(1)
ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது தகிக்கும் சுவர்களிடமிருந்து தப்பித்த மனோநிலையைப் பெறுவதற்காக இன்றைய இரவுக்கு ஒரு படத்தை பார்த்து விடுவதென்று தீர்மானித்தேன். தகிப்பிலிருந்து என்னை விடுவிக்கும் தன் குளுமையான காட்சிகளால் எனை விழுங்கியது tha king of masks திரைப்படம்.
ஒரு திருவிழா இரவில் எங்கும் வாணவேடிக்கை நிகழந்து கொண்டிருக்க. ஓரமாய் தன் குரங்கோடு ஒரு கிழவர் வித்தைகாட்டிக் கொண்டிருப்பார். அவரிடம் நிறைய வித்தைகள் இருந்தன. மனதைக் கட்டிப்போடுகிற வித்தைகள். தன் அன்றாட வாழ்க்கையில் அடுத்தவனை ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டிருக்கும் ஒருவனைக் கூட தன் கண்கட்டி வித்தைகளை நம்பச் செய்துவிடுகின்ற ஆற்றல் கொண்டவர் அந்தக் கிழவர். தன் கையில் வைத்திருந்த விசிறியை வெறும் வெளியில் சடக் சடக் கென்று மடக்கி மடக்கி விரிக்கும் போதெல்லாம் அவர் முகம் வௌ;வேறு முகமூடிகளை அணிந்து கொண்டது. நொடிக்கொரு முகமூடியை மாற்றும் அவர் வித்தையால் மொத்தக் கூட்டமும் குதூகலித்தது. அவர் தான் முகமூடிகளின் ராஜா. (tha king of masks)
ஒரு ஓரத்தில் கிழவர் தன் வித்தையை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் அந்த நாட்டின் அரசில் மிகுந்த செல்வாக்குள்ளவரும் வாழும் போதிசத்துவா (பெண் தெய்வம்) என்று அழைக்கப் படுபவருமான பிரபலமான இசை நாடக நட்சத்திர நடிகர் மாஸ்டர் லியாங் (சூப்பர் ஸ்டார்) (பெண் வேடங்களிற்கு பெயர் போனவர்) அந்தத் திருவிழாக் கூட்டத்துக்குள் நுழைவார். அவரைப் பார்ப்பதற்காக கூட்டம் முண்டியடித்துக்கொண்டு போகும். பல்லக்கில் அமர்ந்திருக்கிற அவர் அந்தக் கூட்டதிலிருந்து விலகி ஒரு புறமாக சூப்பர் ஸ்டாரான தன்னைக் கூட மறந்துவிடுமளவுக்கு இன்னொரு கூட்டத்தை சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் கிழவரைப் பார்ப்பார். கிழவர் காட்டுகிற இந்த முகமூடி மாற்றும் வித்தையிலே தன்னை மறந்து அவரும் சொக்கிப்போவார். அது ஒரு அரிதான அழிந்து வருகின்ற கலை என்பதை மாஸ்டர் லியாங் அறிவார். இப்போது கிழவர் தன் வித்தைகளை நிறுத்தியிருந்தார். தன் முன்னே சிதறிக் கிடக்கும் மிகச் சொற்பமான சில்லறைகளைப் பொறுக்கிவைத்துக்கொண்டு ஒரு திட்டின் மீது யோசனையோடு அமர்ந்திருப்பார். அப்போது வந்து விழுந்த தங்க நாணயத்தை நிமிர்ந்து பார்ப்பார் அது வாழும் போதிசத்துவரான மாஸ்டர் லியாங் போட்ட நாணயமென்று தெரிந்து கொள்வார் கிழவர். மாஸ்டர் லியாங்கும் கிழவரைப் பார்த்து தலையசைத்தபடியே சென்று விடுவார்.
அடுத்த நாள் கிழவரை மாஸ்டர் லியாங் சந்தித்து. கிழவருடைய கலை அற்புதமானதென்றும் கிழவரை தன்னுடைய நாடகக் குழுவில் இணைந்து விடும் படியும் வருமானத்தை பிரித்துக்கொள்வோம் என்றும் கேட்பார்.ஆனால் கிழவர் மறுத்து விடுவார். மேலும் தன் கலையின் ரகசியங்களை பிறத்தியாருக்கு சொல்லித் தரமாட்டேன் என்றும் சொல்லுவார் கிழவர். நான் தனியாள் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை ஆனால் ஒரு வாரிசில்லை என்கிற கவலைதான் என்னைப் பிடித்தாட்டுகிறது சகோதரனே என்று சொல்லுவார். அதற்கு மாஸ்டர் லியாங்கோ நீங்கள் என்னை சகோதரனே என்று அழைத்தாலும் பாதி நாட்களில் பெண்வேடத்தில் பெண்ணாகவே வாழ்ந்து விடுகிறேன். இந்தச் சமூகமும் என்னை பெண்வேடத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது என்பார். அவரவர் துன்பம் அவருக்கு என்றபடி கிழவரிடம் விடைபெறுவார். கிழவர் விரைவில் தனக்கான வாரிசைத் தேடிவிட வேண்டு மென்றும் அவரது கலையை அழியவிடக் கூடாதென்றும் மாஸ்டர் லியாங் கேட்டுக் கொள்வார்.
மாஸ்டர் லியாங்குடனான சந்திப்பிற்குப் பிறகு கிழவர் தனக்கான வாரிசொன்றை உருவாக்கிவிட வேண்டும் என்று முடிவெடுப்பார். குழந்தைகளை நேர்த்திக்கு விற்கிற ஒரு இடத்திற்கு தனது வாரிசாக உருவாகத் தகுதியான ஆண் பிள்ளையை வாங்குவதற்காக போவார். ஆனால் அங்கே அதிகமும் பெண்குழந்தைகள் தான் இருக்கும். என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போங்கள் நான் உங்களிற்காக சுத்தம் பண்ணுவேன் சமைப்பேன் என்று அந்தப் பெண் குழந்தைகள் அவரிடம் கெஞ்சும். ஆனால் கிழவரோ எனக்கு ஒரு ஆண்பிள்ளைதான் தேவை என்று கூறியபடியே அந்தப் பெண்குழந்தைகளைப் புறக்கணித்தபடி நடப்பார். அந்தச் சந்தையில் தனக்குப் பொருத்தமான ஒரு குழந்தை இல்லை என முடிவு செய்து அவர் வெளியேற எத்தனிக்கையில் தாத்தா தாத்தா என்று அழைக்கிற குரல் கேட்டு அவர் திரும்பிப் பார்ப்பார். அங்கே ஒரு சின்னப் பையன் நின்று கொண்டிருப்பான். அந்தச் சின்னப் பையனை விற்க வந்தவனோ பத்து டாலர் தந்தால் பையனைத் தருவேன் என்பான். கிழவர் அது அதிகம் என்றபடி போவார். அவன் ஐந்து டாலருக்கு இறங்கி வருவான். கிழவர் அதுவும் அதிகம் என்று புறப்படுவார். அப்போது தாத்தா தாத்தா என்று அழைக்கிற அந்தக் குழந்தையின் மனசைப் பிசைகிற குரல் அவரை எதுவோ செய்ய அந்தச் சிறுவனை அவர் ஐந்து டாலருக்கு வாங்கிக் கொள்வார்.
இப்போது அவர் தனக்கு வாரிசு கிடைத்து விட்டான் என்ற புழுகத்துடன் எல்லாரிடமும் தான் வாங்கிய பையனை அது தன்னுடைய பேரன் என்று சொல்லிக்கொண்டே செல்வார். அவரது வசிப்பிடம் நதியின் மீது இருந்த ஒரு படகு வீடு. அவர் அங்கு வைத்து அந்தக் குழந்தையிடம் தன் முகமூடி வித்தைகளைச் செய்து காட்டி மகிழ்விப்பார். அவனுக்கு டொக்கி என்று செல்லப் பெயர் வைத்து அழைப்பார். அப்படியே தன்னைவிட்டு முப்பது வருடங்களிற்கு முன்னால் ஓடிப்போன தன்மனைவியைப் பற்றியும், பத்து வயதான தன் மகன் நோய்வாய்;ப் பட்டு இறந்து போனது பற்றியும் சொல்லுவார். இப்போது நீ மட்டும் தான் எனக்கிருக்கிறாய் என்று சொல்லும் கிழவரைச் சிறுவன் பார்த்துக்கொண்டேயிருப்பான். தான் வித்தைகாட்டுகிற இடங்களிற்கு அவனையும் கூட அழைத்துச் செல்வார். அவன் தனக்கும் இந்த வித்தையைக் கற்றுத் தருவீர்களா? என்று கேட்க. ஆமாம் உனக்கு மட்டும் தான் இந்த வித்தை அதை உனக்கு மட்டும் தான் கற்றுத் தருவேன் ஏனெனில் அது குடும்பத்தின் சொத்து. இதை வெளியாட்களும் அதைவிட முக்கியமாகக் பெண்களும் கற்றுக்கொள்ளக் கூடாது. என் வாழ்க்கையில் என்றைக்குமே சொல்லித்தரவும் மாட்டேன் என்று சொல்லுவார். இதைச் சொல்லும் போது கிழவர் மிகவும் அழுத்தமாகச் சொல்லுவார்.
ஒரு நாள் இவர் தனது பேரனைத் தோளில் சுமந்தபடி மாஸ்டர் லியாங் நடிக்கிற இசை நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்காக போவார். மாடியில் ஒப்பனையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் லியாங் கிழவரைக்; கண்டு விட்டு அவரிடம் அவர் தனது வாரிசைக் கண்டு பிடித்து விட்டதற்கு வாழ்த்துச் சொல்லுவாள். அவரைத் தனது பேரனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளச் சொல்லுவார். கிழவர் தன் பேரனுக்கு மாஸ்டர் லியாங்கை அறிமுகம் செய்து வைத்து விட்டுப் பேரனுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுவார். நாடகம் முடிவடைந்ததும் கிழவரும் பேரனும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் ஒரு இடத்தில் கரும்பை யார் சரிபாதியாக நிலைக்குத்தாகப் பிளக்க முடியும் என்று போட்டி வைத்துக்கொண்டிருப்பார்கள். கிழவர் தான் முயற்சிப்பதாய்ச் சொல்லி வெகு அனாசயமாக அதை நிலைக்குத்துச் சரிபாதியாகப் பிளந்தெறிவார் வெண்ணெயைப் போல. அடுத்த கரும்பையும் கிழவர் பிளக்க முயற்சிக்கும் போது போட்டி நடத்துகிறவன் ஒளிந்திருந்து கெட்டப் போலால்(உண்டி வில்) அவரைத் தாக்குவான் கைதவறிக் கத்தி காலில் பட்டு வெட்டிவிடும். கிழவர் டொக்கியை பக்கத்து கடையில் வைன் வாங்கி வரச்சொல்லி விரட்டுவார். வைன் வந்ததும் அதைக் காயத்தின் மீது விசிறியடித்து விட்டு மீதமிருந்த வைனை ஒரு துணியில் நனைத்து எரித்து அந்தச் சாம்பரின் மீது டொக்கியை ஒண்ணுக் கடிக்கச் சொல்வார் அவன் தயங்குவான். என்ன ஒண்ணுக்கு வரவில்லையா பரவாயில்லை அடி அப்பதான் எனக்கு காயம் ஆறும் என்று கிழவர் துரிதப் படுத்து வார். டொக்கி மேலும் தயங்கிய படி அழ ஆரம்பிப்பான் கிழவர் ஏன் அழுகிறாய் அடி என்று சொல்லுவார். அப்போது டொக்கி அழுதபடி தான் ஒரு ஆண் அல்ல என்றும் தான் ஒரு பெண் என்றும் அழுதபடி சொல்லுவாள். கிழவர் திடுக்கிட்டுப் போவார். தான் வெட்டப்பட்டது கத்தியால் அல்ல இவளது சொற்களால் தான் என்பது போல ஆத்திரத்துடன் ஒரு சின்னப் பெட்டை என்னை ஏமாற்றிவிட்டாயே என்று திட்டியபடி எல்லாவற்றையும் விட்டெறிந்து விட்டு கோபத்துடன் நடந்து செல்ல ஆரம்பிப்பார். அவரைத் தொடர்ந்து நடந்து போகிற டொக்கி தான் அவரை ஏமாற்றுவதற்காக அப்படிச் செய்யவில்லை என்றும். தான் இதுவரை நிறையத் தடவைகள் விற்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் யாருமே உங்களைப் போல அன்பாக நடத்தவில்லை எங்கே நான் பெண் என்று தெரிந்தால் நீங்கள் என்னை சேர்த்துக்கொள்ள மாட்டீர்களோ என்றுதான் தான் பொய் சொன்னதாக கிழவருக்கு சமாதானம் சொல்லுவாள். அனால் கிழவரோ சமாதானம் ஆகாதவராக அவள் தன்னை முட்டாளாக்கி விட்டதாக மேலும் மேலும் திட்டிக்கொண்டே போவார்.
இப்போது டொக்கி கிழவரிடம் கெஞ்சுவாள். தான் ஒரு பெண் என்று தெரிந்ததனால் தன்னை மறுபடியும் விற்று விடவேண்டாம் என்று கிழவரிடம் கெஞ்சுவாள். கிழவரோ நான் உன்னை விற்கப்போவதில்லை என்று சொல்லிக் கொண்டே ஒரு பணப்பையை அவளெதிரில் விட்டெறிந்து இதை எடுத்துக்கொள் போ போய் எங்காவது பிழைத்துக்கொள் என்பார். டொக்கியோ தான் எங்கே போவேன் என்கிற கேள்வி தொனிக்க அவரைப் பரிதாபமாய்ப் பார்த்தபடி விம்மி விம்மி அழுதபடியே பணப்பையை எடுக்காமல் இருப்பாள். கிழவர் அவளைக் கரையிலேயே அழுதபடி கைகழுவி விட்டு விட்டு தனது படகு வீட்டை அவிழ்த்து நதியிலே கலக்க விடுவார். டொக்கி அவரது துடுப்பை பற்றியபடி நான் நன்றாக சமைத்து வீட்டை சுத்தமாக வைத்திருக்கிறேன் என்னை ஒரு வேலைக்காரியாக மட்டுமாவது வைத்திருங்கள் என்று மன்றாடுவாள். கிழவர் கோபத்துடன் அவளைத் எத்தித் துரத்திவிட்டு படகை எடுத்துக்கொண்டு புறப்படுவார். டொக்கி நதியின் கரைமுழுதும் தாத்தா தாத்தா என்று கத்தியபடியே ஓடுவாள். அவள் ஓடுவதைப் பார்க்கிறபோது எழுந்து அவளுக்கு உதவியாக அந்தக் கிழவருக்கு இரண்டு போடமாட்டோமா என்றிருக்கிறது. கிழவர் மீது கரைபுரண்ட கோபம் எழுகிறது. கரைமுடிந்து போகிற ஒரு இடத்தில் தண்ணீருக்குள் இறங்கி அவரது படகை நோக்கிப் போக முயல்வாள் டொக்கி. நீச்சல் தெரியாத அவள் தாத்தா தாத்தா என்று கதறியபடி மூழ்குவதைப் பார்க்கிற பெரியவர் மனம் கேட்க மாட்டாமல் படகிலிருந்து குதித்து அவளைக் குதித்துக் காப்பாற்றுவார்.
அதன் பிறகு அவள் தன்னோடிப்பதற்கு சம்மதிக்கும் கிழவர். ஆனால் அவள் இனிமேல் தன் வாரிசாக முடியாதென்றும் அவள் ஒரு வேலைக்காரியாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்லுவார். அவளிடம் தன்னை இனிமேல் தாத்தா என்று சொல்லக் கூடாதென்றும் இன்றிலிருந்து அவள் தன்னை முதலாளி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் சொல்வார். வேலை செய்தால் மாத்திரமே இனிமேல் உனக்கு சாப்பாடு கிடைக்கும் என்பார். அவள் சரி முதலாளி என்று அவர் சொன்னதற்கெல்லாம் ஒத்துக்கொள்வார். கிழவர் தன் முகமூடி மாற்றும் வித்தையைத் தவிர்த்து விட்டு அவளுக்கு வேறு சில கரணமடிக்கும் வித்தைகள் சொல்லிக்கொடுப்பார். அன்றிலிருந்து அவரும்,டொக்கியும்,அவரது குரங்கு (ஜென்ரல் அதன் பெயர்) சேர்ந்தே வித்தை காட்டப் போவார்கள். டொக்கியும்,குரங்கும் தம் உடலை விதவிதமாய் வளைத்து கரணமடித்து பார்வையாளர்களின் மனசை வளைப்பாள். அவள் கிழவர் தன் கூடாரத்திற்குள் மூகமூடி மாற்றும் வித்தைக்கான ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கையில் ஒளிந்திருந்து அவர் எப்படி அந்த வித்தைக்கு தயாராகிறார் என்பதை ஏக்கத்துடன் பார்ப்பாள். அவளிடம் அந்த வித்தையைக் கற்பதற்கான ஆர்வம் அதிகமிருக்கும். என்னதான் உடலை வில்லாக வளைத்தாலும் அவளால் கிழவரின் மனசை வளைக்க முடியவில்லை. அவர் பெண்களைத் தன் வித்தைக்கு வாரிசாக்குவதில்லை என்னும் முடிவில் உறுதியாக இருந்தார்.
ஒரு நாள் கிழவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவள் அவரது வித்தைப் பெட்டியில் இருந்து முகமூடிகளை எடுத்து தன் முகத்தில் பொருத்திப் பார்ப்பாள். அந்த முகமூடிகள் அவளது முகத்துக்கும் மாற்றத்தைக் கொடுத்தன. அப்போது அவளுக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கில் தவறுதலாகப் பட்டு முகமூடி பற்றிக்கொண்டு எரிந்துவிடும் அவள் அதை அணைக்க முயற்சி செய்வதற்கிடையில் தீ தொடர்ந்து பற்றி அவர்களுடைய படகு வீடே பத்திக்கொண்டு எரியும் உதவி செய்ய யாருமற்று அவள் தீ தீ என்று கத்திக்கொண்டே அவரது வித்தைப் பெட்டியை மட்டும் தீயிடமிருந்து காப்பாற்றி எடுத்து வருவாள். அந்தப் பிஞ்சின் கனவுகளையும் ஆசையையும் தீ தின்று தொலைத்து விட்டிருக்கும்.
படகு வீடு முற்றிலுமாக எரிந்து போயிருக்கும். கிழவர் வந்து பார்ப்பார் அவள் அவருக்குப் பயந்துகொண்டு வீட்டை விட்டு ஓடிவிடுவாள். கிழவரும் அவள் போவதையே விரும்பியவராக தனது வீடெரிந்து விட்டதே என்கிற துயரத்துடன் அலைந்து கொண்டிருப்பார். டொக்கி மறுபடியும் பிச்சையெடுத்தும் திருடியும் வாழும் நிலைக்கு தள்ளப்படுவாள். அழுக்கேறிய சட்டையுடனும் அதைவிடக் கொடூரமான பசியுடனும் தெருக்களில் அலைந்து கொண்டிருப்பாhள். அப்போது யார் அவளைக் கிழவரிடம் விற்றானோ அவனிடமே மறுபடி அகப்பட்டுக்கொள்வாள். அவளைக் ஒரு இடத்திற்குக் கொண்டு செல்கிற அவன் அவளை ஒரு பழைய மரச்சாமான்கள் வைக்கும் அறையில் அடைத்து வைக்கிறான். இப்போது டொக்கி அந்த அறையில் ஏற்கனவே அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அழகான குட்டிப் பையனைப் பார்க்கிறாள். அவன் விக்கி விக்கி அழுதுகொண்டிருக்கிறான் மிகச் சிறிய கிண்ணத்தில் தன் முன்னே வைக்கப்பட்டிருக்கும் உணவைக் கூடச் சாப்பிடாமல். அவன் சாப்பிடாமல் வைத்திருக்கும்; உண்வை மிகுந்த பசியுடன் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடிப்பாள் டொக்கி. அப்போது அந்தச் குட்டிப் பையன் தன் கையிலிருந்த முட்டை ஒன்றையும் இவள் பக்கமாய் நீட்டி இதையும் சாப்பிடு எனபான்;. அவள் அதைச் சட்டென்று வாங்கி ஒரு கடி கடித்துவிட்டு பிறகு ஒருகணம் யோசிப்பாள். அதன் பின்பே அவள் அவனது பெயர் என்ன என்கிறாள். அடுத்து சில நிமிசங்கிளிலேயே அவளை அவன் அக்காவாக ஏற்றுக்கொண்டு விடுகிறான். அவள் தனது தாத்தா king of masks என்று சொல்கிறாள். அவன் தன் தாத்தாவும் கிங் என்று சொல்லுவான். இவள் சிரித்தபடி எனது தாத்தா பெரியவர் நிறைய வித்தைகள் தெரிந்தவர் அப்படி இப்படி என்று கிழவரைப் புகழ்ந்து அந்தச் சின்னப் பையனின் குண்டுக் கண்களை விரியச் செய்வாள்.
இரவானதும் அவள் அவனையும் அழைத்துக்கொண்டு அந்த அறையில் இருந்தும் அவர்களை அடைத்து வைத்திருக்கிற கூட்டத்திடமிருந்தும் தப்பி ஓடுவாள். தப்பித்த அன்று இரவு மறைவான ஒரு இடத்தில் தங்கும்போது அவள் நாளைக்கு உன்னை என் தாத்தாவிடம் அழைத்துச் செல்கிறேன் அவர் உன்னைப்போல ஒரு ஆண் பிள்ளையைக் கட்டாயம் விரும்புவார் என்று சொல்லுவாள்.
அடுத்த நான் அந்தச் சிறுவனை கிழவரின் படகு வீட்டில் விட்டு விட்டு அவள் போய்விடுவாள். கிழவர் தன் படகு வீட்டில் இருக்கிற சிறுவனைப் பார்த்து மகிழ்வார். தனக்கு வாரிசு கிடைத்து விட்டான் என்று அவனைத் தூக்கிக் கொஞ்சுவார். அவர் அவனிடம் உனது வீடு எப்படியிருக்கும் என்று கேட்பார். உன்னை யார் இங்கு கொண்டு வந்தது என்றும் கேட்பார். அவனோ எனது வீடு ஒரு மாளிகை என்றும் தன்னை இங்கு அக்கா கொண்டு வந்தாள் என்றும் சொல்லுவான். அக்கா …. கிழவருக்கு டொக்கி தான் அவனைக் கொண்டு வந்திருக்கிறாள் என்று புரிந்து போகும். அவர் படகு வீட்டை விட்டு வெளியில் வந்து அவளை அளைப்பார் ஆனால் அவள் அங்கிருக்க மாட்டாள். அவன் தன் வீடு மாளிகை மாதிரி என்று சொல்வதை கேட்டுச் சிரிப்பார் கிழவர். ஆனால் அவர் அப்போது அறிந்திருக்கவில்லை அந்தச் சிறுவன் அந்த நாட்டு அரசரின் பேரன் என்பதையும். அவனைக் காணவில்லை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதையும் கூட. அரச படைகள் குழந்தையைத் தேடிக் கொண்டிருந்தன. அடுத்த நாள் டொக்கி ஒரு தோட்டத்தில் முள்ளங்கிகளைத் திருடிக் கொண்டிருக்கையில் கிழவரை அரசபடைகள் இழுத்துச் செல்வதைக் காண்பாள்.
அவரை ஏன் இளவரசரைக் கடத்தினாய் என்று விசாரிப்பார்கள். அவரோ எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்பார். ஆனால் விசாரணையில் போலீசார்; அவருக்கு அடிப்பார்கள். அவருக்கு உங்ளே அடிவிழும்போது வெளியே மரத்தில் இருக்கிற அவரது குரங்குக் குட்டி தவியாத் தவிக்கும். தன் எஜமானன் அடிவாங்குவதைப் பொறுக்க முடியாமல் பரபரக்கும். இப்போது கிழவர் இளவரசனைக் கடத்திய குற்றத்திற்காக சிறையிலடைக்கப்படுவார். இதுவரை இடம்பெற்ற குழந்தைக் கடத்தல்களிற்கெல்லாம் அவர்தான் காரணம் என்று அவர் மீது அனைத்து வழக்குகளையும் போடுவார்கள்.(எல்லா நாட்டுக் காவல்துறையும் ஓரே மாதிரித்தான் போல) டொக்கி சிறைக் காவலனிடம் கெஞ்சி. கிழவரைப் போய்ப் பார்ப்பாள். அவரிடம் முதலாளி தான் உங்களிற்கு ஒரு ஆண் பிள்ளை வேண்டும் என்பதனாலேயே அவனை அழைத்து வந்ததாகவும் ஆனால் அது உங்களை இப்படிச் சிக்கலில் மாட்டிவிடுமென்று தான் நினைக்கவில்லை உங்களைச் சிக்கலில் மாட்டிவிட்ட என்னைத் தண்டியுங்கள் என்று அவள் அவரிடம் மன்றாடி அழுவாள். ஆனால் கிழவரோ டொக்கி இது என்னுடைய விதி இதற்காக நான் உன்னைக் குற்றம் சொல்லமாட்டேன் என்று சொல்லுவார். டொக்கி தன்னுடன் எடுத்து வந்திருந்த அவரது முகமூடிகளை அவரிடம் கொடுப்பாள். அவரோ அவற்றை வாங்கி அழுதபடி இவற்றோடு விளையாடிபடியே என்வாழ்நாட்களை கழித்து விடலாம் என்று நினைத்தேன் ஆனால் இனி இவற்றிற்கு என்ன வேலை என்று விசும்பியபடி அவற்றைக் கிழித்தெறிவார். இந்தக் கலை என்னுடனேயே அழிந்து போகப் போகிறது என்று அழுவார். அதை அழித்த பாவத்தை நான் செய்யப் போகிறேன் என்று கதறுவார் அவளிடம் அவரது குரங்கைக் கொடுத்து எமது வீட்டில் கொஞ்சப் பணமிருக்கிறது இந்தக் குரங்கையும் உன்னுடன் வைத்துக்கொள் எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுவார். டொக்கியோ குரங்கைக் கையில் பிடித்தபடி முதலாளி முதலாளி என்றழைத்துக் கொண்டே அழுவாள். கிழவருக்கு இப்போது அவள் முதலாளி என்றழைப்பது உறுத்தினாலும் ஒன்றும் சொல்லமாட்டார். அதற்குள் டொக்கி கதறக் கதற காவலாளி அவளை இழுத்துச் சென்று சிறைக்கு வெளிளே விடுவான்.
குரங்குடன் அழுதபடி வரும் டொக்கியைக் கண்ட கிழவரின் நண்பர் ஒருவர் அவளிடம் கிழவரைக் காப்பாற்ற ஒரு வழியிருக்கிறதென்றும், அந்த நாட்டின் வாழும் போதிசத்துவர் மாஸ்டர் லியாங் கிழவரின் நண்பர் என்றும். அவர் நாட்டின் செல்வாக்கானவர்களில் ஒருவர் அவரிடம் சென்று நீ உதவி கேள் அவரால் மட்டுமே king of masks இனைக் காப்பாற்ற முடியும் என்று சொல்லுவார். டொக்கி பெரிய பிரயத்தனப் பட்டு ரசிகர்களாலும் பிரமுகர்களாலும் சூழப்பட்டிருக்கிற மாஸ்டர் லியாங்கை சந்திப்பாள். அவரிடம் தான் king of masks ன் பேத்தி என்று அவரிடம் அறிமுகப் படுத்திக் கொள்வாள். மாஸ்டர் லியாங் டொக்கி நீ ஆணாக இருந்தாயே என்பார். டொக்கி அவரிடம் கிழவர் கைது செய்யப் பட்டிருப்பதையும் நடந்த உண்மைகளையும் அவரிடம் சொல்லி தன் தாத்தாவைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டுவாள்.
இப்போது மாஸ்டர் லியாங் அவளைக் கவலைப்பட வேண்டாம் என்றும் தான் அவளுக்கு உதவி செய்வதாகச் சொல்லுவார். ஆனால் அடுத்தநாளே அவர் டொக்கியிடம் கொஞ்சப் பணத்தை கொடுத்து தான் எவ்வளவோ முயற்சி செய்தும் தாத்தாவின் விவகாரத்தில் டொக்கிக்கு உதவ முடியவில்லை என்றும் தன் செல்வாக்கை வைத்துக் கொண்டு உள்ளுர்; அரசியல் விவகாரங்களில் தலையிட முடியாதென்றும் கவலையோடு சொல்லுவார். டொக்கி அழுதுகொண்N;ட வெளியேறுவாள்.
ஆனால் அன்று மாலை மாஸ்டர் லியாங்கின் பரம ரசிகரான காவல்துறை ஜெனரல் கலந்து கொள்கிற மாஸ்டர் லியாங்கின் நாடகம் நடைபெறுவதைத் டொக்கி தெரிந்து கொண்டு. நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் கூரை மேல் ஏறிக்காத்திருப்பாள். நிகழ்ச்சி முடிவடைந்ததும் கூரையில் இருந்து கயிற்றில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே காவல்துறை ஜெனரலைப் பார்த்து கத்துவாள் என் தாத்தா நிரபராதி அவரை விடுதலை செய்யுங்கள் குழந்தைகளைத் தாத்தா கடத்த வில்லை. அந்தக் கடத்தல் கும்பலிடமிருந்து இளவரசரைத் காப்பாற்றி அழைத்து வந்தது நான் தான் தாத்தாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லுவாள். காவல் துறை ஜெனரல் யார் இவள் என்று கேட்பார். அப்போது மாஸடர் லியாங் நேற்று நான் உங்களிடம் கேட்டேனே king of masks ஐப் பற்றி. அவரது பேத்தி என்று சொல்லுவாள். காவல்துறை ஜெனரலோ அதுதான் நேற்றே சொல்லிவிட்டேனே நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட முடியாதென்று என்பார். ஆனால் டொக்கியோ மேலே தொங்கிக் கொண்டே நீங்கள் இதைப்பற்றி மீண்டும் விசாரிப்பதாக உறுதி தராவிட்டால் நான் கயிற்றை அறுத்துக்கொண்டு இறந்து விடுவேன் என்று சொல்லுவாள். ஆனால் காவல் துறை ஜெனரலோ இப்படிச் சொல்பவர்கள் ஒரு போதும் அறுத்துக்கொண்டு சாகமாட்டார்கள் நீங்கள் உங்கள் வேலைகளைக் கவனியுங்கள் என்று சொல்லிவிட்டுப் புறப்படுவார். ஆனால் டொக்கி கயிற்றை அறுத்துக்கொண்டு கீழே விழுவாள் அவளை நிலத்தில் விழுந்து விடாமல் மாஸ்டர் லியாங் ஏந்திக் கொண்டு படிகளில் உருண்டு அவளைக் காப்பாற்றுவார். மாஸ்டர் லியாங்கிற்கும் அடிபட்டுவிடும். அவர் காவல்துறை ஜெனரலிடம் இந்தக் குழந்தை தன் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்த பிறகும் உங்களிற்கு இரக்கம் வரவில்லை என்றால் நீங்கள் தராளமாக கிழவரைப் பற்றி விசாரிக்காமல் விடுங்கள் என்பார். காவல்துறை ஜெனரல் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தான் உடனடியாக இதில் தலையிடுகிறேன் என்பார்.
விடுதலையாகிற கிழவர். மாஸ்டர் லியாங்கிடம் சென்று தன் நன்றிகளைச் சொல்வார் மாஸ்டர் லியாங்கிடம். ஆனால் லியாங்கோ மறுத்தபடி நீங்கள் நன்றி சொல்வதாக இருந்தால் அதை டொக்கிக்குத்தான் சொல்லவேண்டும் ஏனெனில் அவாள்தான் உங்களைத் தன் உயிரைக் கூடத் துச்சமென மதித்து காப்பாற்றினாள் என்று சொல்லுவார். கிழவர் உடைந்த மனநிலையுடன் தன் படகு வீட்டிற்கு போவார் அங்கே வீட்டைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிற டொக்கியையும் தன் குரங்கையும் பார்ப்பார். இவரைக் கண்டதும் முதலாளி என்று அழைக்கும் டொக்கியை நோக்கி அழுதபடி தன்னைத் தாத்தா என்று அழைக்கும் படி சொல்லுவார். இப்போது டொக்கியின் முகம் துன்பங்கள் வடிந்து பிரகாசமானதாய் மாறும் கூடவே முகமூடிகளாலும்.
(2)
இந்தப்படம் இந்த இரவில் என்னை பெண்களுக்கும் ஆண்களிற்கும் விதிக்கப்பட்டிருக்கிற எல்லைகள் குறித்து சிந்தனைகளைக் கிளப்பி விட்டது. பெண்களுக்கு ஆண்களிற்கு என்று ஒதுக்கப் பட்டிருக்கிற எல்லைகள் சமூகத்தின் எல்லா இடங்களிலும் எல்லாத் தளங்களிலும் இறைந்து கிடக்கிறது. பெண்கள் பேசக் கூடியவிசயங்கள் செய்யக்கூடிய செயல்கள் என்று வரையறைகள் உள்ளன. கிழவரிடம் டொக்கியின் மீPதான பிரியம் உள்ளே ஒளிந்திருந்தாலும். பாரம்பரியத்தில் ஊறிக்கிடக்கிற அவரது மனதின் மறுபாதி அவளுக்கு தன் கலையைச் சொல்லிக்கொடுக்கத் தயங்குகிறது. இவளை எப்படி தன் வாரிசாக கொள்ள முடியும் என்று குமைகிறார். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைக்குத்தாள் தன் கலையைச் சொல்லிக்கொடுப்பேன் என்கிறார். அவரைப் பெண்களிற்கு தன்கலையைக் கற்றுக்கொடுக்க கூடாது என்கிற தன் மனோநிலையில் இருந்து இறங்கி வர வைப்பதற்கு டொக்கி நிறையப் போராட வேண்டியிருக்கிறது. அவரிடம் மட்டு மல்ல இந்த சமூகத்திடமும்.
இந்தப்படம் எனக்கு என்னுடைய கோபக்காரா மாமா ஒரு வரை நினைவு படுத்தியது. அவருக்கு 6 பெண்பிள்ளைகள் ஆறுமே பெண்கள் தான். ஒரு ஆண் பிள்ளை கூடக்கிடையாது. அவர் அது குறித்து மிகவும் கவலைப் பட்டார் என்று நினைக்கிறேன். கவலைப் படாமல் இருக்க முடியுமா சீதனம் மாப்பிள்ளை படிப்பு செலவு என்று ஒரே கவலை ஆனால் அதெல்லாவற்றையும் விட அவரை வாட்டி வதைக்கிற ஒரு கவலையாய் தனக்கு கொள்ளி வைக்க ஒரு பிள்ளை இல்லை என்பதாய் இருந்தது. அந்தக் கவலை அவரது ஒவ்வொரு செய்கையிலும் இருக்கிறதாய்ப் படும் எனக்கு.
என் சின்ன வயசில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு முறை மிளகாய்க் கண்டுகளிற்கு தண்ணீர் இறைப்பதற்காக கிணற்றுக்குள் பலகை கட்டி அது கயிற்றில் தொங்கிக் கொண்டு நிற்கும் அந்தரத்தில். அதிலே வாட்டர் பம்பை வைத்து தண்ணீர் இறைத்தால் தான் தண்ணீர் இழுக்கும் பம்ப். ஆழம் அப்படி கிணறுகளில். விஸ்ணு அந்தக் கிணறுகளில் இறங்கித் தேட ஆரம்பித்திருந்தால் இன்னும் வேலை சுலபமாக முடிந்திருக்கும் (அடியதை; தேடுவதற்கு தோண்டுகிற வேலை குறைந்திருக்கும் என்கிறேன்) ஆழம் அப்படி. அப்படி ஒரு முறை இறைத்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு தேத்தண்ணி கொண்டு வந்து கொடுத்தா அவற்ற மகள்களில ஒராள். அப்ப அவர் சொன்னார் பொம்பிளைப் பிள்ளையெண்டபடியா தேத்தண்ணி ஊத்தி கொண்டு வந்துதான் தரேலும் ஆம்பிளைப் பிள்ளையெண்டா என்னோட கிணத்துக்க இறங்கியிருப்பான் எண்டார். எனக்கு ஒரு மாதிரியிருந்திச்சு. அவருக்கு அது ஒரு குழறயாகவும் வருத்தமாகவும் கடைசி வரைக்கும் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவரது மகள்களிற்குக் கொள்ளி வைக்கிற அளவுக்குத் தைரியமும் துணிச்சலும்(சமூகத்தின் வரையறைகளை உடைக்க) அவர் சுதந்திரம் கொடுக்கவும் தவறவில்லை. ஆனால் எங்கள் அம்மாக்களை யெல்லாம் பார்த்து அவர் சொல்லுவார் என்னடி ஆம்பிளைப் பிள்ளையள் வளர்க்கிறியள் எனக்கு ஆம்பிளைப் பிள்ளையள் இருந்தால் எப்படி வளர்ப்பன் தெரியுமா என்பார். என்னதான் அவர் தைரியசாலிகளாக அவர் தன் மகள்களை வளர்த்தாலும் சமூகத்தை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுத்தாலும். தான் ஆண்களிற்கு நிகராக பெண்பிள்ளைகளை வளர்த்திருக்கிறேன் என்று சொன்னாலும் அவரது அடிமனதிலும் ஆண் குழந்தைகளை உயர்த்தி வைத்துப் பார்க்கிற மனநிலை இருந்து கொண்டேயிருந்தது.அது இருந்து கொண்டேதான் இருக்கும் கட்டைவேகிற வரைக்கும்.
இதுதான் The king of masks இலும் நிகழ்கிறது. கிழவர் மட்டும் கெட்டவரல்ல அவரிடமும் டொக்கியைப் பிரிய முடியாத ஏக்கம் இருக்கிறது. அவள் மீதான பாசம் இருக்கிறது. ஆனாலும் அவருள் இருக்கிற தன் கலையை பெண்களிற்கு கற்றுக்கொடுக்க கூடாது என்கிற நம்பிக்கை (ஆண் குழந்தைகள் உயர்வானவை எனுமாப்போல்) அவரைத் தடுக்கிறது. தன் வீட்டில் எல்லா வேலைகளையும் அழகாக செய்கிற அவளிடம் நீ மட்டும் ஆணாக இருந்தால் என்று பெருமூச்சுடன் சொல்வார். டொக்கி கோபத்துடன் ஏன் ஆண்களுக்கு மட:;டும் என்ன வித்தியாசமாக இருக்கிறது என்பாள் ஒரு சின்னக் குழாய்தான் என்று கிழவர் வறட்சியாய் சிரிப்பார். டொக்கி மேலும் கோபத்துடன் அவரிடம் ஏன் நான் வித்தைகள் செய்யவில்லையா சிறப்பாக வீட்டைக் கவனிக்கவில்லையா எனக்கு என்ன குறை என்று கேட்பாள். சரி பெண்களிடம் குறை இருக்கும் என்றால் பிறகெதற்காக நீங்கள் போதிசத்வாவை(பெண் தெய்வம்) மட்டும் வணங்குகிறீர்கள் அவளுக்கு இருக்கிறதா அந்தப் குழாய் என்று கேட்பாள். கிழவரிடம் பதிலேதும் இல்லாமல் என்ன சொல்வதெனத் தெரியாமல் கிழவர் மௌனிப்பார்.
(எனக்கு கனிமொழியின் ஒரு கவிதை நினைவுக்கு வந்தது)
இது வெறுமனே ஒரு டொக்கி என்கிற சிறுமிக்கும் கிங் ஒவ் மாஸ்க்கிற்கும் இடையிலான பிரச்சினையில்லை. இது சமூகத்தின் நம்பிக்கைகள் குறித்து அல்லது வாரிசு அரசியல் குறித்த புரிதல்களையும் சேர்த்து கேள்விக்குள்ளாக்குகிற படம். இன்றைக்கும் கொள்ளி வைக்கப் பிள்ளையில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். கொள்ளி வைக்க ஆம்பிளைப் பிள்ளையள் இல்லை என்கிற மாதிரித்தான் கிழவரும் தனக்கான வாரிசைத் தேடி அலைகிறார்;. இப்படியான ஒரு நம்பிக்கைகள் குறித்துத் தான் படம் ஒரு சிறுமியைத் கொண்டு கேள்விகளை எழுப்புகிறது. இதோ டொக்கியின் முகத்திலும் கிழவரின் முகத்திலும் முகமூடிகள் ஒரு சேர மாறிமாறி வித்தை காட்டுகின்றன.
குறிப்பு
இயக்குனர் – வூ-தியன்மிங்
சீன மொழித்திரைப்படம்
விக்கிபீடியா இணைப்பு
நன்றி DVD இரவல் தந்த இயக்குனர் செல்வம் அவர்களுக்கு
நல்ல கதை.. அகிலன் ..
அருமையான கதை..அதை நீங்கள் சொன்ன விதமும் அருமை.
சற்று முன் தான் “சண்ட” படத்தில் பொம்பளையா பிறந்தா பொறூமை வேண்டும் என்று ஒரு கிழவி பாடுவதைக் கேட்டு, சே திருந்தவே மாட்டாங்களா.
மனிதராக பிறந்தால் பொறுமை வேண்டும் என்று சொன்னால் அது சரி. பெண்ணுக்கு மட்டும் ஏன் பொறுமை. x(
பெண்களும் இதுக் குறித்து குரல் எழுப்பவதில்லையே என்று நினைத்துக் கொண்டு வந்தேன். வந்தால் பெண் நிலைப் பற்றிய கதை..
புது வீட்டில் பின்னுட்டப் பெட்டிக்கு நிலைகதவு (Borders) போடுங்க. எங்கே பெட்டி என்று தேட வேண்டியதாக இருந்தது. கூடவே, பின்னுட்ட சங்கிலியும்.
மிகவும் அருமை அகிலன். படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அளவுக்கதிகமாக ஏற்பட்டு விட்டது…
அப்படியே DVD யைக் கொஞ்சம் இங்கே அனுப்பறது. 🙂
நிதானமான மொழிநடையில் ஒரு சிறுகதையை போல எழுதியிருக்கின்றீர்கள் இதை. சில சொற்கள் இன்னும் வாசிப்பதற்கு நெருக்கத்தை தருகின்றது.இப்படி
//பிறத்தியாருக்கு //
//அவற்ற மகள்களில ஒராள்//
kalakal
அழகாக கதை சொன்னதற்கு நன்றி. இந்த மாதிரி அருமையான படங்களை எங்கள் ஊரில் எங்கே தேடுவது? கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது!
நன்றி.
சமூகத்தில் இருக்கும் பலகுறைபாடுகள் அந்தந்தநேரங்களில் அதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் தங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு ஆண் பெண் வேற்றுமை குறித்த கவனிப்பில் சிறுவர்களை பணத்திற்கு விற்பது தொடர்பான கருத்து அமுங்கிப்போகிறது.
பார்த்ததை பகிர்ந்த விதம் அருமை அகிலன்.
அருமையான கதை, உங்கள் மொழியும். வாழ்த்துக்கள்.