“வண்டி வண்டி புகைவண்டி
வாகாய் ஓடும் புகைவண்டி
கண்டி காலி கொழும்பெல்லாம்
காணப்போகும் புகைவண்டி.
சுக்குப் பக்குக் சுக்குப் பக்சுக் கூகூகூகூகூகூகூகூகூ”
புகைவண்டியாகத்தான் எனக்கு இரயில் பழக்கமானது. ஆனாலும் இந்தப்பாடலைக் கேட்பதற்கு முன்னாலேயே நான் இரயிலில் பயணித்திருப்பதாக அம்மா பின்னாட்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நினைவிருப்பது இந்தப்பாடலை பாடிக்கொண்டு நாங்கள் பாலர்வகுப்பு மரத்தை ஒருவர் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டு சுத்தி வந்தது தான்.
எங்கள் வீட்டில் அம்மாவையும் அப்பாவையும் தவிர்த்து ( அப்பாவும் இப்ப இல்ல)நான் ஒருத்தன் தான் ரயிலில் பயணம் செய்த சாதனையைச் செய்தவனாயிருந்தேன்,ஏறக்குறைய 1990 ல் இருந்து 2005 வரை சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து என் தம்பியால் அந்தச் சாதனை முறியடிக்கப் பட்டது. எங்கள் வீடு பிரதான வீதிக்குப் (main road) பக்கத்தில் இருந்தது. அதனால் ரயில் போவதை வீட்டிலிருந்தே பார்க்க முடியும். அது எப்படி வாகனங்கள் போவதைத்தானே பார்க்க முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. இலங்கையில் இரும்புப் பாதைகள் எப்போதும் பிரதான வீதிகளை அண்டித்தான் போடப்பட்டிருக்கும். பெரும் பாலான மாலை வேளைகளில் எங்களது முக்கியமான விளையாட்டில் ஒன்று ரெயினுக்கு டாட்டா காட்டுவது. அதில் போகிற பயணிகளும் கைகாட்டுகிறார்கள் என்று வேறு நினைத்துக்கொள்வோம். எங்கள் வீட்டிலிருந்தே யாராவது போகிறார்கள் என்றால் குழந்தைகள் அப்படியே கும்பலாக நின்று கைகாட்டுவதுதான் வேலை. அது என்நினைவுக்குள் சின்னதாக மிகமிகச் சின்னதாகத் தான் இருக்கிறது.
அந்த யாழ்தேவி
வழக்கமாகச் சொல்வது போல ரயிலிலும் குண்டுகள் வெடித்தன. கொலைகள் நிகழ்ந்தன. அதன்பிறகு தண்டவாளங்களும்,சிலுப்பர் கட்டைகளும் பதுங்குழிகள் அமைக்கப் பயன்பட்டன. வெறும் சரளிக்கல் மாத்திரம் எஞ்சியிருந்த ரயில் பாதையில் நாங்கள் பாதங்களில் சரளிக்கல் குத்தக் குத்த நடந்து விளையாடினோம். கிளிநொச்சிக்கு கடைசியாக ரயில் வந்தது. 1990 ம் ஆண்டென்று நினைக்கிறேன். இன்றைக்கு அந்த ரயில் பாதைகளில் சரளிக்கற்கள் கூட இல்லாமல் வெறும் புழுதிச்சாலையாக மாறிவிட்டது.
எனக்கு ஏறக்குறைய பதினேழு வருடங்கள் கழித்துச் சென்னையில் மறுபடியும் ரயில் பயணம் வாய்த்தது.(2007) இன்னமும் இலங்கையில் அது புகைவிடும் இரதமாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். இங்கே மின்சார ரயில். வாசலில் கம்பியைப் பிடித்தபடி காற்று முகத்திலறைய நின்று கொண்டேன். லேசான தூறல் அந்த அனுபவத்தை மேலும் ரம்மியமாக்கியது. மனம் ஒரு குழந்தையைப் போல குதூகலித்தது. ரயில் ஒரு தீராத பயண அனுபவம் தான்.கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் சில நேரங்களில் கூட யாரோ ஒரு பிஞ்சுக்குழந்தையின் நெருடலற்ற பதிலாய் ஒரு புன்னகைகூட எதிர்பார்க்காத புன்னகை ஒன்று அந்தத் தவித்தலை அழகாக்குகிறது.
என் சின்ன வயது ரயில் பயணங்களில் ( இலங்கையில்) நினைவடுக்கில் எஞ்சிக்கிடப்பது மூன்று விசயங்கள்தான். ஒன்று “வட வட வடே இஸ்ஸோ வடே” என்கிற வடை விற்பவரின் சிங்களக் குரல். மற்றது ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே தாவி ஏறுகிற இறங்குகிற வடைவிற்பவரின் லாவகம். அதைவிட முக்கியமாய் எழுத்தாளர் அகிலனின் பெயரை நான் முதல் முதலில் கேள்விப்பட்டது என் முதல் ரயில் பயணத்தில்தான். ஜன்னல் வழியே தலையை நீட்ட முயன்ற என் வயிற்றைக் கிள்ளிப்பிடித்து இருத்திய பாதர்(பாதிரியார்) ஒருத்தர். என்ன பெயர் என்று என்னிடம் கேட்டார். நான் “அகிலன்” என்று சொன்னேன். அகிலன் யாரென்று தெரியுமாவெனக் கேட்டார். நான் தான் அகிலன் என்று சொன்;னேன். இல்லை அவர் ஒரு எழுத்தாளர் என்று சொன்னார் அவர். எழுத்தாளர் எண்டா என்னம்மா எண்டு அம்மாவைக் கேட்டேன். அம்மா தன்னுடைய கௌரவத்தை அந்த பாதர் முன்னிலையில் நான் குறைத்துவிட்டதாகச் கோபமாய்ச் சிரித்துக்கொண்N;ட(கோபமாய்ச் சிரிக்கிறது எப்படி எண்டு தெரியுமோ?) எழுத்தாளரெண்டா தெரியாதே ஆ… கதைகளலெ;லாம் எழுதுவினமே அவைதான் எண்டா… நான் அம்புலிமாமாவிலயா என்று எழுந்த கேள்வியை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டேன். இதைத் தவிர மற்ற இரண்டு நினைவுகளையும் இலங்கையில் ரயிலகளில் பயணம் செய்யும் எவரும் அனுபவிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். இப்போதும் அந்த ரயில்களில் வடைச் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். (போகிறவர்கள் சொல்லலாம்) எனது சிறிய வயது ரயில் நினைவுகளில் என்னுள் மிஞ்சிக்கிடப்பது இந்த நினைவுகள் தான்.
இப்போது சென்னையில் ரயில் அன்றாட வாகனம். தினமும் பலதடைவைகள் பதினேழு ஆண்டுகாலம் பயணிக்காதிருந்த பாக்கி எல்லாவற்றையும் சேர்த்துப் பயணித்துத் தீர்த்துவிட்டேன். மனசு சரியில்லாத தருணங்களில் எந்த நிலையத்திலும் இறங்காமல் ரயிலில் நீள வழிகளில் மாறிமாறிப் பயணித்திருக்கிறேன். ஆனாலும் ரயில் பயணம் என்பது எனக்குப் பிடித்த ஒன்றாகவே இருக்கிறது எப்போதும். ஒரு வேளை பதினேழு வருடங்கள் மறுக்கப்பட்டிருந்த ஒன்றை அனுபவிக்கிற மகிழ்ச்சியின் நீடிப்பாய் இருக்கிறதோ என்று தெரியாது. இதோ இந்த ரயிலுக்கும் வடேக் குரல் மாதிரியான என் நீள் நினைவுகளில் தேக்கி வைக்கப்படுகிற குரலாக ஒன்றை கருதினால் அது பிச்சைக்காரர்களின் குரலாகத்தான் இருக்கும். உயிரை உலுக்கி எடுக்கின்ற குரல்கள். பிச்சையிடாதவர்களை குற்றவுணர்வென்னும் தண்டவாளத்தில் தள்ளி நசித்தபடி ஏறிச்செல்லும் குரல்கள். ஆனாலும் ஒரு வேடிக்கை என்னிடம் பிச்சைக்காராகளுக்குத் தருவதற்குப் பணமிருக்கிற நேரங்களில் அவர்களின் பாடல்கள் நன்றாக இருப்பதைப்போலவும் பணமற்ற நேரங்களில் நாராசமாகவும் தோன்றிக் கொண்டேயிருக்கிறது.
என்னால் ஒருவரை இனிமேல் காலத்துக்கும் மறக்கமுடியாது என்று தோன்றுகிறது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் புல்லாங்குழல் விற்கிற பெரியவர். நான் அவர் அருகே அதிக நேரம் அமர்ந்திருக்கிறேன் துளைகளால் வழியும் அவரது இசையில் வீழ்ந்தபடி. அவரது புல்லாங்குழல் இசையிருக்கிற போதுதான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உயிரோடிருப்பது மாதிரித் தோன்றும் எனக்கு. அதைவிட முக்கியமாய் அவர் தன் புல்லாங்குழலை இசைக்கும் போதெல்லாம் அதன் இசை காற்றில் ஓவியம் வரைவதாய்த் தோன்றிக் கொண்டேயிருக்கும் எனக்கு. அவரது விதவிதமான இசைக்கு நான் விதவிதமன ஓவியங்களைக் கற்பனை பண்ணிக் கொள்ளுவேன். ஒரு குருடனின் வர்ணங்கள் ஒலிகளாலானவை போல. நிறைய நாட்களில் நான் அவரோடு பேச்சுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் முடிந்ததில்லை. அவரது அந்தப் புல்லாங்குழலிசையை நான் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தேன். நான் முன்பு வேலை பார்த்த இணைய உலாவி மையத்தில் (நெவ உயகந) அதனை சேமித்திருந்தேன். அதை நண்பர் அழித்து விட்டார். அந்தப் புல்லாங்குழல் பெரியவர் இல்லாத நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வெறும் உயிரற்ற கூடாய்த் தோற்றமளிக்கும். அவரது இசையற்றுச் சலசலக்கும் மனிதக் குரல்கள் காதில் ஈட்டியாய் இறங்கும்.
நான் இன்னொருத்தியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவள் அழகி பிச்சைக் காரர்களிலும் அழகிகள் இருக்கிறார்கள் என்பது அவளைக் கண்டபிறகுதான் எனக்கு தெரிந்தது. (அழகு என்பதன் வரையறைகள் ஆளாளுக்கு வேறு படுவதால் நீங்களும் அவ்வாறே நினைக்க வேண்டும் என்பதில்லை) ( பிச்சைக் காரியையும் பிகராப் பாக்கிறானே என்று கல்லோடு காத்திருப்பவர்கள் மன்னிக்கவும்) ஆனால் அவள் தமிழழகி கிடையாது. அவள் எந்த மொழி அழகி என்பதைக் கண்டறிவதற்கு என் இந்தியப் பிராந்திய மொழிகளிலான அறிவு உதவி செய்யவில்லை என்று சொல்வதை விடப் போதவில்லை என்பது பொருத்தம். ஆனால் அவளிடம் எல்லோருக்கும் புரிகிற மொழிகள் இரண்டு இருந்தது. ஒன்று பார்வை. இன்னொன்று இசை. அவள் குரல் அவளைவிட அழகாயிருந்ததாய்த் தோன்றிற்று. (அப்போதும் என்னிடம் காசிருக்கவில்லை) அவள் தமிழ் மொழியில் இப்படி இசைக்கப்பட்ட பாடலை…
“ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்”
இந்தப் பாடலை வேறு ஏதோ ஒரு மொழியில் பாடிக்கொண்டிருந்தாள். அந்த வரிகளின் அர்த்தம் இதுதானா என்று எனக்குத் தெரியாது. ஆனால் மெட்டு இதுதான். அவள் ஒரு சின்னப் பெண்ணோடு வந்திருந்தாள். கையில் இரண்டு கட்டைகளை வைத்துக்கொண்டு (நாரதர் வைத்திருப்பாரே அதைப்போல) ரயிலின் தடதடப்பையும் தனது கட்டையின் தட்டலையும் பிசைந்து தன் பாடலுக்குப் பின்ணணி இசையாக்கிப் பாடிக்கொண்டிருந்தாள். ரயிலின் கூரையை வெறித்தபடியிருந்தது அவளது பார்வை. அவளோடு வந்திருந்த சின்னப்பெண் எல்லார் எதிரிலும் சில்லறைத் தட்டுக்களைக் குலுக்கிய படியிருந்தாள். எனக்கு ஏனோ எங்களுரில் தங்கள் வீட்டுச் சின்னப்பிள்ளைகளோடு கோயிலுக்கோ வெளியிடங்களுக்கோ வரும் அழகிகள் நினைவுக்கு வந்தார்கள். அவள் ரயில் முழுதாக நிற்றும் முன்னரே குதித்திறங்கி அடுத்த பெட்டியில் ஏறிப் பாடத்தொடங்கியிருந்தாள். அவளது குரலும் கட்டைத் தட்டலும் கேட்டுக்கொண்டிருந்தது ரயில் புறப்படும் வரை. அதற்குப்பிறகு மின்சார ரயில் பயணங்கள்; எல்லாவற்றிற்கும் அவளது குரலைக் கேட்பதற்கும் அவளைக் காண்பதற்குத் தயாரான மனநிலையோடும் போகிறேன். ஆனால் அதற்குப் பிறகெப்போதும் அவளது குரலும் அவளும் எதிர்ப்படுவதேயில்லை.
ஒரு சின்னப் பெண் இருக்கிறாள். அவள் எப்போதும் அவள் அம்மாவோடுதான் வருவாள். தாய் டங்கு டங்கென்று ஒரு மேளத்தை அடித்தபடியிருக்க சின்னச் சின்ன வளையங்களிற்குள் நுழைந்து நுழைந்து அவள் வித்தைகாட்டுவாள். அவளது வித்தை நன்றாகத்தான் இருக்கும். தாயின் தோளில் தொங்கும் தூளியில் ரயிலின் தடதடப்பையும் இந்த மேளச்சத்தத்தையும் மீறி ஒரு குழந்தை தூங்கிக் கிடக்கும். நாள் அந்தச் சின்னப் பெண்ணைப் பார்த்திருக்கிறேன். அவள் தான் காட்டுகிற வித்தையை யாரேனும் பார்க்கிறார்களா என்கிற சிந்தனையும் கவனமும் அவளிடம் இருப்பதாய்ப் படவில்லை எனக்கு. இதோ இந்தக் கட்டுரைக்கே ஏதோ ஓர் எதிர்வினையை மனசின் ஓரத்தில் எதிர்பார்த்த படியே தான் நான் எழுதுகிறேன். அவள் பணத்தை எதிர் பார்க்கிறாள். கலைக்குப் பணம் தேவைதான். ஆனால் அதையும் மீறி நாங்கள் அது குறித்தான ஓர் எதிர்வினையை (அது அநேகமாகப் பாராட்டுத்தான்) எதிர்பார்க்கிறோம் இல்லையா? ஆனால் அவள் தன் திறமை குறித்து பாராட்டுகளை எதிர்பார்க்காதவளாயிருக்கிறாள். ஒரு கட்டத்தில் வித்தையை நிறுத்தி விட்டு சில்லறைக்காகத் தட்டை நீட்டத் தொடங்குவாள். எனக்கு ஒரு மாதிரி இருக்கும். மனசை யாரோ பிறாண்டுவது போல.
நீங்கள் எப்போதாவது பிச்சைக்காரர்கள் அழுது பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். வெட்கத்தை விடத் தகிப்பான ஒரு கிழவரின் கண்ணீர்த் துளிகளைக் கண்டிருக்கிறேன். மற்றவர் எதிரில் அவர் கரங்கள் நீளுகின்ற போதெல்லாம் அவர் அவமானத்தால் குறுகிப்போகிறார் என்று தோன்றும். புதுப் பிச்சைக் காரராயிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். அவரால் இன்னமும் வெட்கத்தை முழுசாகக் கடந்து விட முடியவில்லை. கைகளைக் கும்பிட்டு உயர்த்துவது போல முழங்கையால் விழிகளைத் துடைத்தபடி கிழவர் கடந்து போனபின்பும் அவரது கண்ணீர்த்துளி என் தூக்கத்தை நனைத்துக்கொண்டிருந்தது, அந்த இரவு முழுதும்.
இந்தத் துயரங்களிற்கெல்லாம் தீர்வுதிட்டங்கள் ஆலோசனைகள் எதுவும் என்னிடமில்லை. ரயிலின் தடதடப்பையும் மீறிப் பதட்டமாய் மனசில் பதிந்து கிடக்கும் நினைவுகள் இவை அவ்வளவுதான். இந்தத் துயரும் பதட்டமும் கடந்தும் ரயில் பயணங்களை அவ்வப்போது ரம்மியமாக்குகின்ற நினைவுகளும் உண்டு. அம்மாக்களின் தோளில் தொங்குகிற குட்டித் தேவதைகளின் புன்னகைகள்,எதிர் பிளாட்பாரத்தில் காத்திருக்கிற அழகுத் தேவதைகள் பிச்சையிடுகிற பார்வைகள், இன்னும் எவ்வளவோ… இப்படியான மென் நினைவுகளின் நகரும் கூடாரமாய் தடதடத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது ரயில் நீளத்துக்கும்….
‘இஸ்திர வடே” இல்லை. அது இஸ்ஸோ வடே.’இஸ்ஸோ’ எண்டால் ‘இறால்’.
//“ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்”
இந்தப் பாடலை வேறு ஏதோ ஒரு மொழியில் பாடிக்கொண்டிருந்தாள். அந்த வரிகளின் அர்த்தம் இதுதானா என்று எனக்குத் தெரியாது. ஆனால் மெட்டு இதுதான். அவள் ஒரு சின்னப் பெண்ணோடு வந்திருந்தாள்.
//
அந்த அழகியை நானும் கண்டிருக்கிறேன். அவர் கன்னடமொழியில் பாடுகிறார்!
தொடர்வண்டி பற்றி அழகான நினைவுகளை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி அகிலன்
இப்போது இந்த ‘அகிலன்’னும் நல்ல எழுத்தாளர் தானே 🙂
அன்பின் அகிலன்,
மிக அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு.
யாசிக்கும் சிறுமியொருவரைச் சந்தித்த,என்றென்றைக்கும் நீங்காத பயண ஞாபகமொன்று என்னிடத்திலும் இருக்கிறது.
இது நடந்தது நான் உயர்தர வகுப்புகளுக்காகக் கண்டிக்குப் போய்க்கொண்டிருந்த பொழுதொன்றில்.அந்தச் சிறுமிக்கு 7 அல்லது எட்டு வயதிருக்கும்.
தனக்குத் தெரிந்த சிங்களப்பாடல்களைப் பாடி ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸினுள் யாசித்துக்கொண்டிருந்தாள் அவள்.
பஸ்ஸின் சாரதி,ஒரேயடியாக பிரேக் போட்டதில் நிலைகுலைந்து போன அவள்,பக்கத்தில் உட்கார்ந்து பயணித்துக்கொண்டிருந்த ஒரு ஆபிஸரின் சட்டையைப் பிடித்துவிட்டாள்.
‘பளாரெ’ன்று அறைந்து விட்டார்.
தொடர்ந்து சுடுசொற்களால் அந்தச் சிறுமியின் பரம்பரையையே இழுத்து ஏசிவிட்டார்.
அத்தனையையும் அவள் கண்ணீர்வழியத் தாங்கிக்கொண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டாள்.அவள் யாசித்துச் சேமித்து விரலில் பொத்திநின்ற சில்லறைகளெல்லாம் பஸ்ஸின் தரையெங்கும் சிதறுண்டு கிடந்தன.
அன்றைய தினம் வரவு குறைந்தது பற்றி அவளை அனுப்பியவர்களும் திட்டி அல்லது அடித்திருப்பார்கள்.
அவள் இப்பொழுது வளர்ந்திருப்பாள்.
ஆனாலும் பஸ்களைப் பார்க்கும்போதும்,சில்லறைகளின் குலுங்கல் சத்தங்களைக் கேட்கும்போதும் உயிர்சிதறும் வலியை அவள் இன்றுவரையிலும் அனுபவித்துக் கொண்டுதானே இருப்பாள்.
எண்ட கொமெண்டு எங்கே? போடலைன்னா கொமட்டுலே குத்துவேன் 🙂
முதலில் பிந்திய நட்சத்திரக் கிழமை வாழ்த்து.
நன்றாக எழுதியிருக்கிறீர்.
இந்தத் துயரங்களிற்கெல்லாம் தீர்வுதிட்டங்கள் ஆலோசனைகள் எதுவும் என்னிடமில்லை. ரயிலின் தடதடப்பையும் மீறிப் பதட்டமாய் மனசில் பதிந்து கிடக்கும் நினைவுகள் இவை அவ்வளவுதான். இந்தத் துயரும் பதட்டமும் கடந்தும் ரயில் பயணங்களை அவ்வப்போது ரம்மியமாக்குகின்ற நினைவுகளும் உண்டு. அம்மாக்களின் தோளில் தொங்குகிற குட்டித் தேவதைகளின் புன்னகைகள்,எதிர் பிளாட்பாரத்தில் காத்திருக்கிற அழகுத் தேவதைகள் பிச்சையிடுகிற பார்வைகள், இன்னும் எவ்வளவோ… இப்படியான மென் நினைவுகளின் நகரும் கூடாரமாய் தடதடத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது ரயில் நீளத்துக்கும்….
எனக்கும் இப்படித்தான் இருக்கிறது அகிலம் ட்ரெயின் பார்க்கும் ஒவ்வொரு முறையும்
புகைவண்டிப் பயணம் மட்டுமல்ல அந்த நினைவுகளை மீட்பது கூட சுகமானது. அதற்கு உங்கள் பதிவும் சான்று. பதிவெழுத வந்த ஆரம்பத்தில் நானும் ஒரு புகைவண்டிக்கால நினைவுப்பதிவு இட்டிருந்தேன்.
அகிலன், உங்கள் பதிவுகள் எப்போதும் போல் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.
//போடலைன்னா கொமட்டுலே குத்துவேன்//
லக்கியண்ணை Commode (toilet) எண்டதை நாங்கள் கொமட் எண்டுதான் சொல்லுவோம். இப்ப என்ர கேள்வியென்னெண்டால் அகிலன் பின்னூட்டத்தை வெளிய விடாட்டி – நீங்கள் ஏன் கொமட்டில குத்துவியள் 🙂
அகிலன்,
நடை அருமை.
என் வடையும் ரயிலும் கூடுதல் ஈர்ப்பா இந்தப் பதிவில் இருக்கு.
உண்மைக்குமே…தலைப்பு இப்படி இல்லைன்னா உள்ளே வந்தே இருக்கமாட்டேன்.
நட்சத்திர வாழ்த்து(க்)கள்.
என்றும் அன்புடன்,
துளசி.
உங்கள் கட்டுரை அருமையாக இருக்கிறது. நன்றி
எனக்கும் ஒரு முறை யாழ்தேவி பயன எண்ணங்களை மீட்டுக்கொள்ள முடிந்தது. கூடவே 155 ம் கட்டையில் நடந்த புகையிரதத் தாக்குதலும் நினைவிக்கு வருகிறது.
1990 களுக்குப் பிறகு வவுனியா வரை சென்று வந்த அனுபவம் இருக்கிறது.
தற்போது அநுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைக்கு அந்த ரயில் பாதைகளில் சரளிக்கற்கள் கூட இல்லாமல் வெறும் புழுதிச்சாலையாக மாறிவிட்டது.
வாசலில் கம்பியைப் பிடித்தபடி காற்று முகத்திலறைய நின்று கொண்டேன். லேசான தூறல் அந்த அனுபவத்தை மேலும் ரம்மியமாக்கியது. மனம் ஒரு குழந்தையைப் போல குதூகலித்தது.
கைகளைக் கும்பிட்டு உயர்த்துவது போல முழங்கையால் விழிகளைத் துடைத்தபடி கிழவர் கடந்து போனபின்பும் அவரது கண்ணீர்த்துளி என் தூக்கத்தை நனைத்துக்கொண்டிருந்தது, அந்த இரவு முழுதும்.
இன்னும் எவ்வளவோ… இப்படியான மென் நினைவுகளின் நகரும் கூடாரமாய் தடதடத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது ரயில் நீளத்துக்கும்….
//
இவையும் இவை தவிறவும் நிறைய வரிகளை நான் பலமுறை ரசித்தேன் அகிலன். இன்னும் எழுதுங்கள்..
நல்ல பதிவு அகிலன்.
ரெயினும், ரெயின் சார்ந்ந்த நினைவுகளும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
உங்கள பதிவு என்னை மீண்டும் ஒரு தரம் நினைவுகளில் ஆழ்த்தி, நெகிழ்த்தி விட்டது.
நட்புடன்
சந்திரவதனா
பயணங்கள் என்றால் எனக்கும் ஒரு தனி இன்பம்தான் அதுவும் ரயில் பயணங்கள் என்றால் ஆசைதான் இருபத்தியிரண்டு வயது வரைக்கும் ரயிலை கண்ணாலை கூடப்பாக்கையில்லை நானும் அதற்கு பிறகும் ஆசைக்கெல்லாம் ரயிலில் போக வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது மிக அரிது… பெரும்பாலான என் பயணங்கள் பஸ் பயணங்களாகவே இருந்திருக்கிறது, சரி போகலாம் பல ரயில் பயணங்கள் என்று நினைத்திருக்கையில் மறு படியும் சில வருடங்களுக்கு ரயிலை பார்க்க முடியாத சூழ்நிலையாகிவிட்டது இலங்கை…
தரம் பதிவு அகிலன்…