அந்த வேதனையிலும் எனக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. பின்ன நாலு நளா கோல்ட் ஆக்ட்,சமஹன்,பனடோல்,ஆக்சன் 500 எண்டு முயற்சி செய்து செய்து தோத்துப்போய் ஆஸ்பத்திரிக்குப்போனா. போன உடனேயே ஒரு நர்சம்மா வாயில தெர்மா மீட்டரை செருகி உடைஞ்சா 100 ரூபாய் எண்டு சொன்னா சிரிப்பு வருமா வராதா? ஒரு வேளை நோயால் துவண்டு போயிருக்கும் நோயாளிகளை கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் அவா இந்த விசயத்தை சொல்லியிருப்பாவோ? என்னவோ? ஆழ்வார்ப் பேட்டை ஆண்டவா இது என்ன மனோபாவம்? நேரடியாகப் பேரத்தில் இறங்குகிற மனோபாவம்;. ஒரு நோயாளியிடம் முதலிலேயே பணத்தைப் பற்றிப் பேசினால் மனசுக்கு எப்படித் தெம்பு வரும். எனக்கு கோபம் கூட வந்தது. ஆனா அந்தச் சம்பவம் ஆஸ்பத்திரிகள் பற்றிய என் நினைவுகளை நான் கடந்து வந்த ஆஸ்பத்திரிகளை மறுபடியும் நினைச்சுப்பார்க்க வைச்சது.
சென்னைக்கு வந்த இவ்வளவு நாளில் நான் இரண்டாவது தடைவையாக ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறேன். மற்றபடி கை வைத்தியம்தான். எனக்கு ஊசிபோல உடம்பென்பதால் கொஞ்சம் நோய்ப்பிரச்சினையும் குறைவாகத்தான் இருந்தது எண்டு வையுங்கோவன். அம்மா அரசாங்க உத்தியோகம் (ரீச்சர்) பார்க்கிறவா எண்டதால நாங்கள் அரசாங்க ஆஸ்பத்திரியில மருந்தெடுக்கிறது குறைவு. ஏன்? நான் பிறந்ததே ஒரு பிறைவேற் ஆஸ்பத்திரியில தான் எண்டாப் பாருங்கோவன்.(ரொம்ப முக்கியம்) இலங்கையில் அதுவும் கிளிநொச்சியில் பிள்ளைகள் அரசாங்க ஆஸ்பத்திரியில் பிறப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். அதுவும் இற்றைக்கு கால் நூற்றாண்டுக்கு முன்பு அப்படி ஒரு பிறைவேற் ஆஸ்பத்திரியில் பிறக்கிறது பெரிய விசயம் தான். (இப்ப அம்மா என்னைக் காசு கொடுத்து பெத்தது குறித்து கவலைப் படுறா எண்டது வேறு விசயம்)
எனக்கு நினைவு தெரிஞ்சு ஆஸ்பத்திரி நினைவுகளில் முதலாவதாக இருப்பது. காலில் சிராய் ஏறினதுதான். அதைவிட ஆஸ்பத்திரி என்றவுடன் நினைவுக்கு வருவது சாந்தி கிளினிக்தான். இப்போதும் நல்லா நினைவிருக்கு கரடிப்போக்குச் சிங்கர் கொம்பனிக்கு பக்கத்தில நீலக்கலர் பெயின்ற் அடிச்ச சின்னக் கட்டிடம். ஒரே ஒரு வாங்கு அது பச்சைக் கலர் கடும் பச்சை. கொஞ்சம் மண்ணிறப் போத்தலுகள் அதுக்குள்ள திரவ மருந்துகள். கத்திரிக்கோல் இன்ன பிற டாக்குத்தர்மாரின்ர தடியள் பொல்லுகள்(அவர்கள் பாவிக்கிற உபகரணங்கள்) எண்டு காட்சி அளிக்கும் அந்தக் கிளினிக். அதே மாதிரி டொக்ரர் என்றாலே நினைவுக்கு வாறது சுப்பையா டொக்ரர் தான். அவற்ற தான் சாந்தி கிளினிக். இப்ப அவர் உயிரோட இருக்கிறாரா? இல்லையா? என்றது தெரியாது. ஏனென்றால் அவர் அப்பவே முக்காக்கிழவர். அவற்ற வயிறு மேசையில் முட்டிக்கொண்டிருக்க கழுத்தில தொங்கிற தெதஸ்கோப்போட அவர் வீற்றிருக்கிறதைப் பாத்தால் எனக்கு பூந்தளிர் புத்தகத்தில வாற கண்ணாடி போட்ட யானைதான் நினைவுக்கு வரும். அங்கயும் ஆஸ்பத்திரிக்கு போன உடன வாய்க்குள்ள தெர்மா மீற்றர் வைச்சுப் பாக்கிறவைதான் (ஆனா உடைஞ்சா நூறு ரூபாய் எண்டு சொல்ல மாட்டினம்) என்ன வியாதிக்கு வைத்தியம் பார்க்கப்போனாலும் போன உடன சுப்பையர் வயித்தைத்தான் முதல் பிடிச்சிழுப்பார் யானை தன் தும்பிக்கையால் இழுக்கிற மாதிரியே இருக்கும். இதுக்குள்ள தன்ர கரகரத்த குரலால் “என்னடா குழப்படியா” எண்டு வேற கேப்பார். எப்படியிருக்கும் எண்டு நினைக்கிறியள் (உங்கள் கற்பனைக்கு சின்ன இடைவெளி)
சுப்பையர் மீது எனக்கு லோசான பயம் இருக்கிறதுக்கு அவரோடு நிகழ்ந்த முதல் சந்திப்புத்தான் காரணமாயிருக்கலாம் எண்டு நினைக்கிறேன். அநேகமாக எனக்கு முதல் சந்திப்புக்கள் எப்பவும் ஏடாகூடமாத்தான் நிகழும். என்ர ராசி அப்படி. மாமா வீட்டில் வீடு கட்ட அடுக்கியிருந்த பனந்தீராந்திகளில ஏறி விளையாடக் கூடாது எண்டு வீட்டுக்காரர் சொல்லியிருந்தாலும் நாங்கள் அதற்கு மேல ஏறி விளையாடிறனாங்கள். நீ அப்படித்தான் செய்திருப்பாய் என்றதைச் சொல்லித்தான் தெரியோணுமோ எண்டுதானே உள்ளுக்குள்ள நினைக்கிறியள் அப்பயிருந்து இப்ப வரைக்கும் வீட்டுக்காரர் சொல்லிறதை எப்பவாவது கேட்டிருக்கிறனா? அதை விடுவம். விளையாடேக்க ஒரு பனந்தீராந்திக்கு என்ர காலை மிகவும் பிடிச்சுப்போய் இரண்டு மூன்று சிராயை சுருக்கெண்டு என்ர கால்ல ஏத்தி விட்டுது. கால்ல ஒரு ஒண்டரை இன்ஞ்சிக்கு சிராய் ஏறியிருந்தாலும். விசயத்தை சொல்லி அம்மாட்ட எதுக்கு ஒண்டரை அடி நீளமான கம்பால அடிவாங்குவான் எண்டு நினைச்சு சொல்லாம அமைதிகாத்திட்டன். சிராய் உள்ளுக்குள்ள கால்மீதான தன்ர பிரியத்தை கொஞ்சம் அதிகமாக் காட்டக் காட்ட கொதி வலிதாங்காம நான் காத்த அமைதியைக் குலைத்து நான் கத்த. (இங்க கட் பண்ணினா……)
சுப்பையரின்ர சாந்தி கிளினிக்கில நிக்கிறம் நானும் பெரியக்காவும் அம்மாவும். மூன்று தையல் போடவேண்டி வரும் என்றார் சுப்பையர். நான் ஏதோ தையல் மெசினில வைச்சுக் காலைத் தைக்கப்போறாங்களாக்கும் எண்டு நல்லாப் பயந்திட்டன். பிறகு பாத்தா என்னைக் கட்டில்ல படுக்க வைச்சிட்டு சுப்பையரும் நேசும் ஒரு சின்னப் பெட்டியோட வந்திச்சினம். அப்ப தையல் போடுறதெண்டிறது ஏதோ சின்னப் பிரச்சினைதானாக்கும் எண்டு நான் நினைச்ச நினைப்பு கனநேரம் நீடிச்சிருக்காதெண்டு உங்களிற்குத் தெரியும்தானே. கட்டில்ல என்னை அமத்திக் கிடத்தி. சுப்பையர் தன்ர சிறிய பளபளப்பா மினுங்கும் கத்தியை பெட்டிக்குள்ள இருந்து எடுத்து ஓங்கவும் ( ஒரு பில்டப்புக்கு) அய்யோ என்னை வெட்டுறாங்கள் எண்டு நான் கத்திக்கொண்டு கட்டிலை விட்டுக் குதிக்கவும் சரியா இருந்தது.
அண்டைக்கு அந்தச் சம்பவத்தை நேரில் பாத்த இரண்டு சாட்சிகள் கனநாளைக்கு அந்தச் சம்பவத்தை நினைவில் வைச்சிருந்தவை. ஒராள் எங்கட பள்ளிக் கூடத்தில் படிப்பிச்ச கலா ரீச்சர். இந்த விசயம் நடந்து கிட்டத்தட்ட மூண்டு வருசம் கழிச்சு நாலம் வகுப்பில நான் அவாட்ட படிக்கிற சந்தர்ப்பம் வாய்ச்சது. அவா முதல் நாள் வகுப்பிலேயே புத்தகத்தை தந்து என்னை வாசிக்கச் சொல்லிப்போட்டு வாசிச்சு முடிக்கும்போது கேட்டா “டேய் நீதானே சுப்பையர்ற கிளினிக்ல என்னை வெட்டுறாங்கள் வெட்டுறாங்கள் எண்டு கத்திக்கொண்டு ஓடினது?” பெடியளெல்லாம் கொல்லெண்டு சிரிப்பு. பெட்டையள் கெக்கெக்கே பிக்கெக்கே எண்டு ஒரே சிரிப்பு. எனக்கு அதுக்குப்பிறகு பள்ளிக் கூடத்தை விட்டு வரும் வரைக்கும் கலாச்ரீச்சர் மீது நல்ல அபிப்பிராயம் வராததற்கு இந்த சம்பவம்தான் காரணம் எண்டு நினைக்கிறன்.
மற்ற இன்னொரு சாட்சி அணில். என்னடா இவன் காலுக்குத் தையல் தானே போட்டவன் என்ன ராமர் பாலம் கட்டின மாதிரி அணில் எண்டு சொல்றானே எண்டு பார்க்காதேங்கோ. அது அவாக்கு பட்டப்பேர். அவா ஒரு இயக்க அக்கா. அம்மாட்ட படிச்சவாவாம். (பாவம் அவா!!) ரீச்சற்ற மகன் அழுகிறானே எண்டு நினைச்சு அவா என்னை ஆறுதல் படுத்தும் விதமாக நாலு வார்த்தை சொல்லி தன்ர பொக்கற்றுக்க வைச்சிருந்த ஒரு ஸ்டிக்கரை எடுத்துத் தந்தவா. பச்சைக்கலர் தமிழீழப் படத்தின்ர பின்னணியில பிரபாகரனும் மாத்தையாவும் பக்கத்தில பக்கத்தில நிக்கிற படம் போட்டிருந்தது அந்த ஸ்டிக்கரில. அவாவை நினைவு வைச்சிருக்கிறதுக்கு அந்த ஸ்ரிக்கர் மட்டும் காரணமில்லை. அவா வெட்டியிருந்த கிப்பியும்தான் காரணம். கிப்பி வெட்டியிருக்கிறாக்களை அப்ப எங்கட ஊரில பார்க்கிறது அரிது. அப்படி வெட்டினாக்களைத் திமிர் பிடிச்சாக்கள் எண்டு சொல்ற ஒரு காலமும் இருந்தது. கூடுதலா இயக்க அக்காக்கள் தான் கிப்பி வெட்டியிருப்பினம். நான் அவாக்கு அணில் எண்டு பேர் வைச்சன் ஏன் எண்டது நினைவில்லை. நான் அந்த ஸ்டிக்கரை கனநாள் ஒட்டாமலே என்ர மற்ற ஸ்ரிக்கருகளோட சேர்த்து வைச்சிருந்தனான். பிறகொருநாள் பெரியண்ணா அந்த ஸ்ரிக்ரை எடுத்து ரெண்டா வெட்டிப் பாதியைக் கிழிச்செறிஞ்சிட்டான். இதோ இப்பயும் அந்தத் தழும்பைப் பார்க்கிறன் அப்படியே கிடக்கு கால்ல நினைவுகளைக் கிளறிக்கொண்டு.
இந்த சிராய் ஏறின நினைவுதான் சுப்பையர் எண்டதும் முதல் எனது நினைவடுக்குகளில் வருவது. அதற்குப்பிறகு ஆண்டுக் கணக்குகளாக பலதடைவைகள் அவரிடம் வைத்தியத்துக்குப் போயிருக்கிறேன். அங்க சிவானந்தி எண்டொரு அக்கா கனநாளா வேலை செய்தவா. பிறகு கிளிநொச்சியில் இருந்து இடம் பெயரும் மட்டும்தான் இதெல்லாம். இடப்பெயர்வோட சுப்பையர் வவுனியாவுக்கு அங்கால போட்டார். பிறகு சிவானந்தி அக்கா பிக்பென்ஸ் புத்தகக் கடையில வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டன். அவா என்னைச் ரீச்சற்ற மகன் எண்டு நினைவு வச்சிருந்தவா அது ஒன்றே அந்தப் புத்தகக் கடைக்கு பிறகு நான் போகாததற்கு காரணமாயிருந்தது.
அதற்குப்பிறகு வந்த அகதி வாழ்வின் ஆஸ்பத்திரி அனுபவங்கள் வித்தியாசமானவை. பிணியும் துயரமும் தான் மக்களைப் பாடாய்ப்படுத்தியது. உடலை விட மனம் அதிகமாய்ப் பாதிக்கப் பட்டிருந்தது. அதிகமாக இருந்த வியாதி மலேரியா எங்கெங்கு காணிலும் மலேரியா. மலேரியா மட்டுமல்ல மலேரியான்ர அக்கா தங்கச்சி காய்ச்சலுகளும் கூட. மக்களை வாட்டி எடுத்தது. அப்போது இலங்கையின் இராணியாக இருந்த சந்திரிகா எங்களை ஊரை விட்டுத் துரத்தி. எங்கட ஊருக்கு வருகிற மருந்துப்பொருட்களையும் மொத்தமாக தடை செய்திருந்தார். அந்த மலேரியாக் காலத்தில் எங்களைக் காப்பாற்றியது இரண்டு ராணிகள். இந்த இராணிகள் இரண்டு பேரும் இல்லாவிட்டால் நிச்சயமாய் வன்னிப் பகுதியின் சனத்தொகை பாதியாகக் குறைந்திருக்கும்.
அவர்களில் ஒருத்திக்குப் பேர் குளோரோக் குயீன் மற்றவாக்குப் பெயர் பிறீமாக் குயீன். குளோரோ அக்கா என்றால் பிறீமா தங்கச்சி. இரண்டும் செம வட்டம். இந்த இரண்டு ராணிகளிடமும் தான் மொத்த மக்களும் சரணாகதி அடைந்திருந்தார்கள். இராணிகளும் பாவம் பார்க்காம எல்லாருக்கும் தங்கள் அன்பைப் பொழிந்தார்கள். காய்ச்சல் எண்டு சொன்னாப்போதும் உடன கண்ணை மூடிக்கொண்டு தருவார்கள் இந்த இரண்டு குயீனையும். காய்ச்சல் வராம இருக்கோணுமா அதுக்கும் இதுதான் கிழமைக்கு இரண்டு குளேராக் குயீன் அடியுங்கோ மலேரியா தலைவைச்சுப் படுக்காது. ஆனா அப்படியெல்லாம் கிழமை தவறாமக் குடிச்சும் மலேரியா கட்டில்போட்டே படுத்திருக்கு சிலர் உடம்பில. ஒரு பாலர் வகுப்புப் பெடியனைக் கூப்பிட்டுக் கேட்டாலே அவன் தலைகரணமாச் சொல்லுவான். ஒரு மலேரியா டோஸ் எப்படி என்ன அளவுகளில எப்ப எப்ப போடவேணும் என்றதை.
காய்ச்சல் சம்மந்தப்பட்ட மலேரியான்ர அக்கா தங்கச்சி வியாதிகளான நெருப்புக்காய்ச்சல்,மூளைக்காய்ச்சல் இன்னும் டிசைன் டிசைனான காய்ச்சல்களுக்கெல்லாம் ஒரே மருந்து அருமருந்து குளோரோக்குயின் மற்றும் பிறீமாக் குயின்தான். (வேற மருந்திருந்தாலும் கிளிநொச்சியில அதெல்லாம் கிடைக்கிறது அரிதப்பு) மலேரியா சம்மந்தமான வியாதிகளால் நிரம்பி வழிந்தன வைத்திய சாலைகள் (கள் பொருந்தாது எண்டு நினைக்கிறன்) ஒண்டே ஒண்டு இருந்தது கிளிநொச்சியில அக்கராயன் வைத்தியசாலை. அதில கூட்டத்தை சமாளிக்க முடியாம திணறிச்சினம் வைத்தியர்மார். விடியக் காலை இரண்டு மூண்டு மணிக்கெல்லாம் போய் நம்பர்த்துண்டு எடுக்கவேண்டியிருந்தது. எனக்கு தெரிஞ்சு பெரியப்பா விடியப்புறம் 3 மணிக்கு போய் நம்பர்த்துண்டு எடுத்திருக்கிறார். அப்படி நேரத்தோட போனாலும் ஒரு இருநூறாவதோ முன்னூறாவதோத்தான் நம்பர் கிடைக்கும். இந்தக் கூட்டத்தை சமாளிக்க முடியாம மலேரியாவுக்கு இது இதுதான் குழிசை நீங்களே இதை இன்ன இன்ன அளவுகளில் போட்டுக்கொள்ளலாம் எண்டு ஈழநாதத்தில விளம்பரம் செய்தார்கள்.
அது தவிரவும் சென்னையில் துணிக்கடை,கணினிக் கடை எண்டு எல்லாத்துக்கள் விளம்பரம் பெரிய அளவுகளில வைக்கப்பட்டிருக்கே. துணிக்கடைக்கான விளம்பரத்தில துணிகள் குறைவாகவும் பெண்களின் இடுப்பை அதிகமாகவும் பயன்படுத்தி பெரிய டிஜிட்டல் பேனர்கள் வைத்திருப்பது போல மலேரியாவுக்கான குழிசைகளை என்ன அளவுகளில் உட்கொள்ள வேண்டும் என்பதை பெரிய அளவுகளில் முக்கியமான இடங்களில் பெயின்றால் எழுதி விளம்பரம் செய்திருப்பார்கள். அதில ஒரு சின்ன வட்டத்தில நுளம்பும். ஒரு காய்ச்சல் காரர் இருமுற மாதிரியும் படம் போட்டிருக்கும். இந்த இரண்டு ராணிகளும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.
மலேரியா வந்தால் அதுல சொல்லப்பட்டிருக்கிற அளவுக்கு இந்தக் குழிசைகளை (மாத்திரைகளை)குடிச்சாலே மனிசன் பாதி செத்துப் போயிருவான். ஒரு கிலோ நல்ல முத்தின பாவற்காயாப் பாத்து வாங்கி அப்படியே ஒரு சொட்டுக் கூட வீணாகாமல் யூசாப் பிழிஞ்சு நீங்கள் காய்ச்சலா இருக்கும்போது தந்தால் எப்படியிருக்கும். (நலமாய் இருக்கும்போது மட்டும் குடிக்கலாமாக்கும்) அப்பிடித்தான் இருக்கும் ஒரு குளோரோக் குயின். இதில 4 குளிசையை ஒண்டாக் குடிக்க வேண்டியும் வரும். சுப்பையா டொக்கரர் தையல் போட்டதே பரவாயில்லைப்போல என்று நினைக்குமளவுக்கு இருக்கும். அப்பிடியே ஒரு குழிசையைத் தண்ணியை ஊத்தி வாயில் போட்டால்…. (இந்த இடத்தில் போட்டால்…….ஆல் ஆல் எண்டு எக்கோ எபக்ற் குடுக்கவும்)
வயித்துக்குள்ள பாதி வழி போன மச்சான் திரும்பி வருவான் உள்ளயிருக்கிற மிச்ச மச்சான் மாரையும் கூட்டிக்கொண்டு. கொஞ்சமாச் சாப்பிட்டிருப்பம் அதுவும் சாப்பிட முடியாமச் சாப்பிட்டிருப்பம் குளோரோக் குயின் போட்டாப்போதும் சாப்பிட்டதைவிட அதிகமா வெளியில வரும். அதுக்கு அப்படி ஒரு சக்தி சத்தியை(வாந்தி) வரவைக்கிற சக்தி. இந்த நேரங்களில் தான் எனக்கு அபிதாவில எரிச்சல் எரிச்சலா வரும். அபிதா என் எருமை அய்யோ அருமைத் தங்கச்சி. மனுசன் சத்தி எடுத்துப்போட்டு கைச்சல் கொஞ்சம் குறைவாக் கிடக்கே எண்டு நிம்மதியாகிற நேரத்தில வருவாள் அண்ணா எடுத்த சத்திக்கு மண்போடுறன் எண்ட பாசப்போர்வையோட.(இப்படித்தான் நிறையத் தங்கச்சிமார் அலையினம் கவனம்) வந்து பூதக்கண்ணாடி வைச்சுப் பாத்து பெரியம்மா…… எண்டொரு இழுவை அழைப்பை மேற்கொள்வாள். அண்ணா குழிசையையும் சேர்த்து சத்தி எடுத்திட்டான் எண்டு அக்கறையோடு தன்ரை கண்டு பிடிப்பை வெளியிடுவாள். பெரியம்மாவும் உடன அப்ப திரும்பவும் ரெண்டு குழிசையைப் போடவேணும் எண்டு சொல்லுவா. மனுசன் குடுத்திருக்கிற அளவையே குடிக்கமுடியாமத் திண்டாடுறான் இதுக்கிள்ள எக்ஸ்ரா பிட்வேற.
அம்மம்மா இப்படி குழிசை குடிக்க அஞ்சுபவனாய் நான் இருக்கிறதால. தான் குடிநீர் வைச்சுத்தாறன் அதைக் குடிச்சால் மலேரியா துண்டைக்காணம் துணியைக் காணம் எண்டு ஓடிரும் எண்டு சொன்னா. நானும் ஒரு அறு சுவையோட ஒரு தேவ பானத்தை எதிர்கொண்டு காத்திருந்தன். ஆனா அம்மம்மா கொண்டு வந்த பானத்தைக் கண்டு நான் துண்டைக் காணம் துணியைக்காணம் எண்டு ஓடவேண்டியதாப் போச்சுது. அம்மம்மா மலேரியாத் தடுப்பெண்டும் அதோட சேத்து மற்ற எல்லாக்கிருமிகளுக்கும் வேட்டு வைக்குமென்றும் சொல்லி வேப்பம் பட்டையை அவிச்சு அதைக்குடிக்கச் சொல்லிக் கொடுமைப்படுத்துவா. இதுக்கு குளோரோக் குயினே தேவலாம் போல இருக்கும்.
ஆனால் இப்படிக் கசப்பான குழிசைகளையும் தேனாமிர்தம் மாதிரி சப்பிச் சாப்பிடுற அதிசயப் பிறவி ஒருத்தன் எனக்கு நண்பனா வாய்ச்சவன் சதீஸ்கண்ணா எண்டது அவன்ர திருநாமம். இந்த முக்கியத்துவமும் அதிசயமும் ஒருங்கே அமையப்பெற்ற தகவலைச் சொல்லாவிட்டால் நான் பெரிய வரலாற்று தவறிழைத்தவனாவேன் எண்டதால இதைச்சொல்றன். மலேரியாச் சகோதரி வியாதிகள் மட்டுமல்ல அவ்வப்போது சில காதல் பிரச்சினைகளுக்கும் இந்த இரண்டு ராணிகளும் தீர்வுகள் எடுத்துக் குடுத்திருக்கினம். வீட்டுக்காரர் தான் காதலிக்கிறவரை கட்டவிடமாட்டினம் எண்டு நினைக்கிற பிள்ளையள் சிலது குளோரோக்குயினை கொஞ்சம் அதிகமா வாங்கி போட்டுத் தற்கொலை முயற்சிகளிலும் இறங்கியிருக்கினம். சிலபேருக்கு கைகொடுத்து நிம்மதியா மேலபோய்ச் சேந்தும் இருக்கினம். சிலபேர் தப்பி காதலனோடும் சேந்திருக்கினம். ஏன் வயலுக்கு அடிக்கிற பூச்சிமருந்தில முயற்சிக்கிறது வலு ஈசி வழியெண்டு நீங்கள் நினைக்கிறது எனக்கு தெரியுது. ஆனால் அப்ப அரசாங்கம் புலிகள் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள்ள வயலுக்கு உரங்கள் பூச்சி மருந்துகள் கொண்டு வாறதுக்கு கூடத்தடைவிதிச்சிருந்தவை. உது தவறினா அரளிக்கொட்டை அது இதெண்டு கொஞ்சம் லோக்கலா இறங்கவேணும். அதைவிட இது லேசுதானே என்ன?
ஆஸ்பத்திரிகளில் அப்ப எல்லாம் சனம் நிரம்பிவழியும் என்னதான் வெளியில் பார்மசி வழிய குளிசை வாங்கலாமெண்டாலும் அதை வாங்குறதுக்கு நிறையச் சனங்களிட்ட காசிருக்கேல்ல எண்டது கொடுமை. அதால அரசாங்க ஆசுப்பத்திரிக்கு எப்பவும் சனம் இருந்துகொண்டேயிருக்கும். ஆனால் அரசாங்க ஆஸ்பத்திரியில் மருந்துப்பொருட்கள் எந்தநாட்களும் இருந்து கொண்டிருக்குமென்று சொல்ல முடியாது. எப்பவாவது செஞ்சிலுவைச் சங்க அணிவகுப்பில கொண்டுவரப்படுகிற மருந்துகள் தான்.
எனக்கு மருந்தத் தடையெண்டோண்ண பண்டிதர் ச.வே.பஞ்சாச்சரம் கவியரங்கத்தில வாசிச்ச கவிதை வரிகள் நினைவுக்கு வரும்.
“சிறீமாக் குயின் பெத்த குயின்
பிறீமாக் குயினுக்கும் தடை போட்டா..” இதான் அந்த வரிகள்.
எங்கட சித்தி ஒராள் மருந்தில்லாமலுக்கு அக்கராயன் ஆஸ்பத்திரியில் செத்துப்போனவா. காய்ச்சல் தவிர அப்பப்ப கிபிரடி செல்லடி எண்டு ஆமிக்காரரும் தங்கடை பங்குக்கு கொஞ்சப் பேரைக் காயப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் கட்டில்கள் எப்போதும் நிரம்பியே இருந்தன. ஆஸ்பத்திரியின் நடைபாதைகளிலெல்லாம் நோயாளிகள் பாய்விரித்துப் படுத்திருந்தார்கள். அங்கு நல்ல நிலையில் போகிற ஒருவனையும் அச்சமூட்டி நோயாளி ஆக்குகிற நிலையில் அன்றைய கிளிநொச்சியின் நிலைமை இருந்தது. இது தவிர அப்பப்ப கொஞ்சம் நாய்கடி, அதைவிட முக்கியமா முதலைக் கடிக்கு கூட மருத்துவம் பார்க்கவேண்டியிருந்தது. உண்மையா நிறையச் சனங்களிட்ட சொந்தமா வீடுகள் இருக்கேல்ல ஒரே வளவுக்குள்ள நிறை குடும்பங்கள் கோடைகாலத்தில வத்திப்போற கிணறுகள் சனங்களை முதலைக்கு விருந்தாய் குளத்தை நோக்கி அனுப்பிக்கொண்டிருந்தது. குளத்தில் குளிச்சா சனத்துக்கு இரண்டுவிசயங்கள் ஒரு வட்டக்கடி,சொறி,சிரங்கு போன்ற தோல்வியாதிகள் தாராளமாய் கிடைக்கும் இரண்டாவது தண்ணி தாராளமாய்க் கிடைக்கும். இதற்கெல்லாம் உஜாலாக் கலரில் ஒரு மருந்து தருவாங்கள் அதைப்பூசிக்கொண்டு திரியிறாக்களைப் பார்க்கவே அருவருப்பா இருக்கும். ஆனால் எனக்கும் வந்தது கையெல்லாம் கொப்புளம் கொப்புளமா..
ஆனா எல்லாத்துக்கும் மேல ஆஸ்பத்திரிக்கெண்டு ஒரு வாசனை இருக்கு. மூக்கை அரிக்கிற நெடி எல்லா ஆஸ்பத்திரிகளிலும் அந்த வாசனை ஒரே மாதிரியானதாகத்தான் இருந்தது.
பாம்பைக் கண்டாப் படையும் நடுங்கும் எண்டிற மாதிரி எனக்கு ஊசியைக் கண்டால் நடுங்கும். ஒருக்கால் மாமா வீட்டு நாய்க்கு விசர் பிடிச்சு அது கடிச்சாக்கள்,கடிக்காதாக்கள், முகர்ந்து பாத்திட்டு விட்டிட்டுப் போனாக்கள் எண்டு எல்லாருக்கும் மொத்தமா தொப்புளைச் சுத்தி தொடர்ச்சியா பதினாலு நாள் ஊசி. வயிறு கல்லு மாதிரி இறுகித்தான் கிடந்தது. அப்ப சரியா நோகுதெண்டு நான் கொஞ்சம் நெளிஞ்சு வளைஞ்சு தான் நடப்பன். மாமா நக்கலடிப்பார் சிவாஜிகணேசன் தோத்தான்ரா உன்னட்டை என்ன ஒரு நடிப்பெண்டு. (இப்ப நான் சென்னைக்கு வந்தது மாமாவின்ர ஊக்குவிப்பால தான் எண்டு தப்புக்கணக்குப் போடவேண்டாம்) அப்படி ஊசிக்கும் எனக்கும் சோதனையான அறிமுகங்கள் இருக்கிறதால பெரும்பாலும் டாக்குத்தர் ஊசி எழுதியிருக்கிறார் எண்டு தெரிஞ்சாலே துண்டைக்காணம் துணியைக் காணம் எண்டு பறந்திருவன். பொதுவாவே இந்த ஊசிபோடுற அறையளைப் பார்க்கும்போதே ஏதோ சித்திரவதைக்கூடத்துக்குள் போறமாதிரியே ஒரு உணர்வு. பொட்டா ரத்தம் கசிஞ்சிருக்கிற பஞ்சுத் துண்டுகள் நிறைஞ்ச ஒரு குப்பைக்கூடை, ஒரு பக்கம் அப்படியே கொதிச்சுக்கொண்டிருக்கிற ஊசி அவியவைக்கிற பாத்திரங்கள் எண்டு கொஞ்சமா உங்களிட்ட கற்பனைத்திறன் இருந்தாலே போதும் அது உங்களிற்கு ஒரு நரகலோகமாகவே தெரியும். பத்தாக்குறைக்கு ஊசி போடுறதுக்கு குண்டா ஒரு நேசிருந்தா எண்டு வையுங்கோ எம கிங்கரர்களையும் சேர்த்தே கற்பனை பண்ணலாம். குண்டா இருக்கிற நேஸ்மார் ஊசியை இறுக்கி நோகத்தக்கதாகத்தான் போடுவினம் எண்ட கண்டுபிடிப்பை முதலில் செய்தது சின்னக்காதான். கிளிநொச்சியில் ஒரு குண்டு நேஸ் இருந்தவா. ஒராள் என்ன ஒருசிலரைத்த தவிர எல்லாரும் குண்டாத்தான் இருந்திச்சினம் எண்டது வேறு கதை. அதில இவா ஓராள் (மிஸ் எக்ஸ) அவாவைச்சின்னக்கா நெடுகிலும் பேசுவா அந்தக் குண்டுச்சனியன் போட்டா இன்னமும் பெரிசா நோகும் எண்டு. அது எவ்வளவோ பரவாயில்லை. எப்பயாச்சும் உங்களுக்கு ஏழரைச் சனியன் உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் ஆம்பிளை நேர்ஸ் மாரிட்ட மாட்டினியள் எண்டு வையுங்க சொர்க்கத்தையே……… காட்டுவாங்கள்.
மண்டை உடைஞ்சது,இன்னும் சில பல காயங்களிற்கெல்லாம் வெளியில சுப்பையரிட்டயே மருந்து கட்டீட்டு ஏற்பூசி போட மட்டும் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு போறது. வெளியில் மருந்து கட்டினதுஅ ரசாங்க ஆஸ்பத்திரி டொக்ரரிற்குத் தெரிஞ்சுதோ அவ்வளவுதான். நீ மருந்து கட்டின இடத்தில போய் ஊசியைப் போடு எண்டிருவாங்கள். அதுக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் ஆள் இருக்கவேணும் எங்களுக்கும் அப்படித் தெரிஞ்ச ஒராள் இருந்தவா தனுஸ் அன்ரியெண்டு, அவவின்ர பெயர் தனுஸ் இல்லை. என்ர தோழன் ஒருத்தனுக்குப் பெயர் தான் தனுஸ் அவன்ர அன்ரி இவா எண்டிறதால இவாக்கு அந்தப்பெயர். இவாட்ட சொன்னா டொக்ரரிட்ட போகாமலே ஊசியைப்போட்டு விடுவா. இவா போடேக்க மெதுவாப்போடுற மாதிரித்தான இருக்கும் ஆனாலும் நோகும். நீங்கள் மருந்தையும் அரசாங்க ஆஸ்பத்திரியிலயே கட்டலாம் தானே எண்டு கேப்பியள் நியாயந்தான் ஆனால் இங்க காயத்தை காட்டினியள் எண்டு வையுங்கோ சுத்தமாக்கிறன் பேர்வழியெண்டு கத்திரிக்கோல் நுனியில் பஞ்சை வைச்சுப்போட்டு துடைக்கிறமாதிரித்தான் இருக்கும் ஆனால் வெறுங்கத்திரிக்கோலால பிறாண்டித்தான் எடுப்பினம் காயத்தில இருக்கிற அசடை. இந்த விசயத்துக்குப் பயந்து கொண்டுதான் நான் அரசாங்க ஆஸ்பத்திரியில் மருந்து கட்டுவதைத் தவிர்த்து வந்தேன். ஆனா அதைவிடவும் ஒரு காரணம் இருந்தது. அரசாங்க ஆஸ்பத்திரியில் பஞ்சு, மருந்து கட்டுற பண்டேஜ் போன்றவற்றிற்கு எப்பவும் தட்டுப்பாடு. அதாலதான் அவையள் அதைக் கொஞ்சமாச் செலவழிக்கினம். அநேக நேரங்களில் வீட்டில இருந்து துணியைக் கொண்டு போனால்தான் மருந்து கட்டுவினம் எண்டுற அளவுக்கு அதுக்கெல்லாம் தட்டுப்பாடு இருந்தது. யுத்தம் அகோரமா நடக்கிற நாட்களில் ஆஸ்பத்திரி தொண்டர்கள் வீடு வீடா வந்து பழைய வெள்ளைத் துணிகள் சேகரிச்சுக்கொண்டு போறதும் நடக்கிறது.
சின்னவயதில் கொஞ்சம் அச்சமூட்டக் கூடிய ஒன்றாய் இருந்த ஆஸ்பத்திரி. பிறகு வயதாக ஆக வேறு மாதிரித் தோற்றம் பெற்றது. வயசு ஆக ஆக எண்டு இழுக்கிறதைப் பாத்து அழகான நேஸ்மாரைச் சைற்றடிக்கிற வயசைச் சொல்றன் எண்டு நினைக்கிறியளோ? அதையும் சேர்த்து அந்த கறைபடிந்த சுவர்களிற்குள்ளும், ஒரே மாதிரி சவலோன் நாற்றமடிக்கும் அந்த சூழலுக்குள்ளும் ஒரு இதயம் துடித்துக்கொண்டிருப்பதையும் என்னால் உணர முடிந்தது. சொல்லப் போனால் மனிதர்களின் இதயத்துடிப்புக்களை அது காத்துக்கொண்டிருந்தது. எத்தனை அழகான பிறப்புக்கள் தினந்தோறும் வைத்தியசாலையின் மடியில் நிகழ்கின்றன. எத்தனை பேரைப் பிணிகளில் இருந்து அது விடுவிக்கிறது. மறுபடியும் வாழ்க்கையின் வட்டத்தில் சேர்க்கிறது. ஒரு மனிதனை வாழ வைக்க அது கடைசிவரைக்கும் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது. சில தவிர்க்க முடியா மரணங்களும். ஆனால் எல்லாவற்றையும் மீறி அந்த அசுத்தமான அழகுக்குள் கனிவும் அக்கறையும் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.
வைத்திய சாலைகள் அழுக்கான சுவர்களுடனும் கொஞ்சம் அழகான மனங்கள் கொண்ட மனிதர்களுடனும். உண்மையில் நிரம்பி வழிகிற வைத்திசாலை இருக்கைகளில் இருக்கைகளையும் மீறி தரையிலும் காத்திருக்கிற நோயாளிகளையும். வைத்திய சாலைக் கட்டில்களையும் மீறி வார்டுகளின் வராந்தாக்களில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளையெல்லாம் பராமரித்த வைத்தியர்கள் விரல்களிற்குள் அடங்கிவிடுற எண்ணிக்கையிலதான் இருந்தார்கள் என்றால் நம்பமுடிகிறதா? இன்னமும் என் ஊரில் இதே மாதிரித்தான இருக்கின்றன வைத்தியசாலைகள். அதே யுத்தம் அதே மருந்துத் தட்டப்பாடு அதே மனிதர்களில் தப்பிப் பிழைத்த மீதிப்பேருக்கும் திரும்பவும் அதே துன்பங்கள்.
ஆனால் இங்கே சென்னையில் அப்படி அல்ல என் வீட்டை விடச் சுத்தமாயிருக்கிறதோ என்கிற அளவுக்கு சுத்தமாய்ச் சுவர்கள் இருக்கின்றன. தரை இடியப்பமும் சொதியும் ஊத்திச் சாப்பிடலாம் என்கிற அளவுக்குச் சுத்தமாயிருக்கிறது. எல்லா நோய்களையும் தீர்த்து விடுகிற அளவுக்கு மருத்துவ அறிவிருக்கிறது. மருந்துகள் வருவதற்குத் தடை விதிப்பார் யாரும் கிடையாது. தங்களுடைய ஆஸ்பத்திரிக்கே வாருங்கள் எண்டு விளம்பரம் வேறு. அதுவும் அழகான பெண்களை வைத்து(சும்மா சொல்லக் கூடாது இங்க நேஸ் மாரும் நல்லாத்தான் இருக்கினம்) ஆனாலும் என்ன தெர்மா மீட்டரை நோயாளியின்வாயில் வைத்து விட்டுப் கவனமாகப்பிடியுங்கள் என்று சொன்னாலும் பரவாயில்லை பதிலாக உடைந்தால் 100 ரூபாய் என்று வியாபாரம் பேசுகிறார்கள்……..!!!!!!
மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அகிலன்.
சிறு வயது ஞாபகங்களை எழுத்தில் கோர்த்து,சொல்ல வந்ததை முழுதாகச் சொல்லி அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
மரணத்தின் வாசனைகளில் ஒரு ஆழமான துயரம் இருந்தது. இதில் துயரமான ஒன்றை கொஞ்சம் நகைச்சுவையோடும் தந்திருக்கிறீர்கள். தொடருங்கள்.. வாழ்த்துக்கள்.
அகிலன் என்ன ஒரு சரளமான எழுத்து நடை சும்மா நேர நிண்டு கதைக்கிற மாதிரி இருந்துது மச்சான் குறை நினைக்காதையுங்கோ அண்ணன் வாசிச்ச பீலிங்ஸில அப்பிடியே எழுதிப்போட்டன்
வாழ்த்துக்கள் அகிலன்
தரம்….
அகிலன் என்ன ஒரு சரளமான எழுத்து நடை சும்மா நேர நிண்டு கதைக்கிற மாதிரி இருந்துது மச்சான் குறைநினைக்காதையுங்கோ அண்ணன் வாசிச்ச பீலிங்ஸில அப்பிடியே எழுதிப்போட்டன்
வாழ்த்துக்கள் அகிலன்
தரம்….
பல இடங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் இந்தப்பதிவில், பதிந்த விதம் சரியான முறையில வடிவம் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். நல்லா எழுதியிருக்கிறியள் அகிலன் தொடங்கினதிலிருந்து முடியும் வரைக்கும் நீங்கள் சொன்ன இடத்தில கூட “கட்” பண்ணாம வாசிச்சு முடிச்சன் தெரியுமோ ஒரு வேளை ஊர்த்தமிழில் இருப்பதும் அதற்கொரு காரணமாக இருக்கலாம்…
நன்றி…
ஒவ்வொரு கிழமையும் மலேசியாக்கு போய் வந்திருக்கிறோம் என்று சொல்லுமளவுக்கு மலேரியா வாட்டி எடுத்த காலம் அது..
இப்பவும் வன்னிக்கு போக போறன் என்றால் அம்மா கேட்கிற முதல் கேள்வி, “ஏன் மலேரியாவோட பட்டபாடு மறந்து போச்சோ” என்று தான்.. அந்தளவு வன்னியென்றாலே மலேரியா என்று பதிஞ்சு போயிருக்கு..
ஆனாலும் நான் இருந்த 1 1/2 வருடங்களிலும் ஏலவே வன்னியிலேயே வசித்து வந்தவர்களை இந்த மலேரியா ஒன்றும் செய்யவில்லை.
// இப்படிக் கசப்பான குழிசைகளையும் தேனாமிர்தம் மாதிரி சப்பிச் சாப்பிடுற அதிசயப் பிறவி ஒருத்தன் //
நான் கூட அவைகளை தேனாமிர்தம் மாதிரி சாப்பிடுவேன்.. 🙂
முதலில் ரசித்து சிரித்தபடியேதான் படிக்க ஆரம்பித்தேன்.. ஊர்க்கதை ஆரம்பித்த இடத்தில் கண்ணில் நீர் முட்டிக்கொண்டுவந்துவிட்டது.. பின்னும் சிரிக்க சிரிக்க சோகத்தை சொன்னவிதம்.. கண்ணீரோடு சிரிக்க வைத்தது.. அகிலன் நேரில் நின்று சொல்வது போலத்தான் இருந்தது..
மலேரியா… குளோறோக்குயின்….
ம். மறக்க முடியுமா?
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
மலேரியாப் பாடத்திலிருந்து வன்னி நிறையப் படித்துக்கொண்டது. பின்னர் அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளில் கொலறா வாட்டத் தொடங்கியபோது மிகப்பெரிய பயம் வன்னியைச் சூழ்ந்தது. ஆனால் தமிழீழச் சுகாதார சேவையின் திறமையான செயற்பாட்டால் அது கட்டுப்படுத்தப்பட்டது. கொலறாச் சூறாவளி தொடங்கியபோது மன்னாரில் ஒரு வயோதிபர் இறந்ததைத் தவிர்த்து எந்த அசம்பாவிதமும் வன்னியில் நடைபெறவில்லை என்று நினைக்கிறேன்.
வன்னியில் கொலறாவிலிருந்து மக்களைக் காத்தது ஈழப்போராட்டத்தில் மிகப்பெரிய சாதனை என்று மருத்துவரொருவர் பின்னர் தெரிவித்திருந்தார்.
Hmm… I read blogs on a similar topic, but i never visited your blog. I added it to favorites and i’ll be your constant reader.
generique lasix