பொதுவாக காஸ் குக்கருக்கு மருமகள்களுக்குத்தான் பயம் வரவேண்டும்.. ஆனால் எங்கட வீட்டில் மாமிக்கு பயம் வந்திருக்கிறது. நானும் கடந்த இருபது நாளாக காலமை எழும்பினோண்ண முதல் வேலை அடுப்பு மூட்டுறது.. நீங்கள் யாரவது உங்கட வீட்டில விறகடுப்பு மூட்டியிருக்கிறியளோ.. அது ஒரு தனிக்கலை.. என்னைக்கேட்டால் நான். அதை 65 வது கலையாக சேர்க்கச் சொல்லி சிபாரிசே செய்வன்.. சமையல் கலையுக்குள்ள கடைசி வந்தும் இதைச் சேக்கமுடியாது.. ஆனா இங்க நான் மூட்டிறது காஸ் குக்கர்.. மாமி இப்பதான் இலங்கையில இருந்து வந்திருக்கிறா.. வட்டக்கச்சியில அவாட வீட்டில நிக்கிற மாமரத்தால முறிஞ்சுவிழுற பட்டதடியளும்.. தென்னம் பாளைகளும் பொச்சுமட்டைகளுமே போதுமாயிருந்தது.. வருசம் முழுதும் அடுப்பெரிக்க .. அவாட மகளுகளின்ர கலியாண வீடு சாமத்திய வீட்டுக்கு விறகு பறிப்பிச்சதுதான்.. வெளியால இருந்து வந்த விறகு. காஸ் குக்கருக்கான தேவைகளும் இருந்ததில்லை அதைவிட காஸ்குக்கரே அங்கயிருந்ததில்லை.. எங்க பெற்றோலுக்கே வழியக்காணேல்ல இதுக்க காஸ்குக்கரோ? பொதுவா அங்க சீதனப் படுகொலைகள் குறைஞ்சிருக்கிறதுக்கு இது ஒரு காரணமா இருக்கலாமோ.. ஹி ஹி ஹி .. (கவனிக்க சீதனப் படுகொலைகள் மாத்திரம்தான் இதை நீங்கள் நிச்சயமா சீதனக்கொடுமைகள் எண்டு புரிஞ்சுகொள்ளப்படாது)
மாமி என்னைமூட்டச்சொல்றது.. காஸ் குக்கர். இந்தியாக்கு வந்தோண்ண மாமிவீட்டப்பாத்திட்டு லேசாப்புறுபுறுத்தா ஒரு மரஞ்செடி கொடியையும் காணேல்ல.. உந்தப்படியால ஏறி இறங்கோணும் எண்டு.. மரஞ்செடியோ மரஞ்செடிவேணுமெண்டால் மவுண்றோட்டில நிக்கிற ஏதாவது ஒரு மரத்துக்கு கீழ ஒரு துண்டு தறப்பாள்தான் கட்டவேணும் எண்டு சொல்லுவம் எண்டு நினைச்சிட்டு பிறகு ஏன் ஆகப்பயப்பிடுத்துவான் எண்டிட்டு விட்டிட்டன்.. குசினிக்க போய்ப்பாத்தவா ஏதோ பேயைக் கண்ட மாதிரி முழுசிக்கொண்டு வந்தா தம்பி என்னடா உது.. நான் குசினி எண்டு சொன்னன்.. உவனுக்கு ஒரு பம்பல் டேய் உந்த காசு அடுப்பு எனக்குச் சரிவராது எண்டா மாமி.. நான் சொன்னன் வாடகையில எல்லாம் சேர்த்தி நீங்கள் அடுப்புக்கு மட்டும் காசு குடுக்கத்தேவையில்லை எண்டு.. அடேய் அதில்லயடா இந்த காசடுப்பு எண்டா.. என்ர மரமண்டைன்டைக்கு அப்பதான் உறைச்சுது மாமி காஸ் (gas) அடுப்பைசொல்றா எண்டு.. இதென்ன வட்டக்கச்சியே நீங்களே மண்குழைச்சு பூசி அடுப்பு செய்யிறதுக்கு இங்க காசில்லாம ஒண்டும் நடவாது எண்டன் நான்… டேய் நான் அதைச்சொல்லயில்லை இதைச்சொன்னன் எண்டு மாமி திடீரென்று வார்த்தைகளை மறந்தது போல சைகைமொழிக்கு மாறி.. குசினி மேடையில் இருந்து காஸ் குக்கரைக் காட்டினா.. நான் கேட்டன் ஏன் உதுக்கென்ன.. மாமி சொன்னா வெடிச்சுக்கிடிச்சுதெண்டா.. ஏன் அதென்ன குண்டே வெடிக்கிறதுக்கு எண்டா.. மாமி உடன சீரியசாகி பேசத் தொடங்கியிட்டா.. நீ என்ன என்னை ஒண்டுந்தெரியாதவளெண்டே நினைச்சான் நானும் புத்தகங்கள் படிச்சிருக்கிறன்.. எத்தினை பேர் செத்திருக்குதுகள்.. அதான் நாடகங்களில காட்டுறாங்களே எண்டு.. புறுபுறுக்கத் தொடங்கியிட்டா..
எனக்கு இதொரு தலையிடியாப் போச்சு நான் பிறகு எனக்கு தெரிஞ்ச வார்த்தைகளில பொறுக்கியெடுத்து மாமிக்கான எனது காஸ்குக்கரினால் ஏற்படும்.. நன்மை தீமைகளைப் பற்றிய பாடமொன்றை அதனை எப்படி இயக்குவது நிறுத்துவது.. அந்த நெருப்புத்தடியை(தீக்கோல்) எப்படி பயன்படுத்துறது எண்டு.. பெரிய விளக்கவுரையை நிகழ்த்தி முடித்தவுடன் மாமி ஏதோ சந்தோசப்படுறமாதிரி தலையை ஆட்டினா எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருந்திச்சு..
திடீரென்று நடுஇரவு அல்லது அதிகாலை 7 மணிக்கு உதட்டுக்கும் உதட்டுக்கும் கொஞ்சம் மிகமிகக் கொஞ்சம்.. இடைவெளியில இலியானாவும் நானும் பேசிக்கொண்டிருக்கும்போது (நான் அதற்கடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான திட்ட முன்வரைவுகளை மனசுக்குள் நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில்) மிக முக்கியமா இலியானா அப்ப முன்னா படத்தில வஸ்தாவா வஸ்தாவா பாட்டுக்கு போட்டிருந்த உடுப்பில இருந்தவள்.. சிவ பூசையில் கரடி புகுந்த மாதிரி.. தம்றி தம்றி எண்டு காட்டுக்க பாலை மரமொண்டு முறிஞ்சு விழுகிற மாதிரி ஒரு சத்தம்.. யாரடா சிற்றுவேசனுக்கு கொஞ்சமும் பொருந்தாம உள்ளுக்கை வாறதெண்டு நினைச்சொண்டு.. புறந்தள்ளி.. இடைவெளியை இன்னும் நெருக்கும் முயற்சிகளில்.. நான் இறங்க எத்தனிக்க.. தம்றி தம்றி இம்முறை மரம் முறிந்தே விழுந்தது போல சத்தம். திடுக்கிட்டு எழும்புறன்.. மாமி தம்பி தம்பி எண்டு தட்டி எழுப்புறா… அய்யோ இதுதானா அந்த தம்றி தம்றி எண்டு நினைச்சுப்போட்டு.. என்ன மாமி எண்டன்.. இந்த அடுப்பை ஒருக்கா மூட்டிவிடன்.. எண்டுறா .. சரி போங்கோ வாறன். எண்டு.. சறத்தை இடுப்பில இருத்தி.. பிறகு மடிச்சுக்கட்டி.(ஹி ஹி ஹி) ‘முன்னா’ செட்டை விட்டு மனமில்லாம முழுசா வெளியால வந்தன்…
குசினிக்க என்ர தூக்கத்தை கெடுத்து நாசமாக்கின குட்டி கும்பகர்ணனாட்டம்.. காஸ் சிலிண்டர்.. பல்லிளித்தது. அண்டைக்கு ஆரம்பிச்சது.. இந்த காஸ் இடுப்பை சீ அடுப்பை மூட்டும் வேலை.. இண்டை வரைக்கும் தொடருது.. ஆனா அண்டைக்குக் கோவிச்சுக்கொண்டு போன
இலியானா பிறகு வாறதே இல்லை.. என்ன செய்யிறதெண்டு தெரியாம.. இப்ப நயனைக் கொஞ்சம்நேரத்தோடயே வரச்சொல்லீர்றது.. ஹி ஹி ஹி ..
நானும் மாமிக்கு எவ்வளோ சொல்லிப்பாத்திட்டன்.. அவா ஒரு மாமியாகவே நடந்துகொள்ளிறா இல்லை.. ஏதோ அந்த காஸ் குக்கர் ஒரு கொடுமைக்கார மாமியார் போலவும்.. தான் ஒரு அப்பாவி மருமகள் போலவும் நடந்துகொள்ளுறா.. இடைக்கிடை திடீரென்று குசினியால ஓடி வந்து தம்பி ஏதோ மணக்குற மாதிரி இருக்கெண்டு சொல்லுவா.. காஸ் லீக்காகுதாக்கும் எண்டு போய்ப் பாத்தா.. அது குப்பைக்கூடைக்க இருந்து வாற கப்பா இருக்கும்.. ஒரு நாள் திடீரென்று தம்பி ஏதோ சத்தம் கேக்குது எண்டுவா.. குசிக்குள்ள பல்லி கத்தினாக் கூட அது இந்த காஸ் குக்கர் தான் காரணம் எண்டிற மாதிரி ஆகிப்போச்சு..
நான் நன்றியுடன் விறகடுப்புகளை நினைவு கூர்ந்தேன்.. முக்கியமாக. விறகுகளை.. என்னதான் எலக்ரிக் சுடுக்காடுகள் வந்தாலும்.. யாரும் இன்னும் கரண்டில போற உடம்பெண்டு சொல்லத்தொடங்கயில்ல கட்டையில போற உடம்பெண்டுதானே சொல்லீனம்.. வாழ்க்கையில் எல்லாப்படிநிலைகளிலும்.. ( இந்த படிநிலை எண்டது.. நேரடியான அர்த்தம் கொண்டது நீங்கள் மரத்தாலான படி, கதவு நிலை எண்டு நினைச்சு கொத்தி அடுப்புக்க வச்சுப்போடாதைங்கோ) விறகு எண்டது முக்கியமாயிருக்கு..
விறகு என்பதுதான் எனக்கு தேவதைகளையும் அறிமுகப்படுத்தியது.. இன்றைக்கு ஜெயமோகனின்.. காடு காண்பிக்கின்ற நீலிகளிலும் காதல் வயப்பட்டுச்சுழல அந்த வார்த்தைகளில் சிக்கிக்கொண்டு உணர்;ச்சிவசப்பட எனக்குக் கற்றுக்கொடுத்தது வனதேவதைதான்.. அநேகமாக நான் முதல் முதல் வாசித்த கதை.. (கேட்ட அல்ல) விறகு வெட்டியின் தொலைந்து போன கோடரியை வனதேவதை கண்டுபிடித்துக்கொடுக்கிற கதை.. அதை வாசிக்கிற போது ஒரு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கலாம்.. அந்த வனதேவதையை மிகவும் பிடித்திருந்தது.. நான் முதல் முதலில் அறிந்த தேவதைக்கதை அதுதான்.. அன்றைக்கு தேவதைகளைத் தேடத்தொடங்கியவன் தான்.. இன்னமும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.. (அப்படிக் கேவலமாப்பாக்கிற அளவுக்கு நான் என்ன சொல்லீட்டன் இப்ப ஆ..)
அப்பா இருக்கும் வரைக்கம் நாங்கள் விறகு குறித்து பெரிசாகக் கவலைப்பட்டது கிடையாது.. அப்போது அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுகிற வயதும் கிடையாது என்று நினைக்கிறேன்.. வீட்டில் அப்பாபற்றி எஞ்சிக்கிடக்கும் நினைவுகளில் முக்கியமானது விறகு அப்பா இருக்கும் போது பெரிய பெரிய மரக்குத்திகளை வண்டிலில் கொண்டு வந்து குமித்து அதைச் சின்னன் சின்னான அவரே கொத்திவிடுவாராம் என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பாவின் செத்தவீட்டிற்கும் எட்டுச்சிலவு அந்தரட்டிக்கும் கூடப் பாவிக்ககூடிய விறகுகளை அவரே கொத்திவைத்திருந்தார் என்று அம்மா எப்போதாவது நினைவுகூர்வாள்..
அப்பா இறந்தபிறகு அம்மா எல்லாரும் வீட்டில் நிற்கிற சனிஞாயிறுகளில் தானே விறகு கொத்திசேர்த்துவைப்பாள் அம்மா.. அவள் கொத்திக்கொண்டிருக்கும் போது நாங்கள் சுள்ளிவிறகு பொறுக்குகிறதாய் கடகத்தோடு தூள் விறகுகளைப் பொறுக்கிக் கொண்டு திரிவோம்.. அம்மா விறகுகொத்துவதைச் சகியாத நாளொன்றில் நான் விறகுகொத்த ஆரம்பித்தேன். கோடரிக்காம்பை விட ஒரு அரை அடியோ ஒருஅடியோ பெரியவனாயிருக்கிற வயதில் நான் அதைச்செய்தேன்.. அம்மா அதன்பிறகு சைக்கிளில் விறகு விற்கும் வியாபாரிகளிடம்.. விறகு வாங்கத் தொடங்கினாள்.. அது ஓரளவுக்கு அடுப்பில் நேரடியாக வைக்கக் கூடிய அளவுகளில் இருக்கும்.. ஆனாலும் அதையும் இன்னும் சிறிதாகக் கொத்தினால்.. எரிவதற்கு சுலபமாக இருக்கும் அம்மா வேலைக்கு போற அவசரத்தில் சமைக்க அது மிகவும் உதவியாக இருக்கும்.. முன்பெல்லாம் வன்னியில் தமதுதலைக்கு மேலால் ஒரு பாம்பு படம் எடுப்பதைப்போன்ற தோற்றம் கொள்ளத்தக்கதாக விறகுகளை கொண்டு திரியும். பின் கரியலில் வைத்துக்கட்டப்பட்ட விறகுச் சுமையுடன் நிறைய சைக்கிள் விறகு வியாபாரிகள் இருந்தார்கள். அநேகமாக நாங்கள் சமையலுக்கு அவர்கள் கொண்டு வரும் விறகுகளைத்தான் வாங்குவோம்..
அம்மா எப்போதும் விறகுவெட்டிகள் மீது எனக்கொரு தேவையற்ற கரிசனம் இருப்பதாகத் திட்டிக்கொண்டிருப்பாள்.. உண்மைதான் எனக்கு அவர்கள் மீது கரிசனம் இருந்தது.. அவர்கள் மீது மட்டுமெண்டில்ல றோட்டில கைவிடப்பட்டு கத்திக்கொண்டிருக்கிற பூனைக்குட்டிகள்.. நாய்க்குட்டிகள் இப்படி எல்லாவற்றிலும். மத்தியானம் கொழுத்தும் வெயியில்.. ஒரு பழைய சைக்கிளில்..அதற்கு இரண்டு சில்லும்.. பெடலும் மட்டும் தான் இருக்கும் பிறேக் கூட இருக்காது.. அவர்களால் சுமக்க முடியாத சுமையைச் சுமந்துகொண்டு சைக்கிள் அவர்களைத் தாங்குகிறதா இல்லை அவர்கள் சைக்கிளைத் தாங்குகிறார்களா என்பதே தெரியாமல்.. தள்ளாடியபடி அந்த விறகுச்சுமையை விற்றுத்திரியும் அந்த மனிதர்கள் மேல் எனக்கு ஏனோ இரக்கம் பிறக்கும்.. விறகுக்கட்டை பறித்துவிட்டு.. வியர்வையில் மினுங்கும் தொண்டையில் ஒரு சொம்பு தண்ணியை வாங்கி மடக் மடக்கெண்டு அவர்கள் குடிக்கையில் நான் அவர்கள்.. தொண்டையில் நீர் இறங்குவதைப் பார்த்துக்கொண்டு நிற்பேன்… விறகு எழுபது ரூபாய் எண்டால்.. நான் எண்பது ரூபாய் அவர்களுக்கு கொடுப்பேன்.. அம்ம அதற்காகத்தான் திட்டுவாள்.. எனக்கு அதிகக் கரிசனம் எண்டு.. என்னதான் திட்டினாலும் அம்மா அடுத்த முறையும் காசு தருவாள்..
அம்மா வேலையால வரமுதல்.. பின்னேரத்தில அடுப்பை மூட்டி ராசாத்தியக்கா வீட்ட வாங்கிக்கொண்டு வந்த பாலை காய்ச்சி, காலைமை வச்ச கறியளைச் சுடவைச்சு.. சுடுதண்ணி கொதிக்க வைச்சு பிளாஸ்க்கில விட்டு எண்டு இப்படி அம்மாவுக்கு உதவும் வேலைகளை நான் பருவமடையும் வரைக்கும் செய்து கொண்டிருந்தேன்.. ( ஹி ஹி 14,15 வயது வரைக்கும் எண்டத கிளாமர் எண்டிற நினைப்பில அப்படி சொன்னன்) அப்ப அடுப்பை மூட்டுறது இருக்கே அதை அப்டி அப்டி அனுபவிச்சு செய்வன்.. செய்முறை விளக்கம் தேவையோ.. (நீங்கள் தேவையில்லை எண்டாலும் நான் விடமாட்டன் சொல்லியே தீருவன்)
ஒரு சிரட்டையை எடுத்து அதுக்க கொஞ்ச சாம்பலைப் போட்டு பிறகு அதுக்கள்ள தூள்விறகுகளைப் போட்டு. கொஞ்சமா கைவிளக்கைச்சரிச்சு மண்ணெண்ணை ஊத்தி.. அதுக்கு மேல பெரிய விளகுகளை வைச்சு ஆ முக்கியமான ஒரு விசயம் இதெல்லாத்தையும் முதல் அடுப்புக்க வைக்கோணும்.. 🙂 பிறகு கேத்திலை அடுப்பில வைச்சிட்டு.. கொஞ்சமா அடுப்பை விட்டு தள்ளி நிண்டு நெருப்புக்குச்சொண்டை கொழுத்தி சிரட்டைக்கை போடோணும்.. (தள்ளி நிண்டெண்டு ஏன் சொல்றன் எண்டா நீங்கள் ஆர்;வத்தில மண்ணெண்யை சிரட்டைக்க பாத்தி கட்டி விட்டிருந்தியள் எண்டால் அது குப்பெண்டு எரிஞ்சு மூஞ்சி கருகீருமெல்லோ அதான்) இதான் அடுப்பு மூட்டுவதற்கான எளிய வழிமுறை ( இது நிபந்தனைகளுக் குட்பட்டது)என்ன நிபந்தனை எண்டு பாக்கிறியளோ இந்த வழிமுறை விறகடுப்புகளுக்கு மட்டும் பொருந்தும்.. கிறகு காஸ் அடுப்பில இதைமுயற்சி பண்ணிணால் வாற பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல) நான் அடுப்பு மூட்டுறதோட நிப்பாட்டுறன்.. ஏனெண்டா சுடுதண்ணி வைக்கிறது எப்படி,சூப்வைக்கிறது எப்படி எண்டெல்லாம் சொதிப்புகழ் பதிவர்கள் பாத்துக்கொள்ளுவார்கள் எண்டு நினைக்கிறன்..
என்னத்தை மூட்டி என்ன.. இப்பவும் கனவில நயன் வாறதான் ஆனாலும் இலியானாட நெருக்கம் இல்ல.. சரி சிற்றுவேசனுக்கு தக்க மாதிரி யாரடி நீ மோகினி கிளைமேக்ஸ்ல வாறமாதிரி.. அடுப்பில பால்காய்ச்சிற மாதிரி வந்தாக்கூட நான் தனுஸ் மாதிரி. பின்னால போய்.. டுப்பில.. சீக் பாருங்க இண்டைக்கும் இப்பவும்.. தம்றி தம்றி எண்டொரு பாலைமரம் முறியுது.. நிம்மதியாக் கனவுகூடக் காணமுடியாதஆளாக்கீட்டாங்களே…
இலியானா மட்டும் இருக்கிறா இன்னும் சில பிகர்கள் எங்க எண்டு கேட்டு பின்னூட்டமிடவேண்டாம்..
அருமை ….
பழங் கஞ்சி, பச்சை மிளகாய் , சின்ன வெங்காயம் ….. காலை உணவு .
நம் நெஞ்சில் தங்கிய வன்னி வாழ்க்கை
செய்முறை விளக்கங்கள் எல்லாம் புல்லரிக்குது. நான் இலியானா எண்ட உடன வேற ஏதோ செய்முறை விளக்கம் எண்டு நினைச்சு, அவசரப்பட்டு ஓடி வந்தன்….ஆனா இது நல்லாயிருக்கு..
//நான் இலியானா எண்ட உடன வேற ஏதோ செய்முறை விளக்கம் எண்டு நினைச்சு, அவசரப்பட்டு ஓடி வந்தன்….//
அந்த ஏதோவை ஏன் கற்பனையில விடுறியள்.. என்னண்டு சொல்லலாம் தானே..
நானும் மாமிக்கு எவ்வளோ சொல்லிப்பாத்திட்டன்.. அவா ஒரு மாமியாகவே நடந்துகொள்ளிறா இல்லை.. ஏதோ அந்த காஸ் குக்கர் ஒரு கொடுமைக்கார மாமியார் போலவும்.. தான் ஒரு அப்பாவி மருமகள் போலவும் நடந்துகொள்ளுறா..
அண்ணா விளக்கங்கள் நல்லா இருக்கு. அண்ணா இப்ப ஏன் அந்த சொதி புகழ் பதிவர்கள் தங்கள் குரல் பதிவுகளை நிறுத்திப் போட்டீனம்??? என்ன அடிக்கடி காணாமல் போறாங்கள் போல??
அகிலன்,காஸ் அடுப்பையும் மாமியார் கொடுமையும் சொல்லப் போறீங்களோ என்றுதான் நினைத்தேன்.
பிறகு இலியானா…பிறகு விறகு.ம்ம்ம்….இதுதான் எங்கள் ஊர் மண்வாசனை.நீங்க சொன்னதுபோல ஈர விறகை வைச்சு அடுப்பு மூட்டுறதே பெரிய ஒரு கலை.பிறகு அந்த விறகு எரிஞ்சு கறுப்பான கேத்திலை சாம்பலும் மண்ணும் போட்டு தென்னந்தும்பால தேச்சு “பளிச்” ஆக்குறது எவ்வளவு பெரிய கலையிலும் கலை!
//பிறகு இலியானா…பிறகு விறகு.ம்ம்ம்….இதுதான்
எங்கள் ஊர் மண்வாசனை.//
ஹேமா நல்ல நக்கல…
யோவ் பந்தி பிரிச்சு எழுதுங்க..
மேலோட்டமா வாசிக்க முடியல 🙂
//மேலோட்டமா வாசிக்க முடியல//
சயந்தன்.. என்னதிது.. இதில எவ்வளவு ஆழ்ந்து நெருக்கமா வாசிக்கவேண்டிய கருத்துக்கள் எங்கள் இலியானாவைப்பற்றி இருக்கு அதையெல்லாம் நீங்க தவறவிடக்கூடாதெண்டுதான்.. பந்தி பிரியாமக்கிடக்கு.. வாசிச்சு பயன்பெறுவதை விட்டிட்டு..
அகிலன்,சத்தியமா நக்கல் இல்லை.விஜய் நக்கல் என்று நினைச்சபடி வாசிச்சிருப்பார்போல.
thiruvayaru sulaxsan
good who is kema doing as usual