கண்ணீரும் கம்பலையுமாக ஒரு தாய் கதறுகிறாள் “எனது மகனைக் காப்பாற் றுங்கள் அவன் எனக்கு வேண்டும் தயவு செய்து காப்பாற்றுங்கள்”.
சீடர்கள் எல்லாரும் காத்திருந்தார்கள் நிகழப்போகும் அதிசயத்தின் சாட்சியாய் இருக்கப்போகிறோம் என்கிற முறுவல் அவர்களிடம் மிதந்து கொண்டிருந்தது.
புத்தர் அமைதியாய் சொன்னார் “அம்மா மரணமே நிகழாத வீட்டில் இருந்து ஒரே ஒரு பிடி கடுகு வாங்கிவா” புத்தரின் முகம் புன்னகை மாறாதிருக்கிறது.
அவள் தெருவெங்கும் ஒடினாள் தன்மகனைக் காப்பாற்றி விடுகிற வெறியில் ஓடினாள் ஆனால் மரணம் இறுதியில் அவளை வென்றுவிட்டது. மரணம் காற்றைப்போல எங்குமிருந்தது. மரணத்தின் வாசனை தெரியாத ஒரு பிடி கடுகு கூட இந்தப் பூமியில் கிடையாது.
மரணத்தை வென்று விடுகிற ஆசை எல்லோருக்கும் உண்டு ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற சாகசவீரனைப்போல் மரணம் வாழ்க்கை முழுவதும் நம்மோடு கூட வருகிறது. கடைசிவரை பின்னாலேயே ஓடி வந்து இறுதியில் முந்திக்கொண்டு விடுகிறது.
எனது வழியில் கடந்து போன மரணத்தின் சுவடுகளின் சில காட்சிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
அப்பாவின் மரணத்தைப் பார்த்திருக்கிறேன் மிகநெருக்கமாக மரணத்தின் வாசனை அவர் முகத்தில் மிதந்து கொண்டிருக்க அவரது இறுதிவார்த்தைகள் எனக்கானவையாய் இருந்தன.
எனக்கு அப்போது 7 வயது. அதற்கு முன்பாக என்னிடம் மரணம்குறித்த சேதிகள் அனுபவங்கள் ஏதும் கிடையாது. என்னிடம் மரணம் குறித்து இருந்ததெல்லாம் சவஊர்வலமும் அதில் கொழுத்தப்படுகின்ற சீனா வெடி குறித்த பயமும் தான். அதை விடவும் “பொடிக்கு கையைக்காட்டாதடா கைஅழுகிப் போகும்” என்ற அக்காக்களின் வெருட்டலுக்கும் நான் பயந்து போயிருந்தேன். கை அழுகிப்போகாதிருக்க சவஊர்வலங்களைப் பார்க்கிற போதெல்லாம் கையைப் பின்னால் கவனமாய் கட்டி மறைத்தி ருக்கிறேன். என்னையும் மீறிக் கையைக்காட்டிய பொழுதொன்றில் கை அழுகப் போகிறது என்று அழுது அழுது ஊரைக் கூட்டி யிருக்கிறேன்.
இப்போது அப்பாசெத்துப்போனார். பாம்பு அப்பாவைக் கடித்துவிட்டது என்றவுடனேயே எல்லாரும் பதறினார்கள். அப்பாவைச் சூழ்ந்து கொண்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்பாவைச் சுற்றி நின்ற சனங்களுக்குள் நான் இடறுப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பாவைக் காப்பாற்றி விடவேண்டும் என்று எல்லோரும் நினைத்தார்கள் அப்பாவை தூக்கிக்கொண்டு எல்லோரும் றோட்டுக்கு ஓடினார்கள். சந்தி வைரவர் கோயிலடியில் கிடத்தினார்கள். அவர்கள் நினைத்திருப்பார்கள் வைரவர் காப்பாற்றி விடுவார் என்று.
அப்போதெல்லாம் இந்தியராணுவம் எங்கள் றோட்டுச் சந்தியில் முகாமிட்டிருந்தது. எங்கள் றோட்டுச் சந்தியில் மட்டு மில்லை நிறைய இடங்களில் இந்தியராணுவம் முகாமிட்டிருந்தது. முதல்ல வேடிக்கையாத்தானிருந்தது. தாடிவைத்த இந்திய ராணுவ வீரர்கள். அவர்களது தலைப்பாகை, இவையெல்லாம் அப்ப எங்களுக்கு வேடிக்கையா இருந்தது. அவர்கள் பேசுகிற புரியாத மொழி அவர்கள் வைத்திருக்கிற நீள நீளமான கத்திவைத்த துப்பாக்கிகள் நான் துப்பாக்கியை முதல் முதலில் கண்டது அவர்களிடம்தான். அவர்களால் எங்களுக்கு ஆபத்தெண்டால் நான் சத்தியமாய் நம்பியிருக்க மாட்டன். ஒவ்வொரு நாளும் காலமையும் பின்னேரமும் ஒழுங்கைக்குள்ளால லைனாப் போவாங்கள். பிறகு அப்படியே லைனாவருவாங்கள் அவ்வளவுதான். அக்கா என்னை வெருட்டுவாள் டேய் அவங்கள் வரேக்க வெளியால நிக்காத தூக்கிக்கொண்டு போயிருவாங்கள். எனக்குப் பயமில்லை. நான் அக்காவின் சொல்லைக் கேக்காமல் வெளிய நிண்டு அவங்கள் போவதை வேடிக்கை பார்ப்பேன். பையா பையா ஒன்றிரண்டு பேர் என்னை அழைப்பார்கள் நான் தயங்கித் தயங்கிச் சிரிப்பேன். என்னதான் பயமில்லையெண்டு சொன்னாலும் குறுக்காஸ் எண்டால் பயமிருந்தது. அவங்கள் கட்டியிருந்த தலைப் பாகையும் தாடியும் கொஞ்சம் பயத்தை இயல்பாகத் தரவல்ல தாத்தான் இருந்தது. எண்டாலும் நான் சமாளிச்சு நிண்டு வேடிக்கை பார்ப்பன்.
குறுக்காசின் வீரத்தைப் பற்றியும். அவர்கள் சாப்பிடுகின்ற சப்பாத்தி பற்றியும் சின்னக்கா கதைகதையாச் சொல்வாள். அவள் சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் குறுக்காசைக் கண்டால் மேலும் மேலும் பயப்பிடவும் சப்பாத்தி என்கிற நான் பார்த்தேயிரா வெறுமனே கேட்டு மட்டுமேயிருக்க அந்த உணவுப்பொருள் மீது வெறுப்பைக்கொட்டவும் நாங்கள் பழக்கப்பட்டுப்போனோம். சின்னக்கா அவ்வளவு மினக்கெட்டு அந்தக்கதைகளுக்கு கைகால் வைப்பா. எல்லாத்தையும் மிஞ்சி நான் ஒரு நாள் ஒரு தலைப்பாக்கார இந்தியன் ஆமியால் எதிர்பாராதொரு கணத்தில் தூக்கப்பட்டேன் என்னதான் நான் கறுப்பெண்டாலும் கஸ்தூரிதான் நான் எண்டதை எனக்கு உணர்த்தின சம்பவங்களில் ஒன்று. என்னில இருந்த கஸ்தூரியைக் கண்டு ஆசையில இந்தியன் ஆமி ஒராள் தூக்க நான் குய்யோ முறையோ எண்டு அலற. வீட்டுக்க இருந்து அம்மாக்கள் ஓடிவர அந்தாள் என்னை இறக்கிவிட்டது நான் முதலையின்ர வாயால தப்பினவனைப்போல இயன்ற மட்டும் குழறினேன். அவர் பையா பையா எண்டு எனக்குச் சமாதானம் சொன்னார். ஆனாலும் நான் அழுகையை நிப்பாட்டினா அவர் மறுபடியும் தூக்கக்கூடிய ஆபத்திருப்பதை உணர்ந்து வீறிட்டழுதேன். அவர் டக்கெண்டு அவற்ற பாக்கிற்குள் (ஙிணீரீ) இருந்து ஒரு மஞ்சள் நிற பலூனை எடுத்துத் தந்தார் நான் டக்கெண்டு அதை வாங்கிக்கொண்டு என் அழுகையின் வேகத்தைக் குறைத்தேன். ஆனாலும் அவர் போகுமட்டும் தொடர்ந்து அழுதேன். அவர் சிரித்தபடி போனார். அதுக்குப்பிறகு யார் வெருட்டினாலும் நான் நம்பத்தயாராயில்லை. பலூனெல்லாம் தாறினம் எப்பிடியும் நல்லவையாத்தானே இருப்பினம் எண்டு நினைச்சன்.
ஆனால் கொஞ்சநாள் தான். பிறகு வெறுமனே ஒழுங்கைக் குள்ளால போய் வந்தவை காணிக்குள்ளால போய் வரத் தொடங்கிச்சினம். பயிர்க்கொடியளுக்குள்ளால சப்பாத்துக்காலோட நடந்து போய்ச்சினம். நாங்கள் செருப்புக் காலோட போனாலே பேசிற மாமா ஒண்டு பேசாம பாத்துக்கொண்டு நிண்டார். பிறகு வீட்டுக்குப் படலை இருந்தாலும் தாங்கள் போற வழியில் குறுக்க வாற வேலியளை வெட்டிக்கொண்டு போக வெளிக்கிட்டிச்சினம் அவை வெட்டிக்கொண்டு போற கடப்புகளுக்குள்ளால ஆடு மாடுகள் உள்ளிட்டு பயிர்க்கொடியளைத் தின்னுதெண்டு மாமா அடைப்பார் ஆனா அவையள் புதுபுதுசு புதுசா வெட்டத் தொடங்கிச்சினம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில வேலிக் கம்பியளை வெட்டுவினம். மாமா கொஞ்சநாளால அவையள் வெட்டுறதுகளை அடைச்சு அடைச்சுக் களைச்சுப்போய் அடைக்காமலே விட்டிட்டார். எனக்கு இப்ப குறுக்காசின்ர முகமெல்லாம் சின்னக்கா சொல்ற மாதிரி குருரமாத்தான் தெரிஞ்சுது அவைற்ற இப்ப பலூன்கள் இருக்குமெண்டு நான் நம்பயில்லை.
திடீரென்று ஒருநாள் அவங்களே கத்திகளைக் கொண்டு வந்து வேலிக்கொப்புகளை வெட்டிச் சரிச்சுக்கொண்டு போய்ச்சினம். எல்லா மரங்களும் மொட்டையடிச்சினம். ஒரு மரம் கூட மிச்சமில்லை. பெரிய மரங்களிலை எல்லாம் வெள்ளை ரேப் அடிச்சு லைற் போட்டிச்சினம். இப்படி மொட்டையாத்தான் எல்லா மரங்களும் இருக்கோணுமெண்டும் இலைகள் கிளைகள் வளந்தா வெட்டிவெட்டி விடோணுமெண்டும் சொல்லிச்சினம். மொத்தத்தில் அவை முந்தின மாதிரி இல்லை. அது ஒரு வகையில் எனக்கு பிரயோசினம் தான். ஏனெண்டா அம்மா அடிக்கிறதுக்கு கம்பு முறிக்கிறதுக்கு வேலியில சின்னக் கிளைகூட இல்லை. ஆனா பெரியம்மாதான¢ கவலைப்பட்டா. அடுத்த மாரிக்கு ஊண்டுறதுக்கு ஒரு கதியால்கூட இல்லை எண்டு.
ஒருக்கா வீடு மேயுறதுக்கு கிடுகு கொண்டு வந்த வண்டிலை றோட்டிலயே மறிச்சுக் கொட்டி றோட்டில இருந்து வீட்டுக்கு ஒவ்வொண்டாக் கொண்டு போகச் சொல்லிச்சினம். இப்படி நிறையக் கெடுபிடியல். எங்கட வீட்டில எத்தனை மணிக்கு விளக்கு வைக்கோணம் அதை எத்தினை மணிக்கு நூக்கோணும். எத்தனை மணி வரைக்கும் ஆக்கள் வெளியில போகலாம் வரலாம் எண்டதையெல்லாம் அவைதான் தீர்மானிச்சினம். ஒருநாள் இரவு திடீரென்று ஜீப்பொண்டு ஒழுங்கைக்குள்ள உறுமிக்கொண்டு வந்து இலக்கில்லாம சுடத் தொடங்கிச்சிது நாங்களும் அம்மாவும் மேசைக்கு கீழ் குறண்டிக்கிடந்தம் அம்மா காப்பாத்தம்மா அம்மாளாச்சித் தாயே எண்டு சொல்லிக்கொண்டிருந்தா திரும்பத் திரும்ப. அப்பா மட்டும் விறாந்தைக்குப் போய் எட்டிப்பார்த்தார். அடுத்தநாள் காலமை இரணை மடுச்சந்தியில் எட்டுப்பேரைச் சுட்டுப் போட்டுப் போயிற்றாங்களாம் எண்டு பெரியப்பாவும் அப்பாவும் கதைச்சுக்கொண்டிருந்திச்சினம்.
அதற்குப்பிறகான நாட்களில் ஆறு மணியோட றோட்டில பெரிய றோல் றோலா முளுக்கம்பிகளைப்போ றோட்டை அடைச்சுப் போடுவினம். வீட்டை ஆறுமணிக்கு முதல் எல்லாரும் வந்திடோணும். ஆறுமணிக்குப் பிறகு றோட்டால யாரும் வரேலா. அப்பதான் என்ர பிறந்தநாளுக்கு முதல் முதலா அந்தோனியாருக்கு நான் நாலு மணிக்கே மெழுகுதிரி கொளுத்த வேண்டி வந்தது. மற்ற பிறந்த நாளுக்கெல்லாம் ஆறரைக்குத்தான் போய் மெழுகுதிரி கொளுத்தினன் இந்தியனாமி வந்தாப்பிறகு முள்ளுக்கம்பியள் போட்டாப்பிறகு அதுவும் மாறிச்சு. அம்மா எனக்குப் பிறந்தநாள் எண்டாலும் அவேள் மெழுகுதிரி கொளுத்த விடமாட்டினமா எண்டு நான் அம்மாவைக் கேட்டன். அம்மா வழக்கம் போல “பேசாம வாடா” எண்டு வெருட்டிப் போட்டு என்னை இழுத்துக்கொண்டு போனா. யாரும் போக முடியாது ராணுவ வாகனங்களைத்தவிர யாரும் போகமுடியாது.
இப்ப ஆறரை மணிக்கு மேலையாச்சுது. றோட்டில இந்தியனாமி முள்ளுக்கம்பி போட்டிட்டான். அதையெல்லாம் எடுத்தாத்தான் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகமுடியும். அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதற்கு ராணுவத்துடன் யார்யாரேவெல்லாம் கதைக்கிறார்கள். நான் குரல்களை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தனான். குரல்களில் கெஞ்சலும் அழுகையும் கேட்டுக்கொண்டிருந்தது. அழுத குரல் பெரிய மாமாவின் குரலாகத் தான் இருக்கவேண்டும். என்னால் மனிதர்களின் கால்களை மட்டும் தான் பார்க்க முடிந்தது. சேர் மூர்த்திசேர் பாம்பு கடிச்சிட்டுது சேர். யாரோ இந்திய ராணுவத்திடம் கெஞ்சினார்கள். இந்தியராணுவம் பலமாக மறுத்துக்கொண்டிருந்தது.
நான் சனங்களின் கால்களிடையில் நசிபட்டுக் கொண்டிருந்தேன். கால்களிடையில் புகுந்து புகுந்து அப்பாவிடம் போனேன். அப்பாவை வைரவர் கோயிலடியில் கிடத்தியிருந்தார்கள். நான் அப்பா என்று அவர் மீசையைப் பிடித்தேன். அப்பா என்னைக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினார். அந்தக் கொஞ்சலில் என்றைக்கு மில்லாத அழுத்தம் நிரம்பியிருந்தது. அப்பா ஏன் அழுகிறார்? “அப்பா அப்புசாமியிட்ட போட்டு வாறன் பிள்ளை வடிவாப் படியுங்கோ” அப்பான்ர குரல் தளுதளுத்தது. அந்த வார்த்தைகளின் இறுதியையும் நிரந்தரத்தையும் என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. அதுதான் அப்பா என்னிடம் பேசுகிற கடைசி வார்த்தையாக இருக்கப்போகிறது என்பதும் எனக்குத் தெரிய வில்லை. அப்பாவின் ஞாபகங்கள் எல்லாவற்றையும் அடைத்துக் கொண்டு அந்த ஒற்றைமுத்தமும் வார்த்தைகளும் மட்டும்தான் என்வாழ்வின் மீதி நீளத்துக்கு எனக்கு மிஞ்சப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. சொல்லப்போனால் மரணம் மறுபடி ஆளைத் திரும்பத் தராது என எனக்கு அப்போது புரியவேயில்லை. இந்திய ராணுவம் இறுதிவரை அப்பாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக விடவில்லை. அப்பா செத்துப்போனார். வைரவரும் கைவிட்டார்.
அப்பாவை வீட்டைகொண்டு வந்து கிடத்தினார்கள். யார் யாரோ என்னைக்கட்டிப்பிடித்து அழுதார்கள். நான் கொஞ்சம் அசௌகரியப்பட்டேன் அவ்வளவுதான். துக்கம் எல்லாம் அப்போ திருக்கவுமில்லை தெரியவுமில்லை. நான் அப்பாவை கிட்டபோய் பார்த்தேன் அவர் விழிகள் ஒருமுறை திறந்து மூடியது போலிருந்தது. நான் நிச்சயமாய் பார்த்தேன் அந்த வெளிறிய விழிகளை அதில் வழிந்துகொண்டிருந்த எம்மைப்பிரிய முடியாத வலியைப் பார்த்தேன். நான் அப்பா முழிப்பு என்று யாரிடமாவது சொல்லவேண்டும் என்று நினைத்தேன். யாரும் என்னைக் கவனிக்கவேயில்லை நிறைய ஆட்கள் நின்றார்கள். எல்லோரதும் முழங்கால்களை முட்டி முட்டி நான் அலைந்து கொண்டிருந்தேன். கடைசியாக பெரியமாமாவிடம் போய்ச் சொன்னேன் “மாமா அப்பா முழிப்பு என்று.” பெரியமாமா பெரிதாக வெடித்து அழுதார் என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, வீட்டு விறாந்தைக்கும் குசினிக்கும் இடையில் இருக்கிற ஓடைக்குள் நிண்டு மாமா பெரிதாக அழுதார். எனக்கு அப்ப ஏதோ மனசுக்குள் சின்னதாய் துயரம் நெருடியது. நான் மாமாவிடமிருந்து விடுபட்டு ஓடினேன். என்னைப் பொருத்தவரையில் அப்பா முழிப்பு. அதற்குப் பிறகு யாரிடமும் சொல்ல முடியவில்லை அப்பா முழிப்பு என்று. அந்த வேதனை இன்றைவரைக்கும் எனக்கு உண்டு. (நான் இப்போது யோசிப்பது உண்டு அது ஒரு பிரமையோ என்று) ஆனால் அது பிரமையென்பதை மனசுக்குள் ஒரு குட்டி அகிலன் உட்கார்ந்து கொண்டு நம்ப மறுக்கிறான். இந்தப் பெரிய அகிலன் அதைப் பிரமையென்று நம்பிவிட முனைகிறான். ஒரு பிரமையின் ஞாபகங்கள் இருபது வருடம் தாண்டியும் மனசில் தங்கியிருப்பது என்பது ம்…
ஒப்பாரி காதைக்கிழித்தது. பிறகு எல்லாம் வேகமாக நடந்தது. நான் அப்பா இப்போது பொடி என்பதால் அப்பாவுக்கு முன்னுக்கு அல்லது அப்பா என்கிற இந்தப் பொடிக்கு முன்னுக்கு கையை வெளியில் எடுக்காமல் பின்னாலேயே கட்டிக்கொண்டிருந்தேன். அல்லது அப்பாதானே கையை எடுக்கலாமா விடலாமா அழுகிப் போகாதா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது. அப்பாவுக்கு நிறையப்பேர கண்ணீர் அஞ்சலி அடித்தார்கள். நான் அதையெல்லாம் ஒரு மூட்டைக்கு மேலிருந்து உரத்து மரண அறிவித்தல் பாணியில் வாசித்துக்கொண்டிருந்தேன். கார்ல ஸ்பீக்கர் கட்டி எனௌன்ஸ் பண்ணிக் கொண்டு போனதைப் பிரதிபண்ணி நான் வாசித்துக் கொண்டிருந்தேன். வெத்திலத் தட்டத்தை பெரியாக்கள் கேக்க கேக்க அங்கயும் இங்கயுமா மாறிமாறிக்கொண்டு போய்க் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்பா என்கிற மனிதனின் இல்லாமை எனக்கு அப்போது உறுத்தவே இல்லை. பெரியக்கா வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போய்ச் சாப்பாடு தந்தாள் பாணும் சம்பலும். எனக்கு நினைவிருக்கிறது. பெரியம்மா வீட்டுக் குந்தில வைத்து அக்கா எனக்கும் தம்பிக்கும் தீத்தி விட்டாள். யாரோ வந்து பெரியக்காவிடம் சொன்னார்கள். இவங்களை அங்க விடாதை பிள்ளை இவங்களைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு கவலையின்னும் இன்னும் கூடும். அக்கா ஓம் ஓம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
நான் அழவேயில்லையா கொள்ளிக்குடத்தோடு என்னைத் தோளில் வைத்துக்கொண்டு அப்பாவைச்சுற்றி வந்தபோது எனக்கு ஏதோ விபரீதம் என்று புரிந்தபோது. அழுதேன். கடைசியாக சுடலையில் அப்பாவைக் கொளுத்தியபோது பட்டு வேட்டியும் சால்வையுமாகப் படுத்திருந்த அப்பாவின் சுருட்டைத் தலை முடியைப் பற்றிக்கொண்டு மஞ்சளாய்த் தீ நடனமாயிபோது, அப்பா இனிமேல் வரவே மாட்டார் என்று எனக்கு புரிந்தபோது வீறிட்டு கத்தினேன். அப்பா என்கிற மிகப்பெரிய துணையின் இழப்பு எனக்கு அந்தக் கணத்தில் புரிந்தது. யார் யாரோ என்னை அணைத்தார்கள். சமாதானப்படுத்தினார்கள். சோடா கொடுத்தார்கள். இப்போதும் அந்த அழுகை உறங்கிக்கொண்டிருந்தது எனக்குள். இதை எழுதிக் கடக்கையிலும் உதடுகள் துடித்து மனசுக்குள் மெல்லிய நடுக்கம் கிளம்பிக்கொண்டிருந்தது.
இப்போது 18 வருடங்கள் கழித்து மரணம் பற்றி எனக்கிருந்த எண்ணங்களை அனுபவங்களை எழுதலாம் என்று நினைத்து தொடங்கினேன். அப்பாவின் மரணத்தை தவிர்த்து விட்டு எப்படி-? அப்பா எனக்கு சரியாக நினைவுகளில் பதியாத பிம்பம். அவர்
மரணம் என்னை அவர் மரணம் என்னை நிச்சயமாக பாதித்தது. என்னிலும் அதிகமாக தம்பியை அதைவிட அப்போதுதான் பிறந்திருந்து தங்கையை (அவளுக்கு அப்பாவின் முகமே தெரியாது) அந்த மரணம் பாதித்தது. அப்பனில்லாப்பிள்ளைகள் என்கிற இலவச இணைப்பு அனுதாபம் என்னோடு எப்போதும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவுகளையும் தந்து கொண்டேயிருக்கிறது.
மரணத்தின் வாசனை நூலில் இடம்பெற்றுள்ள படைப்புகளில் ஒன்று.
அகிலன்
மரனத்தின் வாசனை ஆங்கிலத்தில்/ இந்தியில் மொழி பெயர்க்க முடியுமா என்று பாருங்கள்
பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்
அன்புத்தோழர் அகிலனுக்கு;
தோழர் நகுலகுமாரின் அறிமுகத்தால் உமது இணையத்தளத்தை உலாவி யதில் ஒரு ’சின்னப்பையனின் அப்பா…..’ கதையைப் படிக்க நேர்ந்தது.
கதையின் சம்பவங்கள் உணர்வுபூர்வமாக இருந்தன.
அதன் அழகியலில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
புத்தன் ’மரணம் சம்பவியாத வீட்டில் கடுகுவாங்கிவா’ என்று சொன்ன கதையை ஒரு வரியிலேயே சொல்லிச்சென்றிருக்கலாம். அதை அறியாத வாசகர்கள் இருக்கமாட்டார்கள். ஒரு வகையில் அந்தக்கதை உங்களுக்கு நீங்களே சொல்லிகொள்ளும் சமாதானமாகவும் கொள்ள வழிசெய்கிறது. ஆதலால் அதைத் தவிர்த்துமிருக்கலாம். இன்னும் கதையின் ஈற்றுப்பகுதியில் சற்றே வார்த்தைகள் அதிகம். அதாவது கதை முடிந்த பின்னும் சிலவார்த்தைகள் நண்டுக்குஞ்சுகளைப்போல் நடந்து திரிகின்றன/தொடர்கின்றன. அவை கதையைக் கட்டுரைத்தன்மைக்கு நகர்த்துகின்றன. இன்னும் மேலதிக வார்த்தைகள் கதையின் இறுக்கத்தைத் தளர்த்திவிடும். சு.ரா சொல்லுவார் 4 வார்த்தைகளில் சொல்லவேண்டிய விஷயத்தை 5 வார்த்தைகளில் சொன்னேனாயின் அந்த வார்த்தைகள் எத்தனை உயர்ந்தனவாயினும் வேஸ்ட். ஆசிரியர் கூற்றிலுள்ள எழுத்துப்பிழைகள் கவனிக்கப்படவேண்டியன. எ+டு: கேக்க கேக்க, குறுக்காசின்ர, வெத்திலத்தட்டம் . சிறுகதையும் கவிதையைப் போலத்தான். ஒவ்வொருவார்த்தையும் பார்த்துப் பார்த்து தேர்ந்து இழைக்கப்படவேண்டியது.
நீர் கிளிநொச்சியில் பிறந்து வளர்ந்ததாக்க் கூறியிருந்தாலும் பூர்வீகம் வடமராட்சியென்று சில சொல்லாடல்களால் தெரிந்துகொண்டேன். சரிதானா? தொகுப்பு கைக்குவந்து சேர்ந்ததும் இன்னும் ஏதாவது சொல்ல இருந்தால் சொல்லுவேன். அதுவரை
நட்பார்ந்த
பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் 23.06.09
//மரனத்தின் வாசனை ஆங்கிலத்தில்/ இந்தியில் மொழி பெயர்க்க முடியுமா என்று பாருங்கள்//
வடலி பதிப்பகத்தார் இது குறித்து கருத்திலெடுப்பது நல்லது. தமிழ் தாண்டி அகிலன் போன்ற புதிய தலை முறையினரின் எழுத்துக்கள் செல்வது மிக நல்லது.
உங்களை முதலாவதாக வாசிப்பதே இந்தப் பிரதியினூடாகத்தான்.
அதுவும் கணிகள் பனிக்க…
நீங்கள் உங்கள் அப்பா கண்முழித்ததாகக் கண்டது உண்மையென்றுதான் நினைக்கிறேன்.
மஜீத் மஜீதியின் color of paradise திரைப்படம் கூட ஒரு சிறுவனின் மரணத்தின் பிறகும் அவனுடைய உடல் ஒரு மெல்லிய அசைவைக் காண்பதுடனேயே முடிகிறது.
என்னுடைய மருத்துவ நண்பனொருவனும் இது சாத்தியம் என்றே சொன்னான்.
உங்களின் அப்பாவின் உடலின் கடைசி ஏக்கம் உங்களைப் பார்ப்பதோடு முடிந்திருக்கலாம்,
உண்மைகளைக் கதைப்பதின் வலியும் வலிமையும் இக்கதையெங்கும் படர்ந்தேயிருக்கிறது