இன்றைக்கு புது வருசத்தின் முதல் நாள். முதல் நாட்கள் எப்போதும் அன்றைய பொழுதில் அற்புதமாயிருப்பதில்லை. நினைவுகளில் மடிக்கப்பட்டு பின் எப்போதோ புரளும் நினைவின் பற்சக்கரத்தைப் பற்றியபடி மேலேறி வரும்போதும் இருளடர்ந்த குகைக்குள்ளிருந்து சட்டெனத் திசைகளெங்கும் மின்மினிப்பூச்சிகள் பறந்து வர்ணஜாலம் காட்டுவதைப்போல ரம்யமாயிருக்கும். அல்லது மனசுக்குள் இருக்கும் நினைவுகளையெல்லாம் விரட்டி வெறுமையாக்கி பாலைவனத்தில் தண்ணீருக்கு அலைவதைப்போலத் தோற்றத்தை தரும். அடடா இப்படியெல்லாம் செய்திருக்கிறேனா என் வாழ்க்கையில் என்று சில சமயம் வெட்கம் கொள்ள வைக்கும். அல்லது மனசுக்குள் மத்தாப்பாய் மர்மப் புன்னகையை நாள் முழுதும் வழிய விட்டபடியிருக்கும்.
அநேக முதல்நாட்கள் அச்சமும், ஆச்சரியமும், எதிர்பார்ப்புகளும் கொண்டு தொடங்குகின்றன. என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் கடந்த முதல்களை நினைத்துப் பார்க்கிறேன். சிலது புன்னகையாக் கடந்து போகிறது. சிலது பெருந்துயரமாக, இன்னும் சிலது எதுவுமற்று மகிழ்ச்சியா துயரமா எனப் பிரித்தறியமுடியாதபடிக்கு..
எனக்கு நிகழ்ந்த எல்லாமுதலும் நினைவுக்குள் மிதந்தபடியிருக்கிறது. என் முதல் கார் பொம்மைகூடச் சலனமாயிருக்கிறது நினைவுக்குள். முதல் பூனைக்குட்டி போல, முதல் ரயில் பயணம்,முதல் படகுப்பயணம் இப்படி நிறைய முதல்நாட்கள் சிக்கிக்கிடக்கிறது மனசுக்குள். ஆனால் இந்தப் பூமியை முத்தமிட்டபோது நான் எப்படியிருந்தேன்?. அம்மாவின் அல்லது (நர்சம்மாவின்) கைகளுக்குள் இருந்த போது என் அழுகை அல்லது புன்னகை எப்படியிருந்திருக்கும் அழகாய் இருந்ததாய்த் தான் அம்மா சொல்வாள்..(அம்மாக்கள் பொய் சொல்வதுண்டா?) பின்பு 24 வருடங்கள் கழித்த தொலைபேசி உரையாடலில் அக்கா சொன்னாள் சுருட்டை முடியிருந்தது என்று அப்போதே அவள் விரல்களைப் பற்றிக்கொண்டேன் என்றும்.. ஆனால் என்றைக்கும் அதை மீட்ட முடிந்ததில்லை நினைவடுக்குகளிற்குள்..
முதல் முதலில் எழுதிய ‘அ’ நினைவிருக்கிறதா உங்களுக்கு எனக்கிருக்கிறது. சோதிநாதன் வாத்தியாரின் மடியில் இருந்துகொண்டு அந்தப் பெரிய றேயில்(தட்டில்) கொட்டப்பட்ட பச்சை அரிசியில் நான் முதல் முதலாக எழுதிய ‘அ’ நிறைய நாட்களுக்கு அதையே திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருந்தேன். வீட்டுக்கு வந்ததும் அம்மா எழுதித்தந்த பெரிய ‘அ’ வுக்கு மேலாக மறுபடி மறுபடி ‘அ’ ஆனா என்று சொல்லிச் சொல்லி எழுதிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. ஒரு ஒற்றைறூள் கொப்பியில் அதன் வரிகளுக்குச் சிக்காமல் கோணல் மாணலாக குறுக்கும் நெடுக்குமாகக் கிறுக்கிய ‘அ’ னா க்கள் படம் படமாக மின்னுகின்றன என்னைத் தெரியுமா என்பதாக. தமிழ் நெடுங்கணக்கு அட்டையின் துணையில்லாமல் அகர வரிசை முழுவதையும் அம்மாவிடம் சொல்லியும் எழுதியும் காட்டிய முதல் தடைவையில் அம்மா எனக்குக் கொடுத்த முத்தம் இன்னமும் மிதமான கதகதப்பாய் மீந்திருக்கிறது மனசுக்குள். என் கோபக்காரா அம்மா இந்தக் குழப்படிகார மகனை முத்தமிட்ட அபூர்வத் தருணங்களில் மறுபடியும் பூக்கும் முதல் தருணம் அது.
முதல் முதலில் பள்ளிக்கூடம் போன நாள் எல்லோருக்குமே நினைவிருக்கும். அது எல்லா உணர்வுகளின் ஆச்சரியம் கலந்த பஞ்சாமிர்த நிலை அல்லது ஏதோ சொல்லத் தெரியலப்பா.. எதிர்பார்ப்பையும் ஆச்சரியங்களையும் உள்ளுரக் கொஞ்சம் பயத்தையும்.. அன்றைக்கு காலையில் புதுச்சீருடையைப் போடும் போதே சேர்த்துப் போட்டுக்கொண்டாயிற்று. அழகாக வெளீரென்ற அரைக்கைச் சட்டையின் கொலரில்(காலரில்) முக்கோணமாய் மடித்த பூப்படம் போட்ட கைக்குட்டையை ஊசியால் குத்தி (அங்கிருந்தே மூக்கிற்று எட்டும் படியாக).., புதிய தண்ணிப் போத்தலில் கோல்மன்ஸ் தான் கரைச்சுத் தரவேண்டும் என்று அடம்பிடிச்சு அதையும் நிரப்பிக்கொண்டு.. பெரியக்கா கதிரையில இருத்தி ம்.. காலை நீட்டு என்க காலை நீட்டி சப்பாத்துப் போட்டு.. அந்தக் கதிரையிலேயே இருந்தபடி பெரியம்மா புட்டும் முட்டைப்பொரியலும் குழைச்சுத் தீத்த ம் ம் எண்டு தலையாட்டி வயித்தை நிரப்பி.. புது புத்தகப் பையைத் தோளில மாட்டிக்கொண்டு பெரியமாமாட சைக்கிள் ஏறி ஊரில உள்ளவனுக்கெல்லாம் நான் பள்ளிக்கூடம் போறேணேணை என்று பறை சாற்றிக்கொண்டு போகும் போதெல்லாம் பொங்கிக் கொண்டிருந்த மகிழ்ச்சி பள்ளிக்கூட வாசலுக்குப் போனவுடன் எப்படிக் காணாமல் போனது என்கிற ரகசியம் இன்றைவரைக்கும் தெரியாது. ஏதோ நடக்கக் கூடாதது நம்ம வாழ்க்கையில நடக்குது உடனடியாகத் தடுக்காவிட்டால் இனிமேல் மீளவே முடியாது என்கிற மாதிரி என்னைப் பள்ளியில் விட்டுப்போக வந்த மாமாவின் கையில் தொங்கியபடியே பீரிட்டுக்கிளம்பிய அழுகை.. எனக்கு அருகில் என்னைப் போலவே தங்களுடைய வாழ்க்கையை காப்பாற்றும் பொருட்டு அழுதுகொண்டிருந்த மிச்சப் பேரையும் பார்த்தவுடன் இங்கே ஏதோ கெட்ட விசயம் தான் நடக்கப் போகிறது என்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டதைப் போல விடாமல் அழுத என்னை ஒண்டுமில்லை பிள்ளை வாங்கோ என வகுப்புக்குள் அணைத்தபடி கூட்டிக்கொண்டு போய் நீதான் எனக்கு ஸ்பெசல் என்கிற மாதிரி என்னைக் கவனித்தக்கொண்ட விஜி ரீச்சரை மறுபடியும் நினைத்துக்கொள்கிறேன். ஒரு போதும் திரும்பித்தரவியலாக் கனிவு அது. உண்மையில் வாழ்வின் தொடக்கம் அது தான். ஆனால் அன்றைக்கு அழாதவன் இருக்கமுடியாது. இன்றைக்கு ஒரு ஒற்றைக் கேலிப் புன்னகையுடன் கடந்து போய்விட முடிகிற பரவச முதல் அது.
முதல் முதலில் மேடைஏறிய அனுபவம்.. இப்போது ஒரு 50 பேர் முன்னால் போய் நின்றாலே கொஞ்சமாய் உதறத்தான் செய்கிறது. ஆனால் என் முதல் மேடை அனுபவம் மொத்தப் பள்ளியும் கூடியிருக்கு சுமார் 2000 பேர் இருக்கலாம் எந்தப் பயமும் கூச்சமும் இன்றி நிகழ்ந்து போனது.
“பெரு மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே,ஆசிரியப் பெருந்தகைகளே,என் சக மாணவ மாணவிகளே..”
“பொறடா பொறடா மைக்கை ஓன் (ஆன்) பண்ண வேணும்” என்று என் தோளில் செல்லமாகத் தட்டியபடி மைக்கை என் சின்ன உயரத்துக்கு குறைத்து ஓன் பண்ணிவிட்டுப் போனார் மோட்சலிங்கம் வாத்தி. அன்றைக்கு எனக்கு வெட்கம் வரவேயில்லை.. கொஞ்சமும் சளைக்காமல் மறுபடியும் பெருமதிப்பிற்குரிய .. என்று ஒன் பண்ணிய மைக்கில் ஆரம்பித்தேன். ஆனால் கொஞ்சம் பெரிசானாப்பிறகு அன்றைய நினைவு வரும்போது லேசாய் வெட்கம் வரும். மைக்கின் முன்னால் நிற்க நேர்கையில் எல்லாம் அந்த முதல்நாள் நினைவுக்குள் மனம் போய்த்திரும்பும். என் பேச்சிற்கு கைதட்டுக் கிடைக்கிற பொழுதுகளிலெல்லாம் பின்னால் கைகட்டிக்கொண்டிருக்கிற.. தனக்கு முன்னால் இருக்கிற மைக் ஒன் பண்ணப்பட்டிருக்கிறதா, இல்லையா என்கிற அக்கறையற்ற ஒரு குட்டிப்பையனுக்கு கிடைத்த கைதட்டலைப் போன்ற மகிழ்ச்சி கிடைத்ததேயில்லை… எப்போதும் குட்டிப்பையனாகவேயிருந்துவிட்டிருக்க கூடாதா?..
முதல் கவிதையை நான் எட்டாம் ஆண்டில் எழுதினேன்.. அது பாலமித்ரா புத்தகத்தில் வரும் தலையங்கம் போல இருந்தது. அப்போதெல்லாம் பாலமித்ராவின் தலையங்கம் கொஞ்சம் கவிதையைப் போல இருக்கும்.(கொஞ்சம் தான்) அப்போதைய எங்கள் வகுப்புப் ரீச்சராயிருந்த நகுலன் சேர் அது கவிதைதான் எனச் சொல்லியதிலிருந்தே நானும் கவிஞனாய் சக மாணவர்களால் மதிக்கப்பட்டேன். ஆனால் அந்த மரியாதையை இழக்க விரும்பாமல் அந்த முதல் கவிதை பாலமித்ராத் தலையங்கத்திற்கு வெவ்வேறு சொற்கள் மாற்றிப் போட்டு எழுதப்பட்டதுதான் என்கிற ரகசியத்தை நான் சொல்லவேயில்லை கடைசி வரைக்கும். நகுலன் சேர் சரஸ்வதி பூசைக்கு நாங்கள் கவியரங்கம் செய்வோம் என்று கடவுளே ஏன் கல்லானாய் எனத் தலைப்பும் சொன்னபோதுதான் அந்தத் தலையங்கத்தில் எந்தப் பாலமித்ராவிலும் தலையங்கம் வரவில்லை எனத் தெரிந்தது.. பிறகென்ன நானே கவிதை எழுதத் தொடங்கினேன்… கவிதைப் பேப்பரை வைத்துப் பேசுவதற்கான ஸ்டான்ரின் உயரம் கூட நாங்கள் இல்லை என்பதற்காக எங்கள் உயரத்துக்கு ஏற்ற மாதிரி கல்லுகள் அடுக்கிவைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள்.. செய்யப்பட்டு நாங்கள் கவியரங்கம் செய்த அந்தநாளும் ஒரு மறக்க முடியாத முதல்தான்..
ஆனால் எல்லாவற்றையும் விட முதல்முதலாக அச்சில் த. அகிலன் என்கிற பெயரைப் பார்த்தபோது நிறையப்பேர் அந்த கவிதை நீங்கள் தானே எழுதியது என்று கேட்டபோது (குறிப்பாக வகுப்புத் தோழிகள் ஹி ஹி ஹி) அன்றைக்கு முழுவதும் சைக்கிளை விட்டு இறங்காமல் ஊரெல்லாம் திரிந்தேன். பற பற பறந்து கொண்டேயிரு என்பதாய்க் கட்டளையிட்டுக்கொண்டிருந்தது மனது. அதற்குப் பிறகு நிறையத்தரம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என் பெயர். அந்த முதல் தடவையின் புழுகம் மனசை நெருங்கியதேயில்லை பின்னெப்போதும்..
அந்த முத்தம் தற்செயல். அது தன்னைத் தானே நிகழ்த்திக் கொண்டது. முன்னறிவிக்கப்படாத ஒர அதிசயக் குழந்தையின் பிறப்பைப் போல அது நிகழ்ந்தது. நிகழ்ந்து முடிந்தபின்பும் நீடித்துக்கொண்டிருக்கும் ஒரு செயலாய் இருந்தது அது. இது வரை என் பிறந்தநாளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளிலேயே மிகப் பிரியமான விலையுயர்ந்த பரிசு அந்த முத்தம்.(அதன் பிறகு முத்தமிட்ட பொழுகளிலெல்லாம் நான் புதிது புதிதாய்ப் பிறந்தேன்) பூக்கள் சொரிந்துகிடக்குமொரு சாலையில் போகையில் காதுகளில் வழிந்துகொண்டிருக்கும் இனியசங்கீதம் போல இன்னுமின்னும் வார்த்தைகளுக்குச்சிக்காத இனிமையின், நிறைவின்,வெறுமையின், எல்லாவற்றினதும் ஏகாந்தப்புள்ளிகள் இணைந்தவொரு காலத்தின் கணமாய் உதடுகள் சொல்லிக்கொள்ளஎமுடியாதொரு பிரியத்தின் சங்கேத வார்த்தையை உதடுகளே சொல்லிப்பார்த்துக்கொண்ட தருணம் அது. பின்னொருத்தி முத்தங்கள் என்பது வெறும் சொற்களைப்போலெனச் சொல்லிய பொழுதொன்றில் சிரித்துக் கொண்டே சகித்துக்கொள்ளும் லாவகம் தந்தது அந்த முதல் முத்தம் தான். இப்போது திகட்டத் திகட்ட முத்தங்கள் கிடைக்குமென்ற போதிலும் மனசுக்கள் பெருகிப் பின் உடல் முழுதும் ஓடித் தன் வருகையை அறிவித்த அந்த முதல் முத்தம் போலிருக்கப் போவதில்லை எதுவும்..
என்றைக்கும் திரும்பமுடியாத வெளிக்குள் தள்ளிவிடுகின்றன சில முதல்கள். அந்த குட்டி நீலச்சைக்கிளில் கட்டிய மூட்டை சகிதமாய் புறப்படுகையில் எதையோ இழப்பது போலிருந்தது. மறுபடியும் திரும்பமுடியாக் கொண்டல் மர ஊஞ்சலடியில் நின்று தேம்பி அழுதுகொண்டிருக்கிறது ஒரு குட்டிப்பையனின் மனம் இப்போதும். எனது மடியினின்றும் குதித்தோடிய பூனைக்குட்டியை மறுபடியும் பிடித்துவருவதற்கான அவகாசங்கள் எதனையும் எனக்கு வழங்காத அந்த போர் தின்ற அந்த நாளை மிகுந்த கசப்புடன் விழுங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்வின் முதல் இடப்பெயர்வு அது. பிரியமான வீட்டையும், கொண்டல் மர ஊஞ்சலையும், ஒளித்துப்பிடித்து விளையாடக்கூடிய அளவுக்கு அடர்ந்திருந்த நித்யகல்யாணிமரத்தின் பூக்களையும், நான் சேர்த்துவைத்திருந்த காமிக்ஸ் புத்தகங்களையும் இன்னும் இன்னும் மனசுக்குள் நிறைந்து வழியும் பிரியத்துக்குரிய பால்யத்தின் பொழுகளில் நான் ஆடிக்களித்த இடங்கள் எல்லாவற்றையும் விட்டேகிய அந்தமுதல் நாள். எங்கள் கால்களின் வேகத்தை விரட்டிவரும் குண்டுகள் தீர்மானித்த ஒரு கறுத்தப்பகலின் அழியாப் பொழுகள் இன்னும் இருக்கிறது இறக்கிவைக்கமுடியாச் சுமையாய்.. வீட்டின் கூரையின் கீழல்லாது ஏதோ ஒரு மர நிழலின் கீழாய் விடிந்த முதல் பகலின் சூரியன் தகித்துக் கொண்டிருக்கிறான் இன்னமும்..
என்னிடம் புன்னகையாய் எஞ்சியுள்ளன இன்னும் நிறைய முதல்நாட்கள். அதை விடவும் கண்ணீர்த்துளியாய் எஞ்சியுள்ளவை அதிகம். எதற்கு கண்ணீர்த்துளிகளை எழுதி முதலுக்கே மோசம் செய்வான் என்று எழுதாமல் விட்டுவிட்டேன். மனசுக்குள் தேங்கிக் கிடக்கும் கடக்க முடியாத் தருணங்களில் சில இவை.. எத்தனையோ முதல்கள் இருக்கின்றன்.. இன்னும் எத்தனையோ வரலாம்.. போகலாம்.. ஏதோ ஒரு முதல் நம் வாழ்க்கையே புரட்டிப்போடலாம்.. அந்த ஏதோ ஒன்றுக்காய் நம்பிக்கையோடு காத்திருக்கத் தொடங்குகிறேன் மறுபடியும்.. இந்த வருடத்தின் முதல் நாளிலும்….
அநேக முதல்நாட்கள் அச்சமும், ஆச்சரியமும், எதிர்பார்ப்புகளும் கொண்டு தொடங்குகின்றன. என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் கடந்த முதல்களை நினைத்துப் பார்க்கிறேன். சிலது புன்னகையாக் கடந்து போகிறது. சிலது பெருந்துயரமாக, இன்னும் சிலது எதுவுமற்று மகிழ்ச்சியா துயரமா பிரித்தறியமுடியாதபடிக்கு..//
நினைவுகள், நெஞ்சில் நிழல்லாடும் வேதனை சுமந்த காலங்கள் அனைத்தும் அருமை,… பதிவு அனுபவமாக இறந்து போனவற்றை உயிர்ப்பூட்டும் வகையில் விரிகிறது…. தொடருங்கள் அகிலன்…
வாழ்வின் அனைத்துத் தருணங்களையும் அழகாக எழுத முடிகிறது உங்களால்……புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா
இனிய புதுவருட வாழ்த்துக்கள் அண்ணன்…
பதிவைப்பற்றிய கருத்துக்களுக்கு பிறகு வருகிறேன் உண்மைதான் நிறைய முதல்கள் இருக்கின்றன… இன்னும் வரக்காத்திருக்கின்றன…
நம்பிக்கைகளோடு…
நல்லாயிருகு அகிலன்
/// “பெரு மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே,ஆசிரியப் பெருந்தகைகளே,என் சக மாணவ மாணவிகளே..”
“பொறடா பொறடா மைக்கை ஓன் (ஆன்) பண்ண வேணும்” ///
ஹ ஹ ஹ
பிறகு கேக்கவா வேணும் அகிலன் மேடை ஏறினா, என்ன இப்ப்பவும் உடைக்கிறியா பேச்சு மேடைகளை
முதல்களும் அழகாயிருக்கின்றன, ஆனா கொஞ்சம் கூடுதலான வர்ணனை இருப்பதாகத் தெரிகிறதில்ல
நல்லாயிருகு அகிலன்
anbu agilan
sila muthalgal mudigindrana
sila muthalgal mudinthu thodargindrana
sila muthalgal mudithu vaikkap padugindrana
meendum thodanga povathu yar?