விளக்குகள் அணைக்கப்பட்ட கரையில் தளும்பிக்கொண்டிருக்கிற மதுக்கிண்மெனக்கிடக்கிறது கடல்.. உனது நினைவுகளெனப் பற்றியிழுத்து எனை வீழ்த்தும் திட்டங்கள் வகுக்கிறது கரைமணல்.. யாரோ ஒருத்தனின் முத்தங்களிற்கான யாரோ ஒருத்தியின் சிணுங்கலை எடுத்துப்போகிறது காற்று எனைக்கடந்து.. உனது முத்தங்களை நினைவூட்டி.. உன் சாயலை ஒத்த ஒருத்தியிடம் தயங்கிநிற்கிறதென் பாதங்கள்.. நிலவு எரிந்துகொண்டிருக்கிறது.. ஒரு மதுக்கடையின் மங்கலான விளக்குப்போல.. உலகம் ஒரு நாகரீகமான மதுக்கடை.. அதனால் தான் போதை எல்லாவற்றிலும் ஒளிந்திருக்கிறது.. காதல்,வெற்றி,காமம் எல்லாவற்றிலும் உள்ளொளிர்ந்து கொண்டிருக்கிறது போதை..
இசை பொலிவிழந்துகொண்டிருக்கிறது.. நமக்கான பாடல்களாய்த் தேர்வு செய்து வைத்திருந்த எல்லா தட்டுக்களையும் காலிசெய்தேன்.. கோப்பைகள் நிரம்பும் நயமான சலசலப்பிலும் அடங்காமல் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது. உன் பிரிவின் வார்த்தைகள்.. யாரோ ஒரு குழந்தையிடம் தன் சிறகுகளை இழந்த பட்டாம்பூச்சியாகிற்றென் காதல்.. நூல் கட்டப்பட்ட தும்பியாகவும்.. கயிறுகள் எல்லாவற்றையும் நீயே வைத்திருக்கிறாய்.. இன்னமும்.. உனது அன்பின் கடைசி இறகும் உதிர்ந்து வீழ்ந்தபின் இந்தப் பாலைவனத்தின் கொடும் தனிமையில் துடித்துச் செத்துவிடுகிறேன் நான்.. நீ இனி ஒரு போதும் அயல்வீட்டுக்காரனின் கருணையோடு நெருங்காதே.. நான் சபிக்கப்பட்ட கடவுளின் நோஞ்சான் குழந்தை.. பிரியங்கள் எனக்கு வாய்ப்பதில்லை..
எனது கிண்ணங்களில் நிரம்பித் ததும்பும். ஒளிபொருந்திய உன் புன்னகையைப் பருகத்தொடங்குகிறேன்.. நான். நீ காதருகில் கிசுகிசுக்கும் குரல் நினைவுக்குள் எழுகிறது தீயாய்.. நான் கோப்பைகளை நிரப்பி நிரப்பி ஊற்றினேன் தீயை அணைத்துவிடும் தீவிரத்தோடு.. ஆனாலும் பாஸ்பரசைப்போலத் தண்ணீரிலும் பற்றிக்கொள்கிறது அது.. இன்னமும் எனக்குள் மிஞ்சிக்கிடக்கிறது.. நீ பெயர்த்தெடுத்துப்போன காதலின் மென் வேர்கள்.
இப்போதும் இது கனவென நம்பிக்கிடக்கிறதொரு மனம். இது விளையாட்டு.. இது முடிகையில் நீ பழைய பிரியங்களோடு மீளவருவாய் எனக்கனவுகள் வளர்க்கிறது அது. ஆனால் நீ வரப்போவதில்லை என்கிற நிஜத்தின் குரூரம் பின்னர் குருதியென வழிய… அதையும் கோப்பைகளில் நிரப்பிக்குடிக்கத் தொடங்குகிறது வழியற்று. நீ எடுத்துப்போன பின்னர் தாகித்தலையும் என் தனிமை எல்லாவற்றையும் பருகுகிறது.. ஒரு பட்டினியாளன் உணவை நெருங்கும் வேகத்தோடு.. ஒரு பெருங்குடிகாரனை ஆச்சரியத்தில் மூழ்கடித்து மயக்குகிறது என் இயலாமையின் தாகம்..
நீ எங்கிருக்கிறாய்.. உன் காத்திருப்புக்களின் புன்னகையை வென்றாகிவிட்டதா? என் பிரியங்களைப் புறக்கணித்த உன் திசைகளில் திரும்பக் கூடாதெனும் வன்மத்துடன்.. ஆரம்பிக்கிறேன் எனது வழித்தடங்களை.. என் வெளியேறும் வழிகளையெல்லாம் அடைத்து.. உனது திசைகளில் திருப்புகிறது நினைவுகள்.. கடைசியில் இயலாமைகள் பெருகிச் சூழும் இக்கணத்தில்.. தாயின் பெருவிரலினின்றும் நழுவிய குழந்தையெனத் தேம்பியழத்தொடங்குகிறேன்.. நீ போய் மறைந்த திசைகளை நோக்கி.. எனது அழுகையை ஒரு குரூரப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாய் நீ மறைவாக..
உன்னை அழைக்கும் எனது குரல் தொண்டைக்குள் தேங்க.. எனது கண்களினின்றும் நீங்குகின்றன உனது பாதங்கள்.. காற்று தடங்களை அழிக்கிறது.. நீ எனக்குச் சொன்ன பிரிவின் கொடும் சொற்கள் நடனமிடும் இக்கணத்தில் பெருகிவழியும் கண்ணீரின் உப்புக்கரிக்கும் என் உதட்டில் நான் கோப்பைகளைப் பொருத்துகிறேன்.. எதிரில் நிரம்பிக்கிடக்கின்றன அடுத்தகோப்பையும் நீயற்ற தனிமையும்..
பின்குறிப்பு 01
பீச்ல தண்ணி அடிச்சிருக்கிறீராய்யா நீரு..
நான் தண்ணி அடிக்கத்தொடங்கியே நாலு நாள்தான் ஆச்சு.. அதுக்குள்ள..
சும்மா கடல்காத்துக்கு செமையா ஏறும்யா… ஆனா ஒண்ணு.. உம்மையப்பாத்தா அப்படிச் சொல்லமுடியாதுய்யா.. ஏதோ ரொம்ப அனுபவசாலியாட்டமா நிதானமா அடிக்கிறீரு..
thank you ,thank you, thank you
என்ன தலைவருன்னு நினைப்பா.. அதுக்கெல்லாம் பாண்டிச்சேரி போகணும்யா போலமா… ஞாயித்துக்கிழமை போலாம்..
என்ன எதுக்கு பீச்சுக்கா.. யோவ் இப்பவே போறம் ஈ.சி.ஆர்ல எங்காவது.. வண்டி ஓட்டுவீங்கள்ல நிதானமா… வரும்போது..
எனக்கேவா..
பின்குறிப்பு 02
நண்பர்களுடன் கிரிக்கெட்ஆடிய மாலைகளில் அவர்களோடு சேர்ந்து அருந்த மறுத்த.. பனங்கள்ளின் சுவை குறித்த கற்பனைகள் விரிகின்றன் மனதுள்..கூடவே ஏளனமும்.
பின்குறிப்பு 03
எனது காதலைப் பரிமாறிய விருந்தொன்றுக்கு
நீ கொலைவாட்களுடன் வந்திருந்தாய்..
நான் நான் புன்னகையைப் பரிமாறினேன்
நீ கொடும் சொற்களை வைத்தாய்..
என் பிரியங்களைப் பரிமாறினேன்..
நீ முட்கரண்டிகளால் கிளறியபடியிருந்தாய்..
எதையும் விரும்பாதவள் போல
உன்னைத் திருப்திப்படுத்த எதைத்தருவதெனத் தெரியாது
என்னையே பரிமாறினேன்..
நீ கொலைவாட்களைப் பயன்படுத்தினாய்
என் புன்னகையை
சாம்பல் கிண்ணத்தில் கவிழ்த்துவிட்டு
எனது இரத்தத்தை பருகியபடி வெளியேறினாய்..
உனது வாளின் நுனியில் தொங்கிக்கொண்டிருக்கிறது
என் இதயம்..
………..!
தேவதைகள் தோற்பதில்லையே…!
அண்ணன் உங்கள் மனதுக்கு நெருக்கமான ஒருவன்…
தேவதைகள் தோற்பதில்லை தலைவா தேவதைகளிடம் தான் நாங்கள் தோற்றுவிடுகிறோம்
ரொம்ப ரொம்ப அழகான கவிதை.. ஒவ்வொரு வரியும் பிரமாதம்..
அடப் பாவி
இதுக்குமேல குடிகாரக்குறிப்புகள் எழுத வெளிக்கிட்டால்
……………………
த.அகிலன்
தேவதைகள் தோற்பதில்லை தலைவா தேவதைகளிடம் தான் நாங்கள் தோற்றுவிடுகிறோம்
anbin nimitham tholvi iniyathai thaan irukkum.