப்படுவது அவர்தான். அதேசமயம் தனது சொந்தச் சனங்களால் வேறெந்தத் தமிழ்த் தலைவரையும் தூற்றியிராத அளவுக்கு கேவலமான வசைச் சொற்களால் தூற்றப்பட்ட ஒரு தலைவராகவும் அவரே காணப்படுகிறார். அவர் தொடக்கி வைத்த தமிழின் நவீன வீரயுகம் எனப்படுவது அவரைத் தமிழ் வீரத்தை அதிகம் துஷ்பிரயோகம் செய்த ஒரு தலைவராகவே நிறுவிவிட்டு முடிந்திருக்கிறது.
பிரபாகரன்தான் எல்லாமும் என்று நம்புகிறவர்களைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டதுதான். 38 ஆண்டுகாலத் தமிழ் அரசியல் முழுவதும் வீணாகிவிட்டதுதான். ஆனால், பிரபாகரனோடு முடிவுக்கு வந்தது தமிழ் மிலிட்டரிசம் தான். தமிழ் அரசியல் அல்ல. தமிழின் நவீன வீரயுகம் ஒன்று அவருடன் முடிந்துவிட்டது இனி அறநெறியுகம் ஒன்று வரும். அதற்கிடையிலான ஒரு இடைமாறு காலகட்டத்திலேயே இப்பொழுது தமிழ் அரசியல் நிற்கிறது.
அறநெறிக்காலம் என்றதும் நாயன்மார்களும், ஆழ்வார்களும் வந்து உதித்து அதிசயங்கள், அற்புதங்களைச் செய்து தேவாரத் திருப்பதிகங்களைப் பாடப்போகிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக, தமிழின் முன்னைய வீரயுகங்களைப்போல யுத்தத்தின் படிப்பினைகளிலிருந்து வீரத்திற்குப் பதிலாக அறிவைப் போற்றும் ஒரு புதிய மரபின் எழுச்சியை அதாவது மரபு மாற்றத்தைக் கருதியே இங்கு இவ்வாறு கூறப்படுகிறது. அதாவது, புலிகளின் வீழச்சியிலிருந்து பெற்ற படிப்பினைகளிலிருந்து ஒரு புதிய தமிழ் அரசியல் வெளியை உருவாக்குவது என்ற அர்த்தத்தில்.
பிரபாகரன் ஒரு கெடுபிடிப்போரின் குழந்தை, அவர் கெடுபிடிப்போரின் இரு துருவ போட்டி அரசியலுக்கு ஊடாகவே வளர்ந்தவர். ஆனால், கெடுபிடிப்போரின் பின்னரான ஒரு துருவ உலக ஒழுங்கை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அல்லது அவரது தலையைச்சுற்றி வரையப்பட்டிருந்த ஒளிவட்டம் ஒரு புதிய உலக ஒழுங்கைப் புரிந்துகொள்ள அவரை விடவில்லை. அல்லது அதை இடித்துரைக்க வல்ல புத்திஜீவிகளை அவர் நெருங்கிச்செல்லவில்லை. முள்ளிவாய்க்காலில் அவருடைய வீழ்ச்சியின் இறுதிக்கட்டத்திலும் அவர் எதற்காகவோ காத்திருந்தும் கூட ஒரு துருவ உலக ஒழுங்கைச் சரியாக உள்வாங்காததன் விளைவுதான்.
ஒரு துருவ உலக ஒழுங்கை அவர் மட்டுமல்ல அவரைப்போன்ற ஒற்றைப் பரிமாண அரசியலை அவாவும் எவராலும் சுதாகரித்துக்கொள்ள முடியாதுதான். ஏனெனில், ஒரு துருவ உலகம் எனப்படுவது தகவல் தொழில்நுட்பம், நிதி மூலதனம் இரண்டினதும் திரட்சியாக எழுச்சிபெற்ற ஒன்று. தகவல் தொழில்நுட்பமானது தகவல்களை ஒரு மையத்தை நோக்கிக் குவித்தது. நிதி மூலதனமானது நிதியை ஒரு மையத்தை நோக்கிக் குவித்தது. தகவல் தொழில்நுட்பம் தகவலை அதாவது அறிவைத் திறந்துவிட்டது. நிதி மூலதனம் சந்தைகளைத் திறந்துவிட்டது. இரண்டும் சேர்ந்து தேசங்களின் எல்லைகளையும், கண்டங்களின் எல்லைகளையும் கரைத்து வருகின்றன. இவ்விதம் எல்லைகள் கரைந்துருவாகி வரும் பூகோளக் கிராமத்தில் எதுவும் தூயதாக இருக்க முடியாது. எல்லாமே ஒன்று மற்றதுடன் கலந்துதான் இருக்கமுடியும். இதில் தூய விடுதலையும் இல்லை. தூய இலட்சியங்களும் இல்லை. தூய தியாகமும் இல்லை. தூய துரோகமும் இல்லை. தூய வீரமும் இல்லை. தூய கோழைத்தனமும் இல்லை. எல்லாமே ஒன்று மற்றதிலிருந்து பிரிக்கப்படவியலாதபடி ஏதோவொரு விதத்திற்கு கலந்துதான் காணப்படுகின்றன. அதாவது கலப்பு நிறங்களின் யுகம் இது. அல்லது சாம்பல் நிற ஓரங்களின் யுகம் இது. தூயது என்று எதுவுமே தனித்து நிற்கமுடியாதளவுக்கு தொழில்நுட்பமும் நிதிமூலதனமும் உலகங்களை இணைத்துகொண்டுவருகின்றன.
இதனால் எதிலும் ஒற்றைப் பரிமாணம் என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றதாகி வருகிறது. அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலை, இலக்கியம் அனைத்திலுமே பல்பரிமாணம் அல்லது பல்லொழுக்கம் -மல்டி டிசிப்பிளின்- எனப்படுவதே முழுமையானது என்றாகி வருகிறது. எதிலும் பல்பரிமாணத்தை அல்லது பன்மைத்துவத்தை அல்லது கூட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் முழுமைத்துவத்துக்கு எதிரானவர்களாக காணப்படுகிறார்கள். இப்பூமியில் எதுவும் ஏதோவொரு முழுமையின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. எனவே, முழுமைத்துவம் எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் பன்மைத்துவம்தான். பன்மைத்துவம் எனப்படுவது அதன் அரசியல் பிரயோகத்தில் ஜனநாயகம்தான். இந்த யுகமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத எவரும் அரசியல்க் கூர்ப்பில் காலாவதியாகவேண்டியதுதான். பிரபாகரனுக்கும் இதுதான் நடந்தது.
கெடுபிடிப்போரின் குழந்தையான அவரால் கெடுபிடிப்போரின் பின்னரான ஒரு துருவ உலக ஒழுங்குடன் அனுசரித்துப்போக முடியவில்லை. எனவே அவர் காலாவதியாகி அரங்கிலிருந்து அகற்றப்பட்டார். அவரால் எதையுமே கறுப்பு வெள்ளையாகத்தான் பார்க்க முடிந்தது. அவரிடம் இரண்டே இரண்டு பெட்டிகள்தான் இருந்தன. ஒன்று கறுப்பு மற்றது வெள்ளை. இரண்டு பட்டியல்கள்தான் இருந்தன. ஒன்று தியாகிகளின் பட்டியல் மற்றது துரோகிகளின் பட்டியல். இந்த இரண்டுக்கும் வெளியே இந்த இரண்டுக்கும் இடையே சாம்பல் நிறத்திலும் பெட்டிகள் இருக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள அவருடைய ஒற்றைப் பரிமாண ஒழுக்கம் விட்டுக்கொடுக்கவில்லை. பூமி சாம்பல் நிற ஓரங்களை நோக்கிச் சுற்றிக்கொண்டிருக்க பிரபாகரனோ கறுப்பு வெள்ளை அரசியலை நடத்த முற்பட்டார். முடிவில் அரங்கிலிருந்து அகற்றப்பட்டார்.
எனவே பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது சாம்பல் நிற ஓரங்களை ஏற்றுக்கொள்வதுதான். அது நிச்சயமாக புலிகளின் சாம்பலில் இருந்துதான் வரவேண்டியிருக்கிறது.
பிரபாகரன் எல்லாவற்றையுமே பிரித்து வைத்திருந்தார். அவர் இலங்கைத் தீவை மட்டும் பிரிக்க முயலவில்லை. முதலில் அவர் தமிழ் அறிவைத் தமிழ் வீரத்திலிருந்து பிரித்தார். பின்னர் சிங்கள முற்போக்குச் சக்திகளை தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் அவர் தமிழர்களை தியாகி; துரோகி; மாற்று இயக்கம் என்று கூறுபோட்டுப் பிரித்தார். பின்னர் முஸ்லிம்களைத் தமிழர்களிடமிருந்து பிரித்தார். பின்னர் கிழக்குத் தமிழர்களை வடக்கிலிருந்து பிரித்தார். இவை தவிர ரஜீவ் காந்தியைக் கொல்லுமாறு உத்தரவிட்டதன் மூலம் இந்தியாவைத் தமிழர்களிமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம் கட்டம் ஈழப்போருக்கான புறநிலமைகளை உருவாக்கியதன் மூலம் மேற்கு நாடுகளை தன்னிடமிருந்து பிரித்தார். பின்னர் நாலாம்கட்ட ஈழப்போரில் தன்னையும் தன்னுடைய அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக அவர் முன்னெடுத்த ஆட்பிடி அரசியலும் அதன் தொடர் விளைவுகளும் அவரை அவருடைய ஆட்சிக்குட்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் பெரும்பாலாலனவர்களிடமிருந்து பிரித்தன. முடிவில் முள்ளிவாய்க்காலில் அவர் சுற்றிவளைக்கப்பட்டிருந்தபோது கவச குண்டலங்களை இழந்த கர்ணணைப்போலக் காணப்பட்டார்.
எனவே பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது என்னவெனில் தனது மெய்யான பலங்கள் எவையெவையோ அவற்றையெல்லாம் தன்னிடமிருந்து பிரித்துவைத்த அல்லது பிரிந்துபோகவைத்த ஒரு மனிதனின் வீழ்ச்சியைத்தான். எனவே, பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளி எனப்படுவது அவர் பிரித்துவைத்த எல்லாவற்றையும் ஒரு மெய்யான தேசிய அடித்தளத்தில் ஒன்றுசேர்த்து வைப்பதுதான்.
மேற்கத்தைய அறிஞர்களின் முடிவுகளின்படி தேசியம் எனப்படுவது ஜனநாயகத்தை அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது. இதன்படி கூறின் தேசியம் எனப்படுவது பன்மைத்துவத்தை அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது. அதாவது சாம்பல் நிற ஓரங்களைக் கொண்டதாக இருப்பது. எனவே பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது சாம்பல் நிற ஓரங்களை உடையதொன்றாக உருவாகவேண்டும்;. தமிழர்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியே தீவு முழுவதும் தீவுக்கு வெளியே பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலும் சாம்பல் நிற ஓரங்களை உருவாக்கவேண்டும். அதாவது மையத்தில் நிறங்களின் தனித்துவங்கள் துலங்கும் அதேசமயம் ஓரங்களில் கலப்பு நிறங்களை அதாவது சாம்பல் நிற ஓரங்களைக் கொண்ட ஒரு முழுமை.
சாம்பல் நிற ஓரம் அல்லது சாம்பல் நிறத் தமிழ் அரசியல் வெளி எனப்படுவது, குறிப்பாக புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் அதைப்பற்றி உரையாடுவது என்று சிலருக்கு சரணாகதி அரசியலோ என்று தோன்றக்கூடும். அதாவது வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் இடையிலான கோழைத்தனமான ஒர் உடன்படிக்கைக்கான கோட்பாட்டு விளக்கமா இது என்று கேள்விகள் வரும்.
இல்லை. நிச்சயமாக இல்லை.
சாம்பல் நிறம் என்று இங்கு கூறப்படுவது எதுவும் தனது தனித்துவத்தை இழந்து மற்றதுடன் இரண்டறக் கரைந்து சங்கமாகிவிடுதல் என்ற அர்த்தத்தில் அல்ல. ஒன்று மற்றதுடன் கரைந்து எல்லாமும் ஒரே கலவையாக மாறிவிடுதல் என்பதும் ஒற்றைப் பரிமாண வாதம்தான். அது பன்மைத்துவத்துக்கு எதிரானதுதான். மாறாக, இங்கு சாம்பல் நிறம் என்று கூறப்படுவது எதுவெனில், எதையும் கறுப்பு வெள்ளையாக மட்டும் பார்க்கக்கூடாது என்ற அர்த்தத்தில்தான். எதுவும் தனது தனித்துவத்தை இழந்துவிடாமலிருக்கும் அதேசமயம் மற்றொன்றுடன் கலந்து வாழ்தலே இது. மையத்தில் நிறத்தின் தனித்துவம் துலங்கும் அதேசமயம் ஓரத்தில் கலப்பு நிறங்கள் (சாம்பல் நிறம்) காணப்படும். இதுதான் மெய்யான பன்மைத்துவம். அதாவது தனித்துவம் மிக்க இரண்டு சிறு முழுமைகள் ஒன்று மற்றதுடன் இணைந்து ஒரு பெரிய முழுமை உருவாகிறது. இதன்படி ஒன்று அது அதுவாக இருக்கும் அதேசமயம் ஒரு பெருமுழுமையின் தவிர்க்கப்படவியலாத ஒரு பகுதியாகவும் இருக்கும். தொழில்நுட்ப வார்த்தைகளில் இதுதான் இன்ரநெற் உலகம். அரசியல் அர்த்தத்தில் இதுதான் பன்மைத்துவம். இதுவே மெய்யான ஜனநாயகத்துக்கான தகர்க்கப்படமுடியாத அடித்தளமும்கூட. இதற்குத்தான் ஒப்பீட்டளவில் அதிகளவும் வீரம் தேவை. சுத்த வீரர்களால்தான் தமது தனித்துவங்களை இழந்துவிடாதிருக்கும் அதேசமயம் மற்றவர்களின் தனித்துவங்களையும் அங்கீகரிக்க முடியும்.
எனவே சாம்பல் நிற ஓரங்களின் அரசியல் எனப்படுவது அதன் பிரயோக இயக்கத்தில் பன்மைத்துவம்தான். ஒற்றைப் பரிமாண அரசியல் எதுவுமே பன்மைத்துவத்துக்கு எதிரானது. தமிழ் அரசியல் எனப்படுவது கடந்த சுமார் கால்நூற்றாண்டுக்கும் மேலாக பெருமளவுக்கு ஒற்றைப் பரிமாண அரசியலாகவே உருவாகி வந்திருக்கிறது. ஒற்றைப் பரிமாண அரசியல் எனப்படுவது அதன் பிரயோக வடிவத்தில் இராணுவ அரசியல்தான். தமிழ் மக்கள் கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக இராணுவமயப்பட்டு வந்துள்ளார்கள்.
இதனால் தமிழ் அரசியலை பன்மைத்துவத்தை நோக்கிக் கொண்டு வருதல் என்பது அதை இராணுமயநீக்கம் செய்வதுதான். ஒரு சமூகத்தை இராணுவமயநீக்கம் செய்வது என்றால் அதை ஃபியர் சைக்கோஸிஸ் (அச்ச உளவியல்) இலிருந்து விடுவிக்கவேண்டும். ஏகப்பரிமாண அரசியலின் பிரதான தோற்றப்பாடே ஃபியர் சைக்கோஸிஸ்தான். எனவே ஃபியர் சைக்கோஸிஸ் இலிருந்து தமிழ்ச்சமூகத்தை முதலில் விடுவிக்கவேண்டும். அதற்கு சிவில் கட்டமைபுக்களை உருவாக்கவேண்டும்.
ஒரு சமூகத்தை ஃபியர் சைக்கோஸிஸ் இலிருந்து விடுவிப்பதென்றால் அங்கே மூடப்பட்டிருக்கும் எல்லாக் கதவுகளையும் திறக்கவேண்டும். மக்களை அவர்களுடைய பதுங்கு குழிகளை விட்டு வெளியே வருமாறு ஊக்குவிக்கவேண்டும். சுமார் கால்நூhற்றாண்டுக்கும் மேலாக ஏன் அதற்கு முன்பிருந்த தமிழர்கள் ஏதோவொரு பதுங்கு குழிக்குள்தான் வசித்துவருகிறார்கள். ஒன்றில் பண்பாட்டுப் பதுங்குகுழி அல்லது சாதிப் பதுங்குகுழி அல்லது பிரதேசவாத மற்றும் ஊர்வாதப் பதுங்குகுழி. இவற்றுடன் பிரபாகரன் கொண்டுவந்த இராணுவப் பதுங்குகுழி.
எனவே, தமிழர்களை முதலில் பதுங்குகுழிகளுக்குள் இருந்து வெளியே எடுக்கவேண்டும். அதற்குவேண்டிய எல்லாவிதமான உரையாடல்களுக்கும் சுயவிமர்சனங்களுக்குமான கதவுகள் அகலத் திறக்கப்படவேண்டும். பிரபாகரனின் ஆவியோடு உரையாட விரும்புவோர் முதல் தமது மனச்சாட்சிகளோடு உரையாடட்டும் அப்பொழுதுதான் ஒரு அறநெறி யுகத்தின் பிறப்பை அவர்களால் ஆமோதிக்க முடியும். அப்பொழுதுதான் சாம்பல் நிற ஓரங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இது விடயத்தில் இலங்;கைத் தீவுக்குள்ளும் தீவுக்கு வெளியே தமிழ் நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள அனைத்து புத்திஜீவிகளும் கலைஞர்களும் அக்கறை கொண்ட எல்லாரும் ஒன்றுதிரளவேண்டும்.
கறுப்பு வெள்ளை அரசியல் எனப்படுவது நாடுகளையும், கண்டங்களையும், உலகங்களையும் மூடுவது.
ஆனால், சாம்பல் நிற ஓரங்களின் அரசியல் எனப்படுவது நாடுகளையும், கண்டங்களையும், உலகங்களையும் திறந்துவிடுவது:
கறுப்பு வெள்ளை அரசியல் அறிவின் எதிரி. சாம்பல் நிற அரசியலோ அறிவின் தோழன்.
கறுப்பு வெள்ளை அரசியல் ஒரு சமூகத்தை இராணுவமயப்படுத்தும். சாம்பல் நிற அரசியலோ ஒரு சமூகத்தை இராணுவமய நீக்கம் செய்து சிவில் கட்டமைப்புக்களை உருவாக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் ஏகப்பரிமாண அரசியலில் போய் முடியும். சாம்பல் நிற அரசியலோ பன்மைத்துவத்தை ஸ்தாபிக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் அச்ச உளவியலைப் பாதுகாக்கும். சாம்பல் நிற அரசியலோ மனித உரிமைகளைப் பாதுகாக்கும்.
கறுப்பு வெள்ளை அரசியல் கசப்பை, வெறுப்பை, வன்மத்தை, பழிவாங்கும் உணர்ச்சியைப் பேணும். சாம்பல் நிற அரசியலோ சகிப்புத்தன்மையையும், நல்லிணக்கத்தையும் பேணும்.
கறுப்பு வெள்ளை அரசியல் தன்னுடைய மெய்யான பலங்களைத் தன்னிலிருந்து பிரித்து முடிவில் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் போய் வீழ்ந்துவிடும்.
ஆனால், சாம்பல் நிற அரசியலோ எல்லாத் தரப்பினரையும் தன்வசப்படுத்தி எதிர்ப்பையும் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் வந்துவிழச் செய்துவிடும்.
பிரபாகரனின் கறுப்பு வெள்ளை அரசியலாசை முடிவில் அவரது “பகைவர்களுக்கே” வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டது. 38 ஆண்டுகாலப் போராட்டத்தின் முடிவில் தமிழர்கள் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற இழிநிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
ஆனாலும் வீழ்ச்சியுற்றிருப்பது பிரபாகரனிஸம் மட்டும்தான். நிச்சயமாகத் தமிழ் அரசியல் அல்ல. எனவே, பிரபாகரன் விட்ட தவறுகளிலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் ஒரு புதிய தமிழ் அரசியல்வெளி உருவாக்கப்படவேண்டும்.
இனிப் பதுங்கு குழிகளும் வேண்டாம். புதை குழிகளும் வேண்டாம்.
தியாகிகள் பட்டியலும் வேண்டாம். துரோகிகள் பட்டியலும் வேண்டாம்.
வீரத்தை வழிபடப்போய் முடிவில் மரணத்தை மகிமைப்படுத்தி வாழ்வை நிராகரித்தது போதும்.
இனி அறிவை வழிபடுவதிற் தொடங்கி வாழ்வை ஆமோதிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகம் தேவை.
தான் சாகத் தயாராக இருந்த ஒரே காரணத்திற்காக பிற உயிர்களை ஒரு பொருட்டாகத்தானும் மதிக்காத ஒரு வீரமரபு இனி வேண்டாம்.
பதிலாக, தன்னுடைய உயிரின் பெறுமதி தெரிந்த காரணத்தினாலேயே பிற உயிர்களையும் தன்னுயிர்போல நேசிக்கும் ஒரு புதிய அரசியல் நாகரீகமே இனித் தமிழர்களுக்கு வேண்டும்
அதாவது புதிய சாம்பல் நிற அரசியல்வெளி ஒன்று வேண்டும்.
முக்கிய குறிப்பு
இந்தக்கட்டுரை நானெழுதிய கட்டுரை அல்ல.ஆனால் இந்த கட்டுரையில் சொல்லப்படுகின்ற உண்மைகள் நான் பேசவிரும்பியவை ஆனால் அதைப் பேசுவதற்கான இடத்தில் நான் இருக்கவில்லை என்பதால் பேசாமல் விட்டவை. இப்போது இந்தக்கட்டுரை இலங்கையின் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு அகதிமுகாமின் தறப்பாளின் கீழிருந்து எழுதப்படுகிறது. இந்தக் குரலை நீங்கள் புறந்தள்ளமுடியாது. அவர்கள் இறுதிச் சாட்சிகள். என்னையும் சேர்த்து வெறுமனே அந்த அவலத்தின் பார்வையாளர்களாக இருந்தவர்களின் குரல் அல்ல இது. இறுதி வரை வன்னியில் இருந்த மனிதர்களின் வார்த்தைகள். புலி எதிர்ப்பு,புலி ஆதரவு,தமிழ்த்தேசியவாதி,அல்லது அதன் துரோகி.. இந்த மாதிரியான புடுக்கு வார்த்தைப் பிரயோகங்களை விட்டு விட்டு. இந்தக் குரலை மனசாட்சியோடு கேட்கத் தொடங்குவோம்.. அந்த முகாம்களில் இருக்கிற மக்களின் குரலாய் அந்த வாழ்க்கையைப் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் வெளியில் இருந்து ஒலிக்க நினைக்கிற குரல்களைப் போலல்ல இது. அந்த சுழலுக்குள் சிக்கி இருப்பவர்களின் வார்த்தைகள் நிஜத்தின் வார்த்தைகள். போரின் உண்மைச் சாட்சிகள். வன்னிமக்களின் குரல்கள்.
CAN YOU CALL ME AT 647-829 7574 .I AM ANTON .I LIKE TO TALK WITH YOU ABOUTE THIS ARTICAL
வணக்கம் நீங்க எனது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாமே அன்ரன்.. எனக்கு ஒரு நான்கைந்து அன்ரன்களைத் தெரியும் அவர்களில் எனது தொலைபேசி இலக்கம் தெரியாத அனன்ரன் யாரும் இல்லை.. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்..
வணக்கம் நீங்க எனது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாமே அன்ரன்.. எனக்கு ஒரு நான்கைந்து அன்ரன்களைத் தெரியும் அவர்களில் எனது தொலைபேசி இலக்கம் தெரியாத அனன்ரன் யாரும் இல்லை.. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்..//
என்ன விசர்கதை கதைக்கிறீர்..
வெளிநாடுகளில இருந்துகொண்டு எனக்கொருக்கா கோல் பண்ணும் என்று வந்தால் நீர் பண்ணத்தான் வேணும். ஏனென்டால் அவை மேலயெல்லோ இருக்கினம். இப்பிடித்தான்.. ஓடர்கள் போடுவினம்.
வன்னியில் வாழ்ந்தவனுக்குதான் தெரியும் புலிகள் எப்படிப்பட்டவர்கள், அவர்களது சுய மூபம் என்ன எனபது? வெளிநாடுகளிலும் வன்னிக்கு வெளியிலும் இருந்து கொண்டு ‘அண்ண விடார்’ கனவில் இருப்பவர்களுக்கு இக்கட்டுரையின் உண்மைத் தரிசனத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அவர்களது பிழைப்பு கெட்டுவிட்டது. வன்னி மக்களின் சாவில் பிழைத்தவர்கள் அல்லவா இத்தகையவர்கள்?
அகிலன் உன்னைப்பற்றி தெரியும் இவ் ஆய்வுரை எழுதிய நிலாந்தன் பற்றியும் தெரியும் .நீ சிலவேளைகளில் என்னை மறந்து இருக்கலாம்
மறந்து இருந்தால் வன்னி tech ஐ நினைவு படுத்திபார். சிலவேளைகளில் நினைவு வரலாம் .நிலாந்தன் 2004 -2005 காலப்பகுதியில் எழுதிய ஆய்வுகளில் புலிகள் பற்றி எப்படி எழுதி இருந்தார் என்று நீ அவற்றை வாசித்து இருந்தால் தெரியும் அல்லது அதையும் நீ மறந்து விட்டாயோ தெரியாது. இப்போது அவர் எப்படியான நிலையில் இருந்து கொண்டு இப்படி எழுதினாரோ எனக்கு தெரியவில்லை..அவர்களும் மனிதர்கள் தான் பிழை விட்டு இருக்கலாம்.இறந்தவர் மீது வசை பாடாமல் விட்டுவிடுதல் நலம். இதற்கு மேலாக எம் எல்லோர் கைகளிலும் அவர்களின் இரத்தம் இருக்கிறது.
எனது குடும்பமும் வன்னியில் தான் இருந்தது.
நிறைய எழுத நினைக்கிறேன் ஆனாலும் …….என்னுடன் ஒன்றாக படித்ததனால் நீ என்று அழைத்துவிட்டேன் மன்னித்து விடு
// இப்போது இந்தக்கட்டுரை இலங்கையின் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிற ஒரு அகதிமுகாமின் தறப்பாளின் கீழிருந்து எழுதப்படுகிறது //
….உண்மை இதிலிருந்தே தெரிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே !!!
இலங்கைப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் எவர் வேண்டுமானாலும் இதுபோல் எழுத முடியும்….
உங்களது சிகப்பு வரிகளை படிக்கும் போது….
இதுவரை நான் எழுதியதை தயவு செய்து நம்பி விடுங்கள் என்று கெஞ்சுவது போல் உள்ளது…
இக்கட்டுரை ஏன் ஓர் நிர்ப்பந்தத்தின் கீழ் எழுதப்பட்டிருக்கக்கூடாது ??
ஆக,. எம் உறவுகளை அழித்த சிங்களன் நல்லவன்.
முள்வேலி என்ற பெயரில் சித்ரவதை செய்துக்கொண்டிருக்கும் சிங்களன் மனிதன்.
புலி அடிப்பட்டதும், பின்னோக்கி ஓடுகின்ற சிலரைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.
ஏனோ,
இதுபோல் வரும் சில ‘ கதைகளை’ கூட கேட்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது.
இதற்கு மேல் பேச நா எழவில்லை……
தொடரட்டும் …..
ellam nokkam sare enral ellam okthan
அற்புதன்,சாத்திரி,கொண்டோடி போன்றவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தாம் முடிகிறது.
புலிகளைக் குறித்து அன்றெழுதிய நமது விமர்சனங்களையெல்லாம் “துரோகி- எட்டப்பன்” சொல்லியும்,தனிநபரது நடாத்தையை ,அவதூறுமூலம் இந்தச் சாத்திரி என்ற பேமானி எழுதித் தள்ளியும்,புலிக்கு வக்காலத்து வேண்டிய அடிமுட்டாள்களெல்லாம் இப்போது புது வேடமிட்டு மக்களுக்காக அழுகிறார்கள்!
காலம்தாண்டா இது!
வன்னியில் ,கிழடுகளுக்குப் பொல்லுத்தடி கொடுத்துப் போட்டோ போட்ட அற்புதன் ,”இதுதாம் மக்கள் போராட்டம் “என்றான்;எழுதி வைத்துக்கொள்ளுங்கள் புலிகள் வெல்வார்களென்றான்.
நாம் அன்று ,புலிகளைப் பூண்டோடு அழிப்பார்களெனக் கட்டுரையெழுதியதன் விளைவில் இவற்றைப் பேசிய இந்த தேசிய பாற்புட்டிகள்,இப்போது இக்கள்டுரையை ஆமொதிப்பதும் “கருப்பு-வெள்ளை”சொல்லவும் முடிகிறது!
இந்தக் கூட்டம் கருத்துக்களோடு நின்றிருந்தால் பறுவாயில்லை.ஆனால் ,இலட்சம் மக்களைக் கொலைக் களத்துக்குத் தயாரித்த இவர்களை ,நமது மக்கள் மன்னிக்க முடியுமா?
தமிழ்ச் செல்வன் குருதியிலிருந்து ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் தோன்றுவார்களென வீரம் பேசிய கூட்டத்தின் தலைவனின் குருதியிலிருந்து, அவனுக்கு அஞ்சலியே தோன்றதபோது,இப்போது நான் எழுதியதன் பலன்கள் வரலாற்றில் இவர்களது அடி முட்டாள்தனத்தைத் தலைமுறைக்குச் சொல்லித்தான் செல்லும்!
காலம் அனைத்துக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறது-கயவர்களையும் தோலித்துக் காட்டியபடி!
ப.வி.ஸ்ரீரங்கன்
05.12.2011
பிச்சை வேண்டாம்,நாயைப்பிடி:புலிகளது போராட்டஞ் சரியானது!
” மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாகத்தாமிருந்திருக்கிறது.இதைப் புரியாதிருக்கும் ஒரு காலத்தை இனிமேலும் தக்கவைப்பதற்கு எல்லாத் தரப்பும் அதி சிரத்தையெடுத்தபடி “தேசிய உரிமை”பேசுகின்றன.”
இனவொதுக்குதலுக்கும்-ஒடுக்குமுறைக்குள்ளாகுமொரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் எதிர்ப்புப்போராட்டமென்பது, அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருதே முன்னெடுக்கப்பட வேண்டும். சுயநிர்ணய-விடுதலைப் போராட்டமென்பதைத் தவறான வகையில் “தமிழீழ விடுதலை”என்ற கோசத்துக்குள் உட்படுத்தித் தமிழர்களது சுயநிர்ணயவுரிமையையே அழித்த அந்நியத் தேசங்கள் புலிகளது வரவினூடாகச் சாதித்த இந்த த் திட்டமிடப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கெதிரான வரலாற்றுப் பழியானது நமது மக்களையும் இளைய தலைமுறையையும் மீளவும் ஏமாற்றிவிடும் சூழலொன்றைத் திட்டமிட்டுவுருவாக்குகிறது.இன்றைய ஆளும் வர்க்க-அதிகார நிறுவனங்களது கருத்தியல் தளத்தை உருவாக்கும் ஊடகங்களை மெல்லக் கவனிப்பவர்களுக்கு இந்தவுண்மை எப்போதும் முகத்தில் ஓங்கி அடித்தே தீரும்! முள்ளி வாய்க்காலுக்குப் பின்பு புலிகளது விசுவாசிகளில் பலர் போதகர்களானார்கள்.அவர்களுக்குத் தலைமைகொண்ட கே.பி. மக்களுக்குச் சாப்பாடு போதுமெனவும்”அபிவிருத்தி”யே சுயநிர்ணயமென்றும் வகுப்பெடுக்கும்போது,அவரது தலைமைக்குட்பட்ட கருத்துக் குட்டிகள் சொல்வதென்னவாக இருக்கும்?
இதில் நிலாந்தன் விதிவிலக்காக முடியுமா,அல்லது தமிழ்ச் செல்வன் துணைவி விதிவிலக்காக முடியுமா?ஏன் முக நூல் வட்டத்துத் தேசிய ஆர்வலர்கள் விதிவிலக்காக முடியுமா?இந்த விதிவிலக்கு மக்களுக்கான அரசியலைப் பேசுவதென்பதில் மையங்கொள்கிறது!
சில வியூகங்களும், அந்நிய லொபிகளும்:
1: புலிகளது தவறுகளை,போராட்டச் செல்நெறியின் பாரிய ஊசலாட்டத்தைச் சரியானதெனவும்,மக்களை வன்னியில் கட்டாயமாக மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதும்,பலம் பொருந்திய இலங்கைப் பாசிச இராணுவத்துக்கு எதிராகப் போராடும்படி முன் நிறுத்திப் பலிகொடுத்ததும்,முகம்கொடுக்க முடியாது பின் வாங்கியவர்களைப் புலிகள் தண்டித்துச் சுட்டுக்கொன்றதும்,விடுதலைப்போராட்டத்தில்-தேசத்தைக் காக்கச் சரியானதென விவாதிக்கும் கருத்தை உருவாக்கல்.பிரபாகரனைத் தொடர்ந்து உயிர்வாழுவதாகவும்,அவர் ஒரு மகத்தான மனிதரெனவும்,தேசிய விடுதலையைத்தப்புத் தவறுமற்று முன்னெடுத்தவராகவும்,தமிழ்த் தேசியத்தின் குறியீடாகி வைத்துக்கொள்வதும்,
2:அக்கருத்துக்கு நியாயமாக,பாசிசக் கிட்டலரை எதிர்த்துப் போராடிய இருஷ்சியச் செம்படைகளை ஒப்பீடு செய்து,புலிகளது தவறுகளையும்,மக்கள் விரோதத்தையும் நியாப்படுத்துதல்.புலிகள் சரியான பாதைகளின்வழியேதாம் போராடியதாகக் கருத்துக்கட்டி, மீள ,மீள நம்மை ஏமாற்றுதல்,தவறான பாதையின்வழியே நமக்குப் போராடக் கற்றுக்கொடுத்து இறுதியில் தோற்கடிக்கத்தக்க சூழலை உருவாக்கிக்கொள்ளல்.
மேற்கூறிய வியூகத்துக்கிணைவாக,பல்கலைக்கழக மாணவர்களை,உசுப்பேத்தித் தமிழ்பேசும் மக்களை மேலும் ஒட்ட மொட்டையடிக்கும் அந்நியச் சக்திகளது வியூகமானது நிரந்தரமாகத் தமிழ்பேசும் மக்களை உணர்ச்சி அரசியலுக்குள் கட்டிப்போடுவதில் மிக விவேகமாக முன்னேறுகிறது.இது முள்ளி வாய்காற் படுகொலைகளுக்குப் பின் மிகச் சாதுரியமாகக் கருத்தியலை முன்வைத்து நகர்கிறது.இதன் பின்னே யார் இருக்கிறார்கள்,இதைத் உந்தித் தள்ளும் பொருளாதார ஆர்வமென்ன?சிந்திக்க வேண்டும்!
இதைப் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பங்களை நாம் உருவாக்க வேண்டும்.
புலிகளது தவறுகளைச் சரியானதென நிறுவிக்கொள்வதால் என்ன நிகழும்?
இந்தக் கேள்விக்குப் பெரிதாகச் சிந்திக்க தேவையில்லை.தவறுகளைத் திருத்திக்கொள்ளாதவரை நமது தேர்வுகள் தப்பாகவே இருக்கும்.சதா படிக்காமல் ரோட்டுச் சுத்திவிட்டுத் தேர்வில் தோற்ற மாணவர்களை”இல்லை நீ செய்தது சரி”உனக்கு எதிராகப் பரிசோதகர் மார்க்ஸ் போட்டுவிட்டான் என்ற கதையாகவே புலிகளது தவறுகளைச் சொல்லிக்கொடுக்கும் இன்றைய தலைமுறைக்கு, உலகப் போராட்டங்கள், விடுதலை-புரட்சியின் புறநிலைமைகள் குறித்து எந்தவிதப் புரிதலும் அவசியமில்லாதபடி “ஒரு பொறி”க்காக மக்கள் காத்திருப் பதாகவும்”திடீர்ப் புரட்சி”ரெடி எனும்படி உலகம் புரிந்து போகிறது. இதுதாம் ஆபத்தானது!
புலிகளது தவறுகளைக் கண்டுகொள்ளாதிருக்கவும்,அவர்களது தியாகங்களை மகத்துவப் படுத்தலூடாகவும்,போராட்டத் தவறுகள் மறைக்கப்படுகின்றன.இந்த வரலாற்றுத் தவறுகளை நியாயப்படுத்துவதனூடாக மீளவும் புலிவழிப் போராட்டச் செல்நெறியும் மக்களைப் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தி இயக்கவாத மாயைக்குள் கட்டிப்போடுவதால் புலிகள் அழிந்த இந்த வெற்றிடத்தில் உருவாகப்போகும் புரட்சிகர அணிதிரட்சிக்கெதிராக மக்களைத் திசை திருப்புவதும்,தொடர்ந்தும் உணர்ச்சி வழிப்பட்ட தேசியப் பெருமிதத்தைப் புலிக்களுக்கூடாகக்கட்டி, அவர்களை அதன்வழி சிந்திக்க வைப்பதுமே அந்நியச் சக்திகளுக்கு அவசியமாகவிருக்கிறது.குறிப்பாக இந்திய ரோ இங்ஙனமே செய்யத் தூண்டுகிறது.
இதனால்,அந்நியச் சக்திகள் அடையும் பலன், பல வடிவங்களிலானது.அவர்கள் இருவிதமான தந்திரத்தில் இளைய தலைமுறையைத் தகவமைத்து வருகிறார்கள்.அவை கீழ்வரும்படி அமைகிறதென அண்மைய முகநூல்-இணைய ஊடகக்கருத்தாடற் போக்குகள் நிரூபிக்கின்றன.
முதலாவது வகை:
1: புலி அற்ற தமிழ் அரசியற்பரப்பில் ஜனநாயக நீரோட்டம் அரும்புவதை(பல்தரக்கருத்தாடல்,வெளிப்படையான பொதுத் தள அரசியல்,குடிசார் அமைப்புகளது முகிழ்ப்பு,மக்கள் பல் முனைக் கருத்தாக்கங்களால் உந்தப்படல்,உளரீதியாகச் சமூகவுணர்வை புறநிலையில் இருந்து பெற்று அதையே மீளத் தகவமைத்தல் போன்றவை)தடுத்தல்,
2:போராட்டவுணர்வுமிக்க தலைமுறைகளது சிந்தையில் புலிகளது கருத்தியலை மீளத் தகவமைத்துத் தேசத்தைக் கட்டும் அபிலாசையை சுயமாகத் தீர்மானிக்கும் உணர்வை அடியோடழித்தல்,
3:நண்பர்கள் யார்-எதிரிகள் யார் என்ற கேள்விக்கு விடை தெரியாதிருப்பதும்,தேசிய விடுதலையை ஏகாதிபத்தியத் தயவில் வென்றெடுக்கும் லொபி அரசியலைத் திட்டமிட்டு விதைப்பதற்காகவேனும் புலிகளது தோல்விகளைத் தப்பான போராட்டச் செல்நெறியைச் சரியானதெனக் கட்டியமைத்துக் கருத்தாட வைத்தல்,இதன்வழியாக இளைஞர்களை மீளவும் புரட்சிகரமான உணர்விலிருந்து அந்நியப்படுத்தித் தலைமை வழிபாடுடையவொரு தலைமுறையாக்கிக் கொள்ளல்(இது பெரும்பாலும் ஓட்டுரகச் சிந்தனையின் மறுவடிவமான இயக்கவாதக் கட்டுமானமே),இதற்குத்தோதாக அந்நியச் சக்திகள் இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு நல்குதல்.இதைத் தேசிய விடுதலை,தமிழ்பேசும் மக்களுக்கான நியாயம் கிடைப்பதற்கான வழிமுறையென வகுப்பெடுத்துக்கொள்ளல்,இதன்வழி அந்நியச் சேவைக்குத் தகுந்த அடியாட் படைகளை மீளத் தகவமைத்துக் கொள்ளல்,
4:பலதரப்பட்ட தளத்திலிருந்து புலிக்கு ஆதரவான சக்திகளைத் தொடர்ந்து உருவாக்குதல்,இது பல்கலைக்கழக மாணவர்களிலிருந்து பாட்டாளிவர்க்கம்வரை திட்டமிடப்பட்ட சுழற்சி ரீதியான கருத்தியல் உருவாக்க நிகழ்ச்சி நிரலைத் தயார்ப்படுத்திக்கொள்ளல்,வர்க்க உணர்வு பெறும் சமூக வேலைத் திட்டங்கள் குறித்துச் சிந்திக்காதிருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதும்,புரட்சிகரமானவொரு கட்சியின் உருவாக்கத்தைத் தொடர்ந்து சிதறிடிப்பதற்கான புலிவழித் தேசியத்தைப் பரப்புதல்-புலிகளைத் தியாகிகளாக்கி மக்களிடம் ஒருவித மாயையைக் கட்டியமைத்து,உரிமைகளை மழுங்கடித்தல்,
இதன்வழியாக ஒரு தேசிய இனத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியான உணர்வைச் சிதைத்து, அவர்களை வெறும் இனக் குழுவாக்கும் வன்மையான போக்கை,மென்மையான முறையில் நிறுவிக்கொள்ளல்.
இரண்டாவது வகை:
இந்த இரண்டாவது வகையானது எப்பவுமே,புலிகளை விமர்சித்தபடி,போராட்டம் என்பது இனிமேல் சரிவாரதென்ற தோரணையில் “பிச்சை வேண்டாம் நாயைப்பிடி”,என்ற கோசங்களுக்கமையக் கருத்தியலைப் பின்னிக்கொள்ளும்.
இன்று நிலாந்தன் போன்றவர்களது கருத்தானது இங்ஙனமே கட்டியமைக்கப்பட்டுவருவதில் அந்நியச் சக்திகளது இராண்டாவது வகையான அணுகுமுறை இங்கு மையங்கொள்கிறது.இதுதாம் சாணாக்கிய தந்திரமாகும்.இதை உரைத்துப்பார்ப்போமா?
1:புலிகளது முன்னால் உறுப்பினர்கள்,விசுவாசிகள்,அவர்களது அரசியல்-பிரச்சாரகப் பரிவுகளிலிருந்து தெரிந்தெடுத்த நபர்களைவைத்து இத்தகைய போக்குக்குச் சார்பான கருத்தியலை உருவாக்குதல்,
2: மாற்றுக் குழுக்களுக்குள் இருந்து மலினப்பட்ட சக்திகளை(வருவாய்க்கேற்ப இயங்கிக்கொள்ள முனையும் போலி-பினாமிக் குழுக்கள்.முன்னாள் இயக்கங்களிலிருந்து புலிக்குப் பினாமியாக இயங்கிய என்.எல்.எப்.ரீ யின் பிளவுக்குழுக்கள்வரை) திடீர் புரட்சி,கட்சிகளெனக் கட்டவைத்தலும்,ஆட்களைக் காட்டிக் கொடுத்துப் புரட்சிகரச் சக்திகளை அழித்தலும்,
3: புலிகளது மேல் நிலைக் கைகாட்டிகளை வைத்து, இலங்கை அரசினூடாக மக்களை அண்மித்தல். போராட்டமானது பிழையானது,மக்களை அழித்த அந்தத் திசைவழி தேவையற்றதெனக் கருத்துக்கட்டி, மக்களைத் தொடர்ந்து பலவீனப்படுத்தி அடிமையாக்குவது.அதிகாரங்களுக்குப் பணிந்து போகவைக்கும் வியூகத்தை இதன் போக்கில் தகமைத்து, மக்களை வெறும் நுகர்வடிமைக் கூட்டமாக்கிக்கொள்ளல்.
இதை,இங்ஙனம் புரிந்துகொள்ளவேண்டும்:அதாவது,
1: புலிகளது போராட்டஞ்சரியானதெனக் கட்டியமைப்பதால்,நேர்த்தியான புரட்சிகரமான மக்களது பாத்திரத்தை இல்லாதாக்கல்,சரியான செல்நெறியை மழுங்கடித்தல்,மீளவும் போராடும் மக்களை புலிவழி செலுத்தித் தோற்கடித்தல்,
2: புலிகளது போராட்டம்,மக்களைக் கொன்று குவித்ததன் விளைவாக,எதுவுமே சரிவரவில்லை,போராட்டம்-விடுதலை என்பது அழிவு அரசியலானது,எனவே,புரட்சி-விடுதலை என்பதெல்லாம் மக்கள் விரோதமானதெனக் கட்டியமைக்கும் கருத்தியலை உருவாக்கி, அதேயே பெரும்பகுதி மக்களது சமூக உளவியலாக்கிக்கொண்டு அவர்களது சமுதாய ஆவேசத்தைத் தணித்தல்,அனைத்துத் தவறுகளையும் பிரபாகரனது தலையில் பொறித்துத் தேசியவிடுதலையென்பது இனிமேல் சரிவராது,அது தவறானதென உருவாக்கிக்கொள்ளல்,
இந்த இருவகையான அணுகுமுறையில் மக்களில் பெரும்பாலரைத் தொடர்ந்து இரண்டு இலாடனில் பிணைக்க முடியும்.
ஒன்று: புலிவழிப் போராட்டத்தைச் செய்ய வைத்துக்கொள்வதன் முலமாக(போராட்டவுணர்வுமிக்க இளைஞர்களை,தேசியவிடுதலையை உணர்வு பூர்வமாக அணுகும் பெரும்பகுதிப் புலம்பெயர் இளைஞர்களை) இனவொடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை மழுங்கடித்தல் அல்லது தவறான பாதைக்கு இழுத்துச் செல்லல்.இதன்வழியாக முற்போக்கு அரசியலை நீர்த்துப்போக வைத்தலும்,இளைஞர்களைப் புரட்சிகரமாக அணிதிரளுஞ் சந்தர்ப்பத்திலிருந்து தடுத்துக்கொள்னலும் நிகழ்ந்துவிடுகிறது.இதற்காகத் தொடர்ந்து புலிகளை நியாயப்படுத்தல்.
இரண்டு: புலிகளது போராட்டத்தால் மக்களது கெடுதியான பக்ககங்களைக் காட்டிக்கொள்வதும்,அதன்வழியாக நிலத்தில் இருப்பவர்களது போராட்டவுணர்வை,இலங்கைப் பாசிச அரசின் இனவொதுக்கலை மெல்ல உணர்வுரீதியாக உள்வாங்காதிருக்கும் சந்தர்ப்பத்தைப் புலிகளது கொடுமையின்வழி உணர்த்தித் தடுத்தல்,அழிவு அரசியலது பக்கங்களைப் பேசுவதும்,அதனூடாக மக்களுக்குப் போதித்தல்”பிச்சை வேண்டாம் நாயைப்பிடி”எனும் முதுவாக்கினூடாகப் போராடுவது தவறு என்ற கருத்தியலைத் தொடர்ந்து வளர்த்தெடுத்தல்,போராட்டம் தவறானவர்களால்,தவறான ஆர்வங்களுக்காகத் தவறாக நடாத்தப்பட்டுத் தோல்வியில் முடித்து வைக்கப்பட்டதை, விமர்சனரீதியாக உள்வாங்கிச் சரியான தெரிவுகளை கண்டடைவதற்குக் குறுக்கே இந்தப் போக்கைக் கட்டியமைத்தலே இதன் உட்பரிணாமம்.
இவ்விரு போக்கையும் இனம் காண்பது அவசியம்.இதிலிருந்து புலிகளது தவறான போராட்டத்தை விளங்கிக்கொண்டு சரியான தெரிவுகளினூடாக இலங்கைப் பாசிச அரசுக்கெதிரான,தென்னாசியப் பிராந்திய மற்றும் உலக வல்லாதிக்க ஏகாதிபத்தியங் களுக் கெதிரான ஸ்தானத்தில் மக்கள் புரட்சிகரமாக இயங்குவது எங்ஙனம் சாத்தியமாகும்,இதைச் சாத்தியப்படுத்தும் புரட்சிகரமான புரட்சியின் நிலவரங்கள் என்ன? மக்கள்யாரோடு தோள்சேர்ந்து இவற்றைச் சாதிக்கமுடியும்?
புரட்சிகரமானவொரு அரசியலை எப்படித் தகவமைப்பது? இது பாரியகேள்வியாகும்.மிக இலகுவாக விடை கிடைக்கவில்லை!இந்தச் சூழலை இனம் காண்கின்றோம்.ஆனால்,தடுக்க முடியவில்லை!ஏனெனில், எவர்-எந்த முகாமுக்குள் இருக்கிறாரென்பது இன்னுமே வெட்ட வெளிச்சமாவில்லை!
இந்த நிலையில் என்ன செய்வது?
தமிழ்த் தேசத்தின் நேர் எதிர் மறையான முரண்களாக இருப்பவை பதவிக்கான வேட்கையுடைய தமிழ்க் கைக்கூலிக் குழுக்களின் இன்றைய செயற்பாடாகும்!நமது தேசத்தின்-மக்களின் அபிலாசைகளை வேட்டையாடும் நிலைக்குப் போய்விட்ட கூலிக்குழுக்கள் ஒருபுறமும்,மறுபுறம் ஜனநாயக வேடம் தரித்த குள்ள நரிப் புலிக் கூட்டம்(கே.பி.உருத்திரகுமார்,கருணா-பிள்ளையான்,நெடியவன் மசிர்மட்டை…)வகையறாக்கள் ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டும் வார்த்தை ஜாலக் கதைகளுடன் ஒருபுறமும், அன்னிய சக்திகளைப் பலப்படுத்துவதில்…
தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அது அரங்கேற்றி வருகிறது.பேராசை,பதவி வெறி பிடித்த தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள்.இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது.ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.
நமது உரிமையென்பது வெறும் அரசியல் கோசமல்ல.
எங்கள் பாரம்பரிய நிலப்பரம்பல் குறுகுகிறது.நாம் நமது தாயத்தை மெல்ல இழந்து போகிறோம்.நமது உரிமைகள் வெற்று வார்த்தையாகவும்,ஒரு குழுவின் வேண்டாத கோரிக்கையுமாகச் சீரழிந்து போகிறது.இது திட்டமிட்ட சிங்கள அரசியலின் சதிக்கு மிக அண்மையில் இருக்கிறது.எனவே, சிங்களப் பாசிசம் தன் வெற்றியைக் கொண்டாடுவதும்,அதைப் புலிப்பினாமிகள் ஜனநாயகத்தின் பேரால் வாழ்த்தி வரவேற்பதும்கெடுதியான அரசியலின் வெளிப்பாடாகமட்டும் பார்ப்பதற்கில்லை.மாறாக, எஜமான் இந்தியாவின் வற்புறுத்தலாகவும் இருக்கிறது.இது அகண்ட இந்தியாவைத் தக்கவைக்கும் வியூகத்தோடு முடிச்சிடுவது.
மிக நேர்த்தியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் நமது மக்கள் தமது உரிமைகளை வெறும் சலுகைகளுக்காக விட்டுவிடுவதற்கான சமூக உளவியலை ஏற்படுத்தும் நரித்தனமான அரசியலை மேற்முசொன்ன இருவகையான போக்குகள் செய்துவரும்போது இந்தக் “கேடுகெட்ட புலம்பெயர் புலித் தமிழர்கள்”எந்த அரசியல் விய+கமுமற்றச் செத்துக்கிடக்கிறார்கள்!
இன்றைக்குச் சிங்களப் பாசிஸ்ட்டுக்கள் செய்துவரும் அரசியல் கபடத்தனம் எமது வருங்காலத்தையே இல்லாதாக்கும் பெரும் பலம் பொருந்திய விய+கத்தைக் கொண்டிருக்கிறது.இலங்கையில் பல் தேசிய இனம் இருப்பதே கிடையாதென்கிறது சிங்களம்.இலங்கையர்கள் எனும் அரசியல் கருத்தாக்கத்தின் மறுவடிவம் சிங்களம் என்பதன் நீட்சியாகும்!நாம் தமிழ் பேசுபவர்கள்.நமது தேசம் பாரம்பரியமாக நமது மக்களின் வாழ்வோடும்,வரலாற்றோடும் தொடர்புடைய தமிழ் மண்ணே.அது வெகு இலகுவாகச் சிங்களமாகிவிட முடியாது.
நமது மக்களை வெறும் பேயர்களாக்கும் அரசியலை மேற்கு கூறிய இரண்டு தரப்புமே செய்துவரும்போது நாம் மௌனித்திருக்க முடியாது!
இந்தத் தருணம் பொல்லாத தருணமாகும்.தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இது அரசியல் விய+கமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.இது ஏற்புடையதல்ல.இதைத்தாம் இதுவரை புலிகளைக்கொண்டு அந்நியச் சக்திகள் செய்து முடித்துக்கொண்டன.தொடர்ந்தும், அவை மாற்று வியூகங்களை நான் மேலே குறிப்பிட்ட வகைகளில் தகவமைத்து வருகின்றன.
நம்மிடம் வர்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இருக்கிறார்கள்.
எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.
எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.இதற்குள்தாம் புலிகள் செய்த போராட்டம் சரியானது-தவறற்ற நேரானதெனவும்,பிச்சைவேண்டாம் நாயைப்பிடி,பங்கர்வேண்டாம் படும் கொலைகள் வேண்டாம்,யுத்தம்வேண்டாம் ஒரு சிறுபிடி சாதமே விடுதலை என வகுப்பெடுக்கும் அந்நிய வியூகங்கள்.இதை இனம் கண்டு எதிர்க்காமல் நமது மக்களது உண்மையான விடுதலைக்கான பாதை திறந்துகொள்ளது!
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி,
05.12.11
இதில எழுதுற உந்தச் சாத்திரி கூத்திரி எல்லாரௌம்பற்றி எனக்கு நல்லாத்தெரியும். இவனுக எலும்புத்துண்டுக்கு அலையுற கூட்டம்.
பிரபாகரன் எண்டு பேரைச்சொல்லவே தகுதியில்லாததுகள்.
ஜெயா அவர்களே! இது துரோகிகளின் மேடை. இப்படித்தான் இருக்கும்.