இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இதே மேமாதத்தின் ஏதோ ஒரு நாளில் நான் முதல் முதலாக கணிணியைத் தொட்டிருக்கிறேன். ஒரு பொருத்தத்திற்காக மே மாதம் என்று சொல்கிறேன் என நினைக்க வேண்டாம் உண்மையிலேயே அது அப்படித்தான் நடந்தது. எங்களிற்கு பிசிக்ஸ் படிப்பிச்ச வாத்தியாரான அல்லது நண்பரான பிரதீப் என்றவருடன் நான் 2004 ஏப்ரல் ல நடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் முடிவடைந்ததும் தான் நான் அது வரை கண்காட்சிகளில் மட்டுமே பார்த்து வந்த கணியியை தொட்டுப் பார்த்தேன் முதல் முதலாய். அதற்கு முன்பாக கணிணி என்கிற சொல்லைக் கேள்விப்பட்டதோடு சரி. அல்லது அந்தப் பொருளை ஏதோ ஒரு பிராணியைப் பார்ப்பது போல கண்காட்சிகளில் பார்ப்போம் கொழும்பு அல்லது வவுனியாவில் இருந்து வருகிற கணிணி விற்பன்னர்கள் யாராவது எங்களிற்கு அந்த அற்புத விளக்கின் அருமைபெருமைகளையெல்லாம் சொல்லுவார்கள்.
கணிணியில் நான் முதல் முதலில் தெரிந்து கொண்ட விசயமே இன்ரநெற் எக்ஸ்புளோரர்தான். (அதன் முக்கியமான காரணம் அநேகமாக நீங்கள் நினைப்பதுதான்) இணையத்திற்குள் எப்ப நுழைய வேண்டும் என்கிற விசயங்களையெல்லாம் பிரதீப் சொல்லித்தந்தார் ஒரே ஒரு நாள் எங்களுடன் வந்து. அதற்கு அடுத்த நாள் நானும் பிரசாந் என்கிற நண்பனும் இன்ரநெற் and இமெயில் என்று யாரோ எழுதிய புத்தகத்தை துணைக்கு கூட்டிக்கொண்டு ஒரு இமெயில் கிரியேட் பண்ணுவதற்காக போனோம் கொட்மெயிலைத் திறந்து ஏறக்குறைய பலதடைவைகள் விடாது முயற்சித்த பின் இமெயில் கணக்கு திறக்கப்பட்டு வெல்கம் கோபாலப்பிள்ளை என்று சொன்னது கணிணித் திரை. நீங்கள் நினைக்கலாம் நான் அகிலன் நண்பன் பிரசாந் ஏன் வெல்கம் கோபாலப் பிள்ளை எண்டு சொல்லுது என்று எங்களது ஆங்கில அறிவினதும் போதாக்குறை பிரசாந்திற்கு கிரியேற் பண்ண அது கோபாலப்பிள்ளைக்கு (அவன்ர அப்பாக்கு) கிரியேற்றாச்சு. இதில பாஸ் வேட் வேற பிரசாந்தின்ர அவான்ர பேர்ல. விதியை நொந்து கொண்டே 200 ரூபாய் கொடுத்து விட்டு வெளியில் வந்தோம் அப்போது மணிக்கு 100 ரூபாய் இணைய உலாவி மையங்களில் இணையம் பயன்படுத்துவதற்கு வசூலிப்பார்கள். அதற்குப்பிறகான நாட்களில் நாங்கள் வெற்றிகரமாக எங்களிற்காக மெயில்களை திறந்து விட்டாலும் வெல்கம் கோபாலப்பிள்ளைதான் எங்கள் முதல் கன்னி அல்லது கணிணி முயற்சி.
என்ன இருந்தாலும் இணையத்தை நான் சரளமாகப் பயன்படுத்தியது இரண்டாயிரத்து ஐந்தின் இறுதியில் இருந்துதான். நான் கவிதைகள் என்று எழுதியவற்றை பஹீமா அக்காவிற்கு அனுப்பிக்கொண்டிருப்பேன் அவர்தான் எனது கவிதைகளை அன்புடன் என்கிற குழுமத்தில் இட்டார் முதலில் பிறகு என்னையும் சேர்த்துவிட்டார் அந்த குழுமத்தில். இணையத்தில் எனது எழுத்து என்றால் குழுமங்களில் எழுதியதுதான் முதல் தடைவை. (பஹீமா அக்காவிற்கு நன்றி) அதற்குப் பிறகு கீற்று, திசைகள், திண்ணை போன்ற இணைய இதழ்களிற்கு கவிதைகள் அனுப்பினேன். அதில் பிரசுரமான கவிதைகளை எடுத்து அன்புடன் குழுமத்தில் இட்டதிலிருந்து அதற்குப்பிறகான நிறைய உதவிகளைத் தொடர்ந்து இன்றுவரைக்கும் செய்துவருகிறார் விக்கி அண்ணா. (விக்கி அண்ணாவிற்கும் நன்றி)
எனக்கு தமிழ் மணத்தை 2006ல் அறிமுகப்படுத்தியவர் நண்பர் நிலவன். அதற்குப் பிறகு நான் சொந்தமாக வலைப்பூக்களைத் திறந்து கொண்டேன் (விக்கி அண்ணா மற்றும் சேதுக்கரசி அக்காவின் தொழில் நுட்ப உதவிகளோடு.) இதே இப்போது இரண்டாண்டுகள் கழித்து நண்பர் சயந்தனின் உதவியோடு சொந்த இணையத்தளத்தில் இருந்து என் நட்சத்திர வாரத்திற்கு எழுதுகிறேன்.
நான் கிளிநொச்சியில் இருந்து சென்னைக்கு வரும்போது யாரும் இல்லாமல் வந்தேன். இணைய மூலம் கிடைத்த நண்பர்கள்தான் எனக்கு உதவினார்கள் இந்தியாவில் முதல்முதலாக. தனியாய் இன்றைக்கு கிளிநொச்சியில் இருக்கிற யாராவது இந்த நட்சத்திர வணக்கத்தினை படிப்பதற்கான சாத்தியங்கள் எவ்வளவிற்கிருக்கின்றன? மணிக்கு 100 ரூபாய்க்கோ அல்லது 200 ரூபாய்க்காவது இணைய வசதி அங்கே இருக்கிறதா? அல்லது 2003 ற்குப் பின் வந்த கணிணிகளைத் இயக்குவதற்கான மின்சாரம் இருக்கறதா? பதுங்குழி வாழ்க்கை வாழ்கின்ற அவர்களின் தற்போதைய வாழ் நாட்களில் இந்தக் கேள்விகளிற்கெல்லாம் பதில் அநேகமாக இல்லை என்பதே. எப்போது வரைக்கும் இந்தப் பதில் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. என் மண்ணில இருக்கிற யாராவது பார்ப்பதற்குச் சாத்தியங்கள் இல்லை என்கிற போதும் கிளிநொச்சியில் இருந்து முதல் முதலில் வலைப் பதிய ஆரம்பித்தவன் என்கிற வகையில் மிகவும் பெருமையடைகிறேன் நட்சத்திரமானதற்கும்.
குறிப்பு
கிளிநொச்சியில் திருநகர் என்கிற அழகான கிராமத்தில் இருக்கிற என் வீட்டில் என்னுடைய மேசையில் மின்சாரமற்றுப் பாழடைந்து போயிருக்கக் கூடிய நான் விட்டு விட்டு வந்த என்னுடைய முதல் கணிணிக்கும். இப்போது தங்கை அபிராமி வாங்கித்தருவதாய்ச் சொல்லியிருக்கும்(வரப்போகிற அந்த புதிய கணிணிக்கும்)
இந்தப் பதிவு காணிக்கை.
//கணிணியில் நான் முதல் முதலில் தெரிந்து கொண்ட விசயமே இன்ரநெற் எக்ஸ்புளோரர்தான்//
நாங்களும் கூட அந்த நீல நிற ஐகானில் நிறைய புரிந்துக்கொண்டோம்! தெரிந்துகொண்டோம்!
//மணிக்கு 100 ரூபாய்க்கோ அல்லது 200 ரூபாய்க்காவது இணைய வசதி அங்கே இருக்கிறதா? அல்லது 2003 ற்குப் பின் வந்த கணிணிகளைத் இயக்குவதற்கான மின்சாரம் இருக்கறதா? பதுங்குழி வாழ்க்கை வாழ்கின்ற அவர்களின் தற்போதைய வாழ் நாட்களில் இந்தக் கேள்விகளிற்கெல்லாம் பதில் அநேகமாக இல்லை என்பதே. //
:(((
//கிளிநொச்சியில் இருந்து முதல் முதலில் வலைப் பதிய ஆரம்பித்தவன் என்கிற வகையில் மிகவும் பெருமையடைகிறேன் //
வாழ்த்துக்களுடன் தொடருங்கள் உங்களின் நட்சத்திரமான பயணத்தை
வாழ்த்துக்கள் அகிலன்
நேற்றைய தினக்குரலில் தாசன் உங்கள் வலையை அறிமுகம் செய்துவைத்துள்ளார். பார்த்தீர்களா?
அகிலன்!
முதலில் நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். இவ்வாரத்தில் கூடிய கவனம்பெறக் கூடிய உங்கள் படைப்புக்களினால், ஈழத்து இளைய தலைமுறைப்படைப்புக்களில், தனித்துவமும் வசீகரமும், கருத்தாழமும், மிக்க உங்கள் எழுத்துக்கள் மேலும் பரந்த வாசகப்பரம்பலைச் சென்றடையும் என்ப என் நம்பிக்கை. இனிதே தொடருங்கள்.
உங்களை, உங்கள் எழுத்துக்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த தமிழ்மணத்துக்கு நன்றி. கூடவே நீங்கள் காணிக்கை செலுத்திய அந்தக் கணினிக்கும்.
நன்றி
அகிலனுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள் 🙂
அருமையோன ஒரு பதிவோடு ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
நட்சத்திர வாழ்த்துக்கள்,
வரும் நட்சத்திர பதிவுகளில் வழமை போலவே கனமான படைப்புக்களை எதிர்பார்க்கின்றேன்.
அகிலன் உங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் அகிலன்..
நட்சத்திர வாழ்த்துகள் அகிலன்.
கிளிநொச்சியில் உங்கள் பழைய கணினி மூலமே நீங்கள் பதிவெழுதக்கூடிய சூழல் விரைவில் உருவாகட்டும்.
கணினி பற்றி படித்தபின் எதோ சொல்லத்தோன்றியது எப்படி வார்த்தை போடுவது என்று விட்டுவிட்டேன்..அதே விசயத்தை அருட்பெருங்கோ சொன்னபோது அழகாக இருக்கிறது..
வாழ்த்துக்கள் அகிலன்.
“கிளிநொச்சியில் திருநகர் என்கிற அழகான கிராமத்தில் இருக்கிற என் வீட்டில் என்னுடைய மேசையில் மின்சாரமற்றுப் பாழடைந்து போயிருக்கக் கூடிய நான் விட்டு விட்டு வந்த என்னுடைய முதல் கணிணிக்கு இந்தப் பதிவு காணிக்கை.”
இந்த வரிகள் துயரம் நிரம்பியவைதான்.
வெளியேறியதன் துயரம் மிகவும் ஆழமானது தான் .எனினும் அந்த வெளியேற்றம் ஒரு சில நன்மைகளையாவது தந்திருக்கிறது என நீங்கள் கருதினால் நண்பர்களோடு சேர்ந்து நானும் ஆறுதல் அடைவேன்.
வாழ்த்துக்கள் அகிலன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
ஆயில்யன்,
நீங்கள் கிளிநொச்சியா? நான் முல்லைத்தீவு. கிளிநொச்சியில இணைய வசதிகள் சாதாரண பாவனைகளுக்காக இல்லை. ஆனாலும் அவசர தேவைகளான பரீட்சை முடிவுகள் பார்த்தல், வங்கி சம்மந்தமான அலுவல்கள் என்பவற்றுக்காக இணையத்தைப் பாவிக்கக் கூடிய வசதி உள்ளது.
எங்கட முல்லைத்தீவில அதுவும் இல்ல. நாங்கள் இணையத்த பாவிக்கோணுமெண்டா 60 கிலோமீற்றர் தாண்டி கிளிநொச்சிக்குத்தான் வரவேணும்.
ஆனா கணினிகள் இருக்குது. கணினி படிக்கிறதுக்கு இடங்களும் இருக்குது.
பி.கு. ஆயில்யன் கணிணி அல்ல கணினி. உதவி: விக்கிபீடியா.
மதுவதனன் மௌ.
ஆயில்யன்,
எங்கட இடங்கள்ள பத்து கிலோமீற்றர் சுற்று வட்டத்துக்குள்ள ஒன்றோ இரண்டோ தொலைபேசி இணைப்புக்கள் இருக்கிற நிலைமையில இணையத்தையெல்லாம் எதிர்பார்க்குறது வெற்றுக் கனவுகளில் மட்டுமே முடியும்.
பி.கு. கைத்தொலைபேசிகள் எங்கட இடங்களில் பாவனையில் இல்லை.
அன்பின் அகிலனுக்கு,
என் இனிய நல்வாழ்த்துக்கள் நண்பா 🙂
வாழத்துக்கள் அகிலனண்ணா!
நட்சத்திர வாழ்த்துக்கள்
நேற்றே ஒரு பின்னூட்டம் போட்டேன், காணவில்லை ;-(
நட்சத்திர வாழ்த்துக்கள், கலக்குங்கோ
ஆரம்பமே நெஞ்சைத் தோடுமாறு எழுதியுள்ளீர்கள்.. மற்றய பதிவுகளை தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்.
வாழ்த்துக்கள்
no e-kalappai at present.
vaazthukkal ahilan.nice memory of ur computer learning.last words are touching……..
best of luck
vaazhththukkal.
வாழ்த்துகள் அகிலன்,
மிக நல்ல பதிவுகளுடன் தொடர வாழ்த்துகள்.
கிளி நொச்சியின்
கிழிபடாத நட்சத்திரமே!
எளிய கிராமத்திலிருந்து
கிலியோடு
வலிகளோடு
வெளி வந்த நட்சத்திரமே! – இன்று
பொலிவாய் சுடர் விடும்
சூரிய நட்சத்திரமாய்
ஜொலிக்கிறாய்!
உனக்கு என்னினிய வாழ்த்துக்கள்!
தோழமையோடு!
ஆல்பர்ட்.
வாழ்த்துக்கள் அகிலன் வன்னி இன்னமும் ஒரு முடிவுக்கு வராமல்தான் இருக்கிறது… ஒரு மாற்றம் வரத்தானே வேண்டும் பார்க்கலாம்…
வாழ்த்துகள் அகிலன்…
உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு அமைதி இல்லா தேசத்தில் அமைதியாய் உறங்கி கிடக்கும் அந்த ‘முதல் கணிணிக்கு’ எம் நன்றிகள்…
வாழ்த்துக்கள் அகிலன்!
ஈழ்ச்சகோதரர் விடியலுக்காக ஓங்கி ஒலிக்கட்டும் உங்கள் குரல்!
வாழ்த்துக்கள் அகிலன் !
தாயக நண்பர் ஒருவர் நட்சத்திரமாக மின்னுவதையிட்டு இன்னும் மகிழ்ச்சி கொள்கிறேன். உங்கள் அதிஷ்டம் ஞாயிறு தினக்குரலில் உங்கள் வலைப்பூபற்றிய ஆக்கம் வெளிவந்துள்ளது !!
வாழ்த்துக்கள்
தொடர்ந்தும் எழுதுங்கள்
நன்றிகளுடன்
மாயா
இனிய வாழ்த்துகள் அகிலன்
என்றாவது ஒரு நாள் அந்த திருநகர் கிராமம் வெளிச்சத்தை நிச்சயம் அடையும்.